ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது  இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ). 

இதன் மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகியவற்றை 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதன் மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.25 சதவீதத்தில் இருந்து குறைந்து 6 சதவீதமாக இருக்கும்.

 அதேபோல் வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

குறைந்த வட்டியில் கடன்: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. தொழில்முனைவோர், சிறு தொழில்புரிவோர், வீடு, வாகனங்கள் வாங்குவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கும்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here