கும்பல் கொலை, ஆணவக் கொலையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை ; மசோதா தாக்கல் செய்த ராஜஸ்தான் அரசு

0
388


 ராஜஸ்தான் மாநிலத்தில் கும்பல் கொலை, ஆணவக் கொலையைத் தடுப்பதற்கான இரு மசோதாக்களை அந்த மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அந்த மாநில சட்டப் பேரவை விவகாரத் துறை அமைச்சர் சாந்த் தாரிவால், இந்த மசோதாக்களை பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். இதன்படி கும்பல் கொலையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறைத் தண்டனை அளிக்க முடியும்.


பசுவதை தடுப்பு என்ற பெயரில் கும்பலாக சேர்ந்து கொலைச் சம்பவங்களில் ஈடுபடுவது, ஜாதி, மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்களை ஆணவக் கொலை செய்வது போன்ற நிகழ்வுகள் தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானிலும் கும்பல் கொலை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்தன. மேலும், ஆணவக் கொலைகள் குறித்த குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு சட்டம் கொண்டு வரும் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இச்சட்டப்படி கும்பல் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க முடியும். கும்பலாக சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு காயத்தை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இணைந்து தாக்குதல் நடத்தினால் அது கும்பல் தாக்குதல் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. மதம், ஜாதி, இனம், மொழி, பிறந்த பகுதி, உணவுப் பழக்கம், பாலின அடையாளம், அரசியல் விரோதம் உள்ளிட்டவை காரணமாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கும் இந்த தண்டனை விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


கும்பல் கொலை தாக்குதல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதனை நிறைவேற்றும் வகையிலும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here