பிணையில் வெளிவந்த அநியாயக்கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்ததற்காக மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. ராம்கரில் அநியாயக்கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ள எட்டு குற்றவாளிகளுக்கு மரியாதை செய்ததைத் தொடர்ந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் ஜெயந்த் சின்ஹா.

காரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு அலிமுதின் அன்சாரி எனும் இறைச்சி வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் அக்குற்றவாளிகள்.

”நான் என்ன சொல்ல விரும்பினேனோ அதை டிவிட்டரில் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன், எந்த வகையான வன்முறையையும் நான் ஆதரிக்கவில்லை. எனது செயல் வழியாக அந்த செய்தி தான் உங்களுக்கு வந்து சேர்ந்ததென்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் ஜெயந்த் சின்ஹா.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் அடங்கிய குழு பிதமருக்கு எழுதிய திறந்த கடிதத்தில் அமைச்சரை பதவிநீக்கம் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர். சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அமைச்சரே சட்டத்திற்கு வெளிப்படையாக சவால் விடுவது அறிவுக்குப் புறம்பானது என தங்களது கடிதத்தில் தெரிவித்தனர். மேலும், சுதந்திரப் போராட்டப் புரட்சியாளர்களைப்
போல குற்றவாளிகளுக்கு மரியாதையளித்தது முற்றிலும் எதிர்பாராதது என்றனர்.

அவர்களுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், “அது தான் நமது ஜனநாயகத்தின் அழகு, அனைவருக்கும் தங்களது உரிமைகளை பயன்படுத்தும் சுதந்திரத்தை கொடுக்கிறது,” என்றார். ராம்கர் அநியாயக்கொலை வழக்கு தற்போது நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது விரைவு நீதிமன்றம். அவர்களுள் எட்டு பேரை ஜூன் 29 ஆம் தேதி பிணையில் விடுவித்தது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்.

”முன்பு, தகுதியுள்ள மகனின் தகுதியற்ற தந்தையாக இருந்தேன். தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. இது டிவிட்டர் . எனது மகனின் செயலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இது மேலும் விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்பது எனக்கு தெரியும். உங்களால் வெற்றிபெற முடியாது,” என்று டிவிட்டரில் தனது மகன் ஜெயந்த் சின்ஹாவை விமர்சித்து பதிவிட்டார் யஷ்வந்த் சின்ஹா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here