சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவிடம், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டுள்ள சின்மயானந்த், எனது செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விசாரணையில் ஈடுபட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் நவீன் அரோரா, அவர் மீது முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். நான் எனது செயலுக்காக வருத்தப்படுகிறேன், இதுபற்றி வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

பெண்களுடன் பாலியல் ரீதியில் பேசியது, உடலை மசாஜ் செய்ய சொன்னது உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு எதிராக உள்ள அனைத்து சாட்சிகளும் தீவிரமாக விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சின்மயானந்த் மேற்கொண்ட 200 செல்போன் அழைப்புகளின் பதிவுகளும் கிடைத்துள்ளன. புகார் கூறிய பெண்ணுக்கு அவரது தொலைபேசியில் இருந்து 200 முறை அழைத்து பாலியல் ரீதியில் பேசியுள்ளார். அந்த பதிவுகளும் கிடைத்துள்ளன.

பாலியல் புகாரில் கைதுசெய்யப்பட்ட சுவாமி சின்மயான்ந்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாமி சின்மயானந்த் தனது அறக்கட்டளை சார்பில் சட்டக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் ஓராண்டாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக, சமூக வலைதளத்தில் கடந்த மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஷாஜகான்பூர் காவல் துறையினர் கடந்த மாதம் 27-ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். சின்மயானந்த் மீதான பாலியல் புகாரை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ளது. 

அந்தக் குழு பாலியல் புகார் தொடர்பாக விசாரித்து வருகிறது. அக்குழு சின்மயானந்திடம் கடந்த 13-ஆம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த மாணவி, ஷாஜகான்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் கடந்த 16-ஆம் தேதி வாக்குமூலம் அளித்தார். மேலும், தனது புகாருக்கு ஆதரமாக செல்லிடப்பேசி ஒன்றையும், மின்னணு சேமிப்பக சாதனமான பென்-டிரைவ் ஒன்றையும் அந்த இளம்பெண் சிறப்பு விசாரணைக் குழுவிடம் வழங்கினார்.

ஆசிரமத்தில் சிகிச்சை: உடல்நலக் குறைவு காரணமாக ஷாஜகான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை சின்மயானந்த் அனுமதிக்கப்பட்டார். அவரை லக்னெளவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அங்கு செல்லாமல், ஆயுர்வேத சிகிச்சை பெறப் போவதாகக் கூறி தனது ஆசிரமத்துக்கு சின்மயானந்த் வியாழக்கிழமை திரும்பினார். 

இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் சின்மயானந்தை அவரது ஆசிரமத்தில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர், ஷாஜகான்பூரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தாமதம் ஏதுமில்லை: இது தொடர்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சின்மயானந்தைக் கைது செய்த விவகாரத்தில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இந்தப் புகார் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு மிகவும் கவனத்துடன் விசாரணை நடத்தி வருகிறது. இளம்பெண் அளித்த பென்-டிரைவில் சில விடியோக்கள் இருந்தன. அவை தடயவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் சின்மயானந்த் சிலருக்குப் பணமளித்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதையடுத்தே, அவரையும் அவரிடம் பணம் பெற்ற மூவரையும் கைது செய்துள்ளோம் என்றார்.

வழக்குரைஞர் குற்றச்சாட்டு: சின்மயானந்த் கைது செய்யப்பட்டதையொட்டி, அவரது ஆசிரமத்துக்கு அருகே காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, சின்மயானந்த் கைது செய்யப்பட்டது தொடர்பாக எந்த ஆவணத்தையும் காவல் துறையினர் வழங்கவில்லை என அவர் தரப்பு வழக்குரைஞர் பூஜா சிங் குற்றஞ்சாட்டினார். முன்னதாக, சின்மயானந்தைக் கைது செய்யாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக மாணவி மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here