குர்கான் முஸ்லிம் குடும்பம் மீது தாக்குதல்: “நாங்கள் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்?” – பிபிசியின் கள ஆய்வு

0
351
தில்ஷத்
தில்ஷத்

இந்த வீட்டை காலி செய்துகொண்டு நான் என்னுடைய கிராமத்திற்கு செல்லவுள்ளேன். என்னுடைய குழந்தைகளை அவர்கள் என் கண்ணெதிரே தாக்கியதை நான் நேரடியாக பார்த்தாலும், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் இங்கு தொடர்ந்து வசிக்க விரும்பவில்லை. நான் கடன் வாங்கி இந்த வீட்டை கட்டியிருந்தாலும், அச்சத்தின் காரணமாக நான் இங்கு விரும்பவில்லை” என்று சொல்லும்போதே முகமது சஜித் அழத் தொடங்குகிறார்.

அவருக்கு அருகே அமர்ந்திருக்கும் ஒருவர் சஜித்தின் கண்ணீரை துடைத்து விடுகிறார். சஜித்தின் இடது கையில் கட்டு போடப்பட்டுள்ளதுடன், அவரது கால்களில் தீவிரமான காயங்கள் தெரிகின்றன. இவருக்கு ஏன்? எப்படி? எதற்கு? இந்த நிலை ஏற்பட்டது என்ற கேள்விக்கு அவருக்கே பதில் தெரியவில்லை.

இந்தாண்டு ஹோலி பண்டிகை மார்ச் 21ஆம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் அன்பையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளும் அன்றைய நாளில், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமிலுள்ள பூப்சிங் நகரை சேர்ந்த முகமது சஜித்தின் குடும்பத்தினர் சமூகத்தின் கோரமான முகத்தை சந்தித்தனர்.

இருப்பினும், இந்த வழக்கை இனவாதத்துடன் தொடர்புடையதாக காவல்துறையினர் எடுத்து செல்லவில்லை.

கடந்த மார்ச் 21ஆம் தேதி, மாலை சுமார் 5-5.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், நயகான் பகுதியை சேர்ந்த சுமார் 25-30 பேர் கட்டைகள், கம்பிகளுடன் வந்து தன்னையும், சஜித், சமீர், ஷதாப் உள்ளிட்ட 12 பேரை சரமாரியாக தாக்கியதாக இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்டவரும், சஜித்தின் நெருங்கிய உறவினருமான தில்ஷத் கூறுகிறார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகள் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

அந்த காணொளியில், பலர் ஒரே சமயத்தில் சஜித்தை சரமாரியாக தாக்குவதை போன்றுள்ளது. சஜித்தை காப்பற்ற முயன்ற ஒரு பெண்ணையும், அந்த கும்பல் தாக்குகிறது. அங்கிருந்த மற்ற குழந்தைகள் வீட்டின் கதவை மூடிக்கொண்டு தப்பிப்பதற்கு முயற்சிப்பதை போன்று காட்சிகள் அந்த காணொளியில் காண முடிகிறது.

மறக்க முடியாத நாள்

தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு ஹோலி கொண்டாடுவதற்காக வந்திருந்த 21 வயதான தனிஸ்தா இதுபோன்ற சம்பவம் நடைபெறுமென்று துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். தாக்குதல் நடத்துவதற்கு அந்த கும்பல் வீட்டிற்குள் நுழைந்தபோது அவர் தனது சகோதரின் அலைபேசியை கையில் வைத்திருந்ததால், இந்த நிகழ்வை அப்படியே படமாக்கிவிட்டார்.

“என்னுடைய உறவினர்களை அடிப்பதில் அவர்கள் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நேரத்தில், தாக்குதலை தடுக்க முடியாத நான் அதை காணொளி எடுப்பதே சரி என்று நினைத்து, இரண்டாவது மாடிக்கு ஓடிச்சென்று காணொளி எடுக்க தொடங்கினேன். ஒருகட்டத்தில், நான் காணொளி எடுப்பதை பார்த்த அந்த கும்பல், ‘அலைபேசியோடு சேர்த்து அந்த பொண்ணையும் தூக்கி போடுங்கள்’ என்று கத்தினர். ஆனால், அவர்கள் என்னை கொன்றாலும் இந்த காணொளியை பத்திரபடுத்துவதிலேயே கவனம் செலுத்தினேன். அருகிலிருந்த செங்கல் அருகே அலைபேசியை ஒளித்து வைத்ததும் அங்கு வந்த தாக்குதலாளிகள், நான் இருக்கும் அறையின் கதவை உடைக்க எடுத்த முயற்சி பலனளிக்காமல் போனது” என்று தனிஸ்தா கூறுகிறார்.

உத்தரபிரதேசத்தின் பாகுபட் மாவட்டத்தை சேர்ந்த முகமது சஜித், வேலைவாய்ப்பை தேடி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் குருகிராமுக்கு வந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளை நகர்ப்புற பகுதியில் கழித்த பிறகு, தனக்கு இப்படி ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படும் என்று அவர் துளியும் நினைத்து பார்க்கவில்லை.

‘நீ ஏன் இங்கு விளையாடுகிறாய்? பாகிஸ்தானுக்கு சென்று விளையாடு’

இந்த கோரமான சம்பவம் குறித்து குருகிராம் காவல்துறையின் ஆணையர் முகமது அகிலை பிபிசி தொடர்பு கொண்டபோது, “இந்த முழு பிரச்சனையும் கிரிக்கெட்டிலிருந்துதான் ஆரம்பித்தது. முதலில் தொடங்கிய வாக்குவாதம் ஒருகட்டத்தில் அடிதடியாக மாறியது. இருதரப்பினரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன், ஒருவரை கைது செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தில்ஷத் என்பவர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது புகார் அளித்துள்ளதாக குருகிராம் காவல்துறையின் தகவல் தொடர்புத்துறை அதிகாரியான சுபாஷ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளியை மையாக கொண்டு விசாரணை நடத்தியதில், மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய தண்டனை சட்டம் 147 (கலகத்தில் ஈடுபடுதல்), 148 (சட்டவிரோதமான கூட்டம்), 452 (அத்துமீறல்), 506 (அச்சுறுத்தல் விளைவித்தல்), 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம். எனினும், இந்த சம்பவத்திற்கும், வகுப்புவாதத்திற்கும் சம்பந்தம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இது இருவேறு குழுக்களுக்கிடையே நடைபெற்ற சண்டை மட்டுமே” என்று ஹரியானாவின் காவல்துறை ஆணையர் மஜோத் யாதவ் கூறினார்.

இருப்பினும், இந்த சம்பவத்தின் காரணமாக காவல்துறையினர் கூறும் விளக்கத்துக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறும் விளக்கத்திற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.

தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு சஜித்தின் வீடு
தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு சஜித்தின் வீடு

“அந்த சமயத்தில் எங்களது வீட்டில் மொத்தம் 17 பேர் இருந்தோம். நாங்களனைவரும் இணைந்து வீட்டின் வாசலில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், எங்களை பார்த்து, ‘முஸ்லிம்களாகிய நீங்கள் இங்கு ஏன் விளையாடுகிறீர்கள்?, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுங்கள்’ என்று கூறியவுடன், நாங்கள் எங்களது மட்டையையும், பந்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டோம். அதன் பிறகு அங்கு வந்த எங்களின் மாமா சஜித், என்ன நடந்தது என்று கேட்டார். உடனே அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஒருவர், சஜித்தை அறைந்ததுடன், யார் நீ? உன்னுடைய வீடு எங்கிருக்கிறது? என்று கேட்டனர்” என்று கூறுகிறார் தில்ஷத்.

“அதற்கு சஜித், நாங்கள் இங்குதான் வசிக்கிறோம் என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு, இரண்டு இருசக்கர வாகனங்களில் ஆறு பேர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவன், என்னுடைய மாமாவை காண்பித்து, ‘இவன் தான்’ என்று கூறினான். அவன் கூறி முடித்ததும், அடுத்த நொடியே அனைவரும் எங்களை ஒருசேர அடிக்க தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு பின்பு இருந்த இன்னும் சிலர் எங்களது வீட்டின் மீது கற்களை வீசத் தொடங்கினார்கள்.”

சம்பவத்தை மறக்க முடியவில்லை

“அவர்கள் வீட்டின் இரும்பு கதவை தொடர்ந்து தள்ளியும், உள்ளே வர முடியாததால், ஜன்னலின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டின் மாடிக்கு வந்தனர். பலர் ஒரே சமயத்தில் என்னை கட்டை மற்றும் கம்பியால் தாக்கியதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சஜித் கேள்வி எழுப்புகிறார்.

இந்த சம்பவம் குறித்து நான் காவல்துறையில் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து, அதை திரும்ப பெறுமாறும், பிரச்சனையை நமக்குளேயே சரிசெய்துகொள்லாம் என்றும், அலைபேசி வழியாக எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். காவல்துறை எங்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், நான் எனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வேன்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

காயம் ஆறாத குழந்தை

சஜித் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு விளையாடி கொண்டிருந்த பெண் குழந்தைக்கு ஏற்பட்ட இரத்த காயம் இன்னும் ஆறாமல் இருந்தது. காயம் குறித்து அந்த குழந்தையிடம் கேட்டபோது, கூட்டமாக வந்தவர்கள் எங்கள் வீட்டிலுள்ள எல்லாரையும், என்னையும் அடித்தார்கள் என்றும், அவர்கள் மீண்டும் வருவார்களா என்றும் கேள்வி எழுப்பியது.

‘முஸ்லிம் சார்ந்த விஷமிகளை இங்கு வாழ விடமாட்டோம்’

இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை மகேஷ் என்ற ஒருவர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரிடம் பேசுவதற்காக அருகிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது, மகேஷின் சகோதரி மட்டுமே இருந்தார். அவர் இதுதொடர்பாக பேசுவதற்கு மறுப்பு தெரிவிக்கவே, நாங்கள் அருகிலுள்ள வீடுகளை சேர்ந்தவர்களை அணுகினோம்.

முதலில் பேசுவதற்கு மறுத்த அவர்கள், பின்பு தங்களது பெயரை வெளியிட கூடாது என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தனர்.

“முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தாலும், இதுவரை எவ்வித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. இந்த விஷமிகள் தற்போது புதியதாக ஊருக்குள் நுழைந்துள்ளார்கள். கடந்த சில நாட்களாக எங்கு எந்த வீட்டிலும் சமைக்கப்படுவதில்லை, குழந்தைகள் பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருசில நாட்களில் கூடவுள்ள ஊர் பஞ்சாயத்தில், இங்குள்ள அனைவரும் நடந்ததை விளக்குவார்கள். முஸ்லிம் மதத்தை சேர்ந்த விஷமிகளை நாங்கள் எங்களது ஊருக்குள் இருக்க அனுமதிக்கமாட்டோம். முஸ்லிம்களின் வீடுகளில் ஆயுதங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் அவர்கள் தொடர்ந்து வசிக்க விரும்பினால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர்களை ஊரைவிட்டு விலக்கி வைப்போம்” என்று அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறினார்.

முரண்பட்ட கருத்துகள்

உள்ளூர் மக்கள்

சஜித்தின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாலையில் விளையாடி கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் ஒன்று அவர்களின் மீது மோதியதில், அவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. பிறகு, இருதரப்பினருக்கிடையே நடந்த சண்டையை நிறுத்துவதற்கு முற்பட்ட ஒரு முதியவரை சஜித்தின் குடும்பத்தினர் கிரிக்கெட் மட்டையினால் தாக்கினர். இந்த சம்பவத்தை அறிந்த அந்த ஊரிலுள்ள இளைஞர்கள் கோபம் கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்று நயகான் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞர் கூறுகிறார்.

குஜ்ஜார் என்னும் வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கும் இந்த பகுதியில், சிறுவர்களுக்கிடையே நடந்த பிரச்சனையை இந்து-முஸ்லிம் வகுப்புவாத பிரச்சனையாக சாயம் பூசுவதற்கு முற்படுகின்றனர் என்பதே அந்த பகுதியை சேர்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

“இந்த நாட்டில் இந்துக்கள் எல்லாம் துரோகிகள், முஸ்லிம்கள் கூறுவது மட்டும்தான் சரி என்று கருதும் சூழ்நிலை உள்ளது. நாட்டில் இந்துக்களின் குரல் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது” என்று அந்த பகுதியை சேர்ந்த லகன் சிங் கூறுகிறார்.

இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருவதால், யார் இந்த சம்பவத்திற்கு மத சாயம் பூசுகின்றனர் என்பதை யூகிப்பது கடினமாக உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கருத்தையும், காவல்துறையினர் மற்றொரு கருத்தையும் தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பான காணொளியை பார்க்கும்போது, இதுபோன்ற சம்பவங்கள் எப்போது இந்தியாவில் முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுகிறது.

https://www.bbc.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here