பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு (19), இந்துத்துவா கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இந்துத்துவா கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. பில்கிஸ் பானுவின் மூன்றரை வயது பெண் குழந்தையையும் அந்தக் கும்பல் கொலை செய்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 18 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் 11 பேரை குற்றவாளிகள் என்றும், ஐந்து போலீசார் மற்றும் அரசு மருத்துவர்கள் இருவரை விடுவித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டில், விடுவிக்கப்பட்ட ஐந்து போலீசார் மற்றும் இரண்டு மருத்துவர்களையும் சேர்த்து குற்றவாளிகள் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையும் மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதனையடுத்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு, தனக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

supreme

இதுதொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு மீது கடந்த அக்.23ஆம் தேதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து போலீசார் மற்றும் அரசு மருத்துவர்கள் இருவருக்கும் மீண்டும் அரசுப் பணியில் சேர்த்துக்கொண்டது ஏன் எனவும், அவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் குஜராத் மாநில அரசு அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை. இதன் பின்னர், நவம்பர் மாதத்திலும் இதேபோன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அப்போதும் குஜராத் மாநில அரசு அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஆறு வாரங்களுக்குள் குஜராத் மாநில அரசு இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இதுவே கடைசி காலக்கெடு என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்