குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார வாகனத்திற்கு இடமில்லை – மத்திய அரசு

0
360

டெல்லியில் நடக்கவிருக்கும் குடியரசு தின அணி வகுப்பில் மேற்கு வங்காள அலங்கார வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

டெல்லியில் குடியரசு தின விழா மிக பிரமாண்டமாக நடத்தப்படும். வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்த விழாவில் இந்தியாவின் கலாச்சார சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் அணி வகுப்பு நடைபெறும்.

குடியரசு தின விழாவில் ஜனாதிபதி கொடியேற்றி முடித்த பிறகு டெல்லி ராஜ பாதையில் அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெறும். மாநில அரசுகள், அமைச்சகம் சார்பில் அலங்கார ஊர்திகள் இதில் பங்கேற்கும்.

இந்த ஆண்டு மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார வாகனத்திற்கு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. அது போல மத்திய அமைச்சகங்களும் 24 வகையான அலங்கார வாகனத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தன.

மொத்தம் 56 அலங்கார வாகனம் பரிந்துரையில் எந்தெந்த மாநிலங்களின் அலங்கார  வாகனத்திற்கு அனுமதிகொடுப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்தது. இதற்காக அதிகாரிகள் 5 தடவை கூடி விவாதித்தனர்.

அப்போது 22 அலங்கார வாகனத்திற்கு மட்டும் அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் 16 வாகனங்கள் மாநிலங்கள் சார்பில் பங்கேற்கவும் 6 வாகனங்கள்
அமைச்சகங்கள் சார்பில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள அலங்கார வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க அலங்கார வாகனத்தில் அந்த மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்தே மேற்கு வங்க அலங்கார வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்காளத்தின் அலங்கார வாகனத்தை
புறக்கணித்து இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகதாராய் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட்டு சேர்ந்து மேற்கு வங்காளத்துக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here