கர்நாடகாவில் பாஜக ஆபரேசன் கமலா என்ற திட்டத்தை செயல்படுத்தி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு பண ஆசைக்காட்டி , காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசை கவிழ்த்து ஆட்சி அமைத்தது.

கூட்டத்தில் பேசும்  முதல்வர் எடியூரப்பா, பாஜக தலைவர்கள் மீதான தனது அதிருப்தியை மிகவும் கோபமாக வெளிப்படுத்தியுள்ள காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை வெளியாகி, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

7 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளிக் காட்சியில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் லட்சுமண்சவதி பேசியிருந்ததற்கு தனது வருத்தத்தை தெரிவித்து முதல்வர் எடியூரப்பா பேசியிருக்கிறார்.

அந்த காணொளியில் முதல்வர் எடியூரப்பா பேசியது: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களால் தான் கர்நாடகத்தில் பாஜக அரசு அமைந்துள்ளது. ஆனால், அவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளதை நான் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லை. லட்சுமண்சவதி உள்ளிட்ட சில பாஜகவினர் பேசியிருக்கும் தொனியை கவனித்தால், பாஜக அரசை காப்பாற்றும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் என் மனது காயமடைந்துள்ளது.

மஜத, காங்கிரஸ் கட்சிகள் மீது அதிருப்தி அடைந்திருந்த தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 17 எம்.எல்.ஏ.க்களையும் நம்பவைத்து குற்றம் இழைத்துவிட்டதாக உணர்கிறேன். 17 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய முடிவை நானோ, கர்நாடகத்தைச் சேர்ந்த தலைவர்களோ எடுக்கவில்லை. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேரடியாக இந்த விவகாரத்தை கையாண்டதோடு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு வரவழைத்து தங்கவைக்க ஏற்பாடு செய்திருந்தார். தொகுதிமக்கள், குடும்பத்தினரை விட்டுவிட்டு 2-3 மாதங்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியிருந்தது உங்களுக்கு தெரியாதா? இதை குறைத்து மதிப்பிட முடியுமா? நம்மை நம்பிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முட்டாள்கள் ஆக்கப்பட்டுள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக உங்களில் (பாஜக நிர்வாகிகள்) ஒருவரும் பேசவில்லை.

நான் முதல்வர் பதவிக்காக ஆசைப்படவில்லை. இரண்டு, மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தாகிவிட்டது. மாநில மக்களுக்கு நல்லது செய்வதற்கு பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நானோ, கட்சியின் மாநிலத் தலைவரோ எந்த முடிவும் எடுக்க முடியாது. இதுகுறித்து கட்சிமேலிடம் தான் முடிவுசெய்ய வேண்டும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் வெற்றிபெற வைப்பதில் உள்ள தடங்கலை சொல்லி இருந்தால் கூட நான் இந்தளவுக்கு வருந்தியிருக்க மாட்டேன். ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பேசுவதன் மூலம் யாரை திருப்திப்படுத்த பேசியிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை என அதில் பேசியுள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பூதாகரமாகியுள்ளது.

இந்த வீடியோ கர்நாடக அரசியலில் மீண்டும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகுதி நீக்கம்  எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் இந்த வீடியோவை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சியைக் கவிழ்க அம்மாநில பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. லோக்சபா  தேர்தலுக்கு முன்னதாக `ஆபரேஷன் கமலா’ என்பதன் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை தங்கள் வசம் இழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.  அதையடூத்து,  காங்கிரஸ் மற்றும் ம.ஜ.தவைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ-க்கள்  சட்டமன்றச் செயலரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்து ஆட்சியை கவிழ்த்தனர்.

அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும், தனி விமானம் மூலம், பாஜக நிர்வாகிகள்  மும்பைக்கு அழைத்துச் சென்று  அங்குள்ள ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக எழுந்த நிலையில், அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here