குறைந்த விலையில் வெங்காயம் : அலைமோதிய மக்கள் கூட்டம் : வீடியோ

0
537

ஆந்திரா மாநில அரசு மலிவு விலையில் விற்பனை செய்யும் வெங்காயத்தை வாங்க அலைமோதிய கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டில் வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் வெங்காய வரத்து நாடு முழுவதும் குறைந்துள்ளது. தமிழகத்துக்கு. 70 லாரிகளில் தினமும் கொண்டு வரப்படும் வெங்காயம், நேற்று வெறும் 30 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. ஆகவே வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயை தொட்டுள்ளது.

தட்டுப்பாடு காரணமாக உயர்ந்துள்ள வெங்காய விலையை கட்டுப்படுத்த, ஏற்றுமதிக்கு தடை, வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது

இதனிடையே, ஆந்திர மாநில அரசு சார்பில் மலிவு விலையில் வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் கிலோ வெங்காயம் ரூ.95க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.25 என மலிவு விலையில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்க ஆந்திர மாநிலம் விழியநகரத்தில் அலை மோதிய மக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக வெங்காய விலை ஏற்றம், தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”நான் வெங்காயமும் பூண்டும் அதிகமாக சாப்பிடுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்தவள் நான்” என்றார்.


இந்நிலையில், ஆந்திராவில் வெங்காயம் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டத்தை நிர்மலா சீதாராமனின் பேச்சுடன் ஒப்பிட்டு,”நீங்கள் வெங்காயம் சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால், மலிவு விலையில் விற்கப்படும் ஒரு கிலோ வெங்காயத்தை வாங்க சாமானிய மக்கள் படும் அவதியை நீங்கள் பார்க்க வேண்டும்” என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக, வெங்காய விலை உயர்வை கண்டித்து முன்னாள் எம்.பி.யும், ஜன அதிகார கட்சி நிறுவனருமான பப்பு யாதவ், பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு எதிரே போராட்டம் நடத்தினார். அப்போது, ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35க்கு விற்று பப்பு யாதவ் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here