குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பு இல்லை – நிர்மலா சீதாராமன்

0
194

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம், அது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.  

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து சென்னை திநகரில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து பேசினார்.  அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் கூறுவது சட்டத்திற்கு எதிரானது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம், அது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. இந்த சட்டத்திற்கு எதிராக மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் இல்லை. 

1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி யாரையும் கொந்தளிப்புக்குள்ளாக்க வேண்டாம். இந்த சட்டத்தால் குடியுரிமை பறி போகும் என யார் கருதுகிறார்களோ அவர்களிடம் தெளிவாக விளக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய இரண்டிற்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. 

1964- 2008 ஆம் ஆண்டு வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 வங்கதேச மக்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

2014 வரை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. 2016 முதல் 2018 வரை 391 ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் மற்றும் 1595 பாகிஸ்தானியர்களுக்கு  இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தான் அட்னான் சாமிக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது ஒரு எடுத்துக்காட்டு. அதுபோன்று வங்கதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மற்றொரு உதாரணம். இது எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்பதை நிரூபிக்கிறது என்று கூறினார்.

மேலும், இலங்கை, வங்கதேச அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. அஸ்ஸாமில் அமல்படுத்தப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படாது. அது நீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கிறது என நிர்மலா கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here