குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் ஆகியோர் மீது மகாராஷ்டிரா மாநில புனே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள கோரேகான் என்ற இடத்தில், கடந்த 1818ஆம் ஆண்டு, உயர் ஜாதியினருக்கு எதிராக நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் வெற்றிபெற்றனர். இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஜன.1ஆம் தேதி, தலித் சமூகத்தினர்கள் போர் வெற்றிதினமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பீமா-கோரேகான் போரின் 200வது வெற்றிதினத்தை முன்னிட்டு, கடந்த டிச.31ஆம் தேதியன்று புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் என்னும் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதனையடுத்து ஜன.1ஆம் தேதி நடைபெற்ற வெற்றிக்கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் நடத்திய வன்முறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இதனால் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

gujarat-1

குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களுக்கும் பரவின

மேலும், தலித்துகளின் போராட்டம் குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கும் பரவின. மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற முழுஅடைப்புப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஜிக்னேஷ், உமர் காலித் மீது வழக்குப் பதிவு

இந்நிலையில், இரு சமூகத்தினருக்கிடையே வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசியதாக குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் ஆகியோர் மீது மகாராஷ்டிரா மாநில புனே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (a), 505 , 117 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

21ஆம் நூற்றாண்டின் சிறந்த நடிகர்

இதனிடையே ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில், 21ஆம் நூற்றாண்டுக்கான சிறந்த நடிகர் இந்தியாவிலிருந்து வர வாய்ப்பிருப்பதாக நாஸ்ட்ரடாம்ஸ் கணித்திருப்பதாக விமர்சித்துள்ளார். இதனுடன் பிரதமர் மோடி தலித் மக்களின் மீதான தாக்குதல் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் விதமாக பேசும் வீடியோவொன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்