கும்பகோண பள்ளித் தீ விபத்தின் நினைவு தினம்

0
326

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தும் ஆறாத ரணத்துடன் வாழ்கின்றனர் அக்குழந்தைகளின் பெற்றோர்கள்..

2004 இதேநாளில், தாய், தந்தையரின் விரலைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளிக்குச் சென்றன பால் மணம் மாறாத பிஞ்சு நெஞ்சங்கள். பள்ளியில் மதிய உணவு தயாரித்தபோது சமையலறையின் கூரையில் பற்றிய தீ, வகுப்பறைகளுக்கு மேல் போடப்பட்டிருந்த கீற்றுக் கூரைகளிலும் பரவியது.

தீயின் கோரப் பிடியில் சிக்கிய குழந்தைகளின் அலறல் கேட்போரைக் கலங்கடித்தன. சாலையில் சென்றவர்கள், அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடியும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. சற்று நேரத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. கரிக்கட்டைகளாகக் கிடந்த குழந்தைகளின் சடலங்களைக் கண்ட கதறல் கும்பகோணம் முழுவதும் எதிரொலித்தது.

இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 15 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் விழிகளில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் பெற்றோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒரு சிறு கவனக்குறைவு, சில நிமிடங்களில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாகிப் போனது இந்த சம்பவம்.

தீ விபத்தின் 15-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பள்ளியின் முன்பு குழந்தைகளின் படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. குழந்தைகளின் நினைவிடங்களிலும் அவர்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here