குடியுரிமை திருத்த மசோதா; வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம்; செல்ஃபோன் இண்டெர்நெட் சேவையை முடக்கிய அரசு

0
242

மக்களவையில், நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.  12 மணி நேர முழு அடைப்பு போராட்டம், வடகிழக்கு மாநில மாணவர்களால் நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமைசட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஏற்கனவே மோடி அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்த நிலையில், அது முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதன்படி,  பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் வகை செய்கிறது.

இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மசோதா குறித்து பேசிய அமித்ஷா,  குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல  என்றும்,  மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா  நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சோந்த மாணவர்கள் அமைப்புகள் இணைந்து 11 மணி நேரம் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களிலும் படையினரைக் குவித்திருக்கிறது அரசு.

அஸ்ஸாம் மாநிலத்தில்  உள்ளூர்வாசிகள் திப்ருகரில், ஜோராபாத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம், க்ரிஷக் முக்தி சங்ராம் சமிதி, அனைத்து அருணாச்சலப்பிரதேச மாணவர் சங்கம், காசி மாணவர் சங்கம் மற்றும் நாகா மாணவர் கூட்டமைப்பு ஆகியவை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். இவர்கள் தவிர இடது சாரி அமைப்புகளான SFI, DYFI, AIDWA, AISF, AISA மற்றும் IPTA ஆகியவை அசாமில் 12 மணிநேர பந்த்-ற்கு அழைப்பு விடுத்துள்ளன. அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகம், திப்ருகர் பல்கலைக்கழகம் ஆகியவை தங்களது தேர்வுகளைத் தள்ளி வைத்துள்ளன.திரிபுராவில் 48 மணி நேரம் செல்ஃபோன் இண்டெர்நெட் சேவையை முடக்கி வைத்திருக்கிறது அரசு . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here