2019 ஆண்டு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு மட்டுமே எஞ்சி இருக்கிறது. யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்று மே 23ஆம் தேதி தெரியவரும். இந்நிலையில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம், ஒரு சரிவை சந்திக்கும் என்று தெரிகிறது.

அதற்கான அறிகுறிகள் எங்கும் உள்ளன. 18 மாதங்களில் கடந்த டிசம்பருக்கு பிந்தைய மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. கார்கள் மற்றும் SUVக்களின் விற்பனை, ட்ராக்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் குறைந்துள்ளன.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின்படி, 334 நிறுவனங்களின் (வங்கிகள் மற்றும் நிதிநிலைகளை தவிர்த்து) நிகர லாபம் 18 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல, உலகில் வேகமாக வளர்ந்து வரும் விமான சந்தையும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மார்ச் மாதத்தில் பயணிகள் விகிதத்தில் சரிவை சந்தித்தது. இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் மார்ச் மாத காலாண்டின் வளர்ச்சி வெறும் 7 சதவீதம்தான்.

இந்தியாவின் நுகர்வோர் திறன் குறைந்துவிட்டதா என்று வியந்து, செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த பொருளாதார சரிவு தாம் முதலில் எண்ணியதை விட தீவிரமாக இருப்பதாக கூறுகிறார் உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியருமான கௌஷிக் பாசு. இதற்கு பிறகு இதனை புறக்கணிக்க முடியாத அளவிற்கு ஆதாரங்கள் வந்துகொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை விவசாயிகளை கடுமையாக தாக்கியதும் ஒரு காரணம் என்று அவர் நம்புகிறார். 80 சதவீதம் பணத்தாள்களைக் கொண்டு இயங்கிவந்த இந்திய பொருளாதாரத்தில் இருந்து அவற்றை நீக்கி நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது கொடூரமான மற்றும் பெரும் அதிர்ச்சியை அளித்த நடவடிக்கை என்று பிரதமர் மோதியின் அலோசகர் ஒருவரே கூறியிருந்தார்.

பேராசிரியர் பாசுவின் கூற்றுப்படி, மற்றுமொரு பெரும் ஏமாற்றம் தந்தது ஏற்றுமதிகள். “கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி வளர்ச்சியே இருக்கவில்லை. குறைந்த வருமானம் கொண்ட பொருளாதாரம் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, ஏற்றுமதி துறையின் வளர்ச்சிக்கு ஒரு சிறிய தொழில்முறை கொள்கை – பணவியல் மற்றும் நுண் ஊக்கங்கள் கொண்ட கொள்கை வேண்டும். இது போன்ற ஒன்றுக்கு சரியான கொள்கை வகுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது” என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் நுகர்வோர் திறனில் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்று ஏதுமில்லாமல் அப்படியே இருக்கலாம் என்று நம்புகிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் ரதின் ராய்.

முதல் 10 கோடி குடிமக்களால் இந்தியாவின் வேகமான வளர்ச்சி முடிவெடுக்கப்படுகிறதாக ராய் நம்புகிறார். இவர்கள் என்ன வாங்குகிறார்கள் என்பது முக்கிய காரணிகளாக அமைகின்றன. கார்கள், இரு சக்கர வாகனங்கள், ஏசி மற்றும் பல என வீட்டுக்கு தேவையான பொருட்களை அடுத்து, இவர்கள் இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்களுக்கு சென்றுவிட்டார்கள். அதாவது இத்தாலிய மாடல் சமையலறைகள், விடுமுறைகளில் வெளிநாடு செல்வது போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம்.

பெரும்பாலான இந்தியர்களின் தேவை சத்தான உணவு, மலிவு விலையில் ஆடைகள் மற்றும் வீடுகள், மருந்து மற்றும் கல்வி. இவைதான் பொருளாதார வளர்ச்சியின் முன்னணி காரணிகளாக இருக்க வேண்டும்.

“குறைந்தது மக்கள்தொகையின் சரிபாதியினர் இவற்றை மலிவான விலையில் வாங்க முடிந்திருக்க வேண்டும். அப்படியென்றால் அதிகபட்சமாக 50 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்” என்கிறார் ராய்.

அடுத்த பத்தாண்டுகளில் இதனை செய்ய முடியவில்லை என்றால், ‘நடுத்தர வருமான வலை’க்குள் இந்தியா சிக்கிக்கொள்ளும் என்று ராய் நம்புகிறார். இது வேகமான வளர்ச்சியை எளிமையாக எட்ட முடியாமல், மேம்பட்ட பொருளாதாரங்களோடு போட்டியிட முடியாமல் போகும் நிலையாகும்.

இப்படி நடுத்தர வருமான நிலையில் சிக்கிக் கொண்டால், இதில் இருந்து வெளிவருவது கடினமாகும்.

1960களில் நடுத்தர வருமானம் கொண்ட 101 நாடுகளில், 13 நாடுகள் 2008ஆம் ஆண்டு உயர் வருமான நாடுகளாக மாறியதாக உலக வங்கியின் ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த 13 நாடுகளில் மூன்று நாடுகள் மட்டுமே 2.5 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாடுகளாகும்.

இந்தியா குறைந்த தனிநபர் வருமானம் உடைய பொருளாதாரம் கொண்ட நாடாகும். தற்போதைய சூழலில் இந்த வலையில் மாட்டிக் கொள்வது சிக்கலை உண்டாக்கும்.

அடுத்து வரக்கூடிய அரசாங்கத்துக்கு இங்கு அதிக வேலை இருக்கிறது.

Courtesy : bbc