5 மாநிலத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பதன் மூலம், விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்குள் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

கடந்த 2017-ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் மீராகுமாரை 65-க்கு 35 என்ற விகிதத்தில் வீழ்த்தி வென்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும்.

வாக்குகளின் மதிப்பைப் பொருத்தவரை, எம்.பி-களின் வாக்குகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கிற்கும் வித்தியாசம் உண்டு.  எம்.பி.க்களின் ஒரு வாக்கு, 708 வாக்குகளுக்குச் சமம், அதேநேரத்தில் ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுக்கு வித்தியாசம் உண்டு.

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு வாக்கும் 176 வாக்குகளுக்கு சமம், ஆகமொத்தம் 41,484 வாக்குகள், இதுபோல், சிறிய மாநிலமான சிக்கிமின் எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பு, 8 மட்டுமே ஆகும். இவ்வாறாக இந்தியாவில் மொத்தம் 776 எம்.பி.களும் 4 ஆயிரத்து 120 எம்எல்ஏ-க்களுமாக மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் வாக்களிக்க வேண்டும். மொத்தத்தில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 வாக்குகள் ஆகும்.

இந்த பின்னணியில் 5 மாநிலத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொள்ள கூடுதல் பலத்தைத் தந்துள்ளது.

உதாரணத்திற்கு உத்தராகண்டில் மொத்த வாக்குகள் மதிப்பு 4480, மணிப்பூரில் 1080 மற்றும் கோவாவில் 800 ஆக இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நாட்டிலேயே அதிக அளவாக மொத்தம் 83 ஆயிரத்து 824 வாக்குகள் உள்ளதால் பாஜக-வின் வெற்றி குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

இல்லையேல், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் மற்றும் முறுக்கிக் கொண்டு நிற்கும் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகரராவ் போன்றோரின் உதவியை நாட வேண்டியிருந்திருக்கும்,

இந்தத் தேர்தலில் சரத் பவாரையோ, பிகாரின் நிதிஷ் குமாரையோ முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன. ஆனால் நாட்டிலேயே மிக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.

இதனால், அக்கூட்டணி மனது வைக்கும் நபரே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here