குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

அரசு எந்திரமே மதவெறிக் கருவியாக மாற்றப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்ற ஒரு போலீஸ் அதிகாரி.

0
2468

எம்.கண்ணன்

‘குஜராத் திரைக்குப்’ பின்னால் என்கிற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் வெளியீட்டு விழா ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கோவையில் நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தி.மணி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன் வரவேற்புரையாற்றினார். இந்நூல் தற்போது வெளியிட வேண்டிய அவசியம் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் துவக்கிவைத்து உரையாற்றினார்.
எழுத்தாளர் முருகவேல் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் நூலை வெளியிட, கோவை மாநகர முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம், சப்தகிரி போர்வெல் உரிமையாளர் கே.எம்.சந்திரன், தமுஎகச மு.பரமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல் வெளியிட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பாரதி புத்தகாலய பொதுமேலாளர் க.நாகராஜன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.
அரங்கம் நிறைந்து வழிந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் அரங்கத்தில் கொண்டுவந்திருந்த ஐநூறு புத்தகங்களும் விழா துவங்கிய நிலையிலேயே விற்றுத்தீர்ந்தது. மேலும், இருநூறு புத்தகங்களுக்கான முன்தொகையை வாசகர்கள் பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர்களிடம் அளித்துச் சென்றனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் துணிச்சலான காவல்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமாரின் அருகில் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நூல் வெளியீடு விழா நடைபெற்ற கோவை காந்திபுரம் அருகே உள்ள கமலம் துரைச்சாமி திருமண மண்டப உரிமையாளருக்கு மத்திய காவல்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்தனர். உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும் எப்படிக் கொடுக்கலாம் என மண்டப உரிமையாளரை மிரட்டினர். விழாவிற்கு முனனதாக மண்டபத்திற்கு வந்த பாஜகவைச் சேர்ந்த கும்பல் ஒன்று விழாக்குழுவினரை மிரட்டும் விதமாக பேனர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களை புகைப்படம் எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு இயந்திரம் மதவெறியர்களின் கைக்குச் சென்றால் என்ன ஆகும் என்பதற்கு ஓர் உதாரணம்தான் 2002 குஜராத் கலவரம். பச்சிளம் குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மிகக் கொடூரமாக வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. சொத்துகள் முழுவதும் சூறையாடப்பட்டது. 203 தர்க்காக்கள், 205 மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் தீ அணையாமல் பற்றிப் படர்வதற்கு பெட்ரோலை விநியோகம் செய்தவர்கள் காவல்துறையினர். மொத்தத்தில் சுமார் 2 ஆயிரம் பேரை துடிக்க துடிக்க இந்து மதவெறிக்கு பலிகொடுத்து குஜராத் மாநிலம் இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறது.
இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் ஒரு மதவெறி பிடித்த அரசு; நீதி, நிர்வாகம், காவல்துறை, ஊடகம் என முழு அரசு இயந்திரத்தையும் எந்தளவிற்கு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் படுகொலைகளை அரங்கேற்றும். அதனை எப்படியெல்லாம் அடிச்சுவடு தெரியாமல் அழித்தொழிக்கும் என்பதற்கு குஜராத் மிகப்பெரிய சாட்சியாக மாறியிருக்கிறது. அதனை அரசு இயந்திரத்தின் உயர்பீடங்களில் ஒன்றான காவல்துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்து பார்த்துப் பதறித் துடித்ததை விவரிக்கிறார் ஸ்ரீகுமார் ஐபிஎஸ். தனிமனிதனாக, நேர்மையான அதிகாரியாக அதனை எப்படியெல்லாம் தடுக்க முடியும் என போராடுகிறார். மதவெறியின் கோரப்பற்கள் எப்படியெல்லாம் தாண்டவம் ஆடின, இப்போதும் எப்படி ரத்தவெறி பிடித்து அலைகிறது என்பதை விளக்குகிறார். மனம் போகிற போக்கில் அல்ல, உரிய சான்றுகளோடு அடுக்குகிறார். நீதிக்காக உயிரைத் துச்சமென மதித்து எப்படி நெருப்பாற்றில் நீந்துகிறார் என்பதுதான் ” குஜராத் திரைக்கு பின்னால்… நூலின் சாராம்சம்…

ஆர்.பி.ஸ்ரீகுமார் ஐபிஎஸ்..

கேரள மாநிலத்தில் பிறந்து படித்து இந்திய காவல் பணியில் தேர்ச்சி பெற்று குஜராத்தில் பிரிவில் பணியில் சேர்கிறார். 7 மாவட்டங்களில் எஸ்பியாகவும், குஜராத் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். எங்குமே அதிகபட்சம் 10 முதல் 11 மாதங்கள் மட்டுமே பணி. அடுத்தடுத்து தூக்கியடிப்பதும் அதனை எதிர்கொண்டு களம் காண்பதுமே ஸ்ரீகுமாருக்கு வாடிக்கை. அதிகார வர்க்கத்திடம் நேர்மைக்குக் கிடைக்கும் பரிசு இதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும். அதன்பின் 13 ஆண்டுகள் மத்திய உளவுத்துறையில் பணியாற்றுகிறார்.. 2000ம் ஆண்டில் ஜூலையில் மீண்டும் குஜராத் காவல் பணிக்குத் திரும்புகிறார். உடனே கூடுதல் காவல்துறைத் தலைவர் (ஏடிஜிபி) பதவி உயர்வு கிடைக்கிறது. குஜராத் கலவரம் நடைபெற்ற 2002ல் பிப்ரவரியில் ஆயுதப்படை பிரிவின் கூடுதல் டிஜிபியாக இருக்கிறார்.

கலவரம்

2002 பிப்ரவரி 27 அன்று அயோத்தியில் விஎச்பி ஏற்பாடு செய்திருந்த கரசேவையில் ஈடுபட்டுவிட்டு ரயிலில் ஒரு கும்பல் குஜராத் திரும்புகிறது. அது அயோத்தியில் துவங்கிவரும் வழியெல்லாம் கடைகளை சூறையாடுகிறது. இது குறித்த தகவல்கள் காவல்துறைக்கு உடனுக்குடன் கிடைக்கிறது. கோத்ரா ரயில் நிலையம் வந்ததும் அந்தக் கும்பல் வந்த ரயில் பெட்டி எஸ் 6 பற்றி எரிகிறது. 58 பேர் உயிரோடு எரிந்து மடிகின்றனர். உடனே மோடி கோத்ரா செல்கிறார். அன்று மாலையே விஎச்பி பந்திற்கு அழைப்பு விடுக்கிறது. எரிக்கப்பட்டவர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருந்த போதிலும் சம்பந்தமே இல்லாமல் விஎச்பி தலைவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு, அகமதாபாத்தில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அன்று மாலை கோத்ராவில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் மோடி உடனே அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்துகிறார். அதில் ” இந்துக்களுக்கு அவர்கள் கோபத்தை முழுமையாகக் காட்ட அனுமதிக்க வேண்டும். கலவரத்தின்போது வழக்கமாக இருபுறமும் சரிக்குச் சமமாக கைதுசெய்வது போல் இப்போது கைது செய்யக் கூடாது” என்று வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார். அப்போது காவல் ஆணையர் பி.சி.பாண்டே, கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்நாராயணன், முதல்வரின் கூடுதல் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இந்தத் தகவலைத் தன்னை மாலையில் சந்தித்த ஸ்ரீகுமாரிடம் டிஜிபி சக்கரவர்த்தி பகிர்ந்திருக்கிறார். இதனால் சக்கரவர்த்தி பதட்டத்துடனே காணப்பட்டிருக்கிறார்.

மறுநாள் பிப்ரவரி 28 காலை ஸ்ரீகுமார் தனது தனது அலுவலகத்தில் இருந்தபோது, நரோடா பாட்டியா அருகிலிருந்த ரிசர்வ் போலீஸ் கமாண்டர் குர்ஷித் அமகது போனில் பேசியிருக்கிறார். அப்போது அவர் 500 முஸ்லிம் குடும்பத்தினர், ‘உயிர்ப் பிச்சை கொடுங்கள், கலவரக் கும்பலிடம் இருந்து எங்களை காக்க தங்கள் முகாமில் எங்களுக்கு அடைக்கலம் கொடுங்கள்’ என கெஞ்சுகின்றனர். என்ன செய்ய என கேட்டிருக்கிறார். உடனே ஆயுதப்படை முகாமிற்குள் அவர்களை உடனே அனுமதித்து பாதுகாப்பு கொடுங்கள் என ஸ்ரீகுமார் கூறியிருக்கிறார். உடனே கமாண்டர் குர்ஷித் அகமது தான் ஒரு முஸ்லிம் அதிகாரி என்பதால் பிரச்சனை வேறுமாதிரி ஆகிவிடும் எனத் தயக்கம் காட்டியிருக்கிறார். உடனே அவர்களை உடனே உள்ளே அனுமதிக்க வேண்டும் என பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பியதோடு, யார் கேட்டாலும் என் உத்தரவைக் காண்பி என கூறியிருக்கிறார். உடனே குர்ஷித்தும் அவருக்குக் கீழே இருந்த டிஎஸ்பி குரேஷி ( இவரும் முஸ்லிம் ) தயக்கத்துடன் உள்ளே அனுமதித்திருக்கின்றனர். இந்தத் தகவல் தெரிந்தவுடன் உயரதிகாரி முகமூடியில் உலாவி வந்த காவி அதிகாரிகள் ‘எப்படி அனுமதித்தாய்’ என இரு முஸ்லிம் அதிகாரிகளையும் மிரட்டியிருக்கின்றனர். இதன்காரணமாக அதன்பின் வந்தவர்களை அனுமதிக்க மறுத்ததுடன், இரு அதிகாரிகளும் தனக்கு மேலதிகாரியான ஸ்ரீகுமாரிடம் மிரட்டிய தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. விளைவு, ஆயுதப்படை முகாம் அருகே துடிக்க துடிக்க 96 பேரை காவிக்கும்பல் கொன்று குவித்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் அனுமதி மறுக்கப்பட்டு ஆயுதப் படைப்பிரிவு முகாம் அருகே அஞ்சி நடுங்கிய படி இருந்தவர்களென்பது ஸ்ரீகுமாருக்குத் தெரிய வந்திருக்கிறது.

பிப் 28 அன்று காலை, மாலை வேளைகளில் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் கண்முன் சங்பரிவாரின் கொலைவெறி தாண்டவத்தைப் பார்த்திருக்கிறார். அப்போது காவலர்கள் வேடிக்கை பார்த்ததுடன், இணைந்தும் செயல்பட்டிருக்கின்றனர். ஓர் இடத்தில் காவல்துறையினரைப் பார்த்து” எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான், போலீசார் எங்கள் பக்கம்தான்” என முழக்கமும் எழுப்பியிருக்கின்றனர். மனம் பொறுக்காத ஸ்ரீகுமார் கையறு நிலையில் கண்ணில் கண்டவற்றையும், மோடியின் ஆசியோடு, அதிகாரிகளின் முன்னிலையில் மாநிலமெங்கும் அரங்கேறும் அட்டூழியங்களைத் தொகுத்து, அன்றைய ஜனாதிபதி ஆர்.கே.நாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலருக்கு மொட்டைக் கடிதமாக எழுதி அனுப்பியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து குஜராத் நிலவரம் மிகுந்த கவலையளிப்பதாக வாஜ்பாய்க்கு ஜனாதிபதி கடிதம் எழுதியிருக்கிறார் என்பது மட்டுமே அந்தக் கடிதம் அனுப்பியதில் ஸ்ரீகுமாருக்குக் கிடைத்த சிறிய மன ஆறுதல்.

உளவுத்துறையில் ஆதாரங்கள்

வாஜ்பாய் 2002 ஏப்ரல் 8 ல் கலவரப்பகுதிகளைப் பார்வையிட்ட பின்பு, ஸ்ரீகுமார் ஆயுதப்படையில் இருந்து உளவுப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். உடனே முதல்வர் மோடியிடம் இருந்து பல்வேறு கட்டளைகள் நேரடியாக வந்திருக்கின்றன. அதன் பின் முதல்வரின் செயலாளர் ஏ.கே.ஷர்மா ( தற்போது பிரதமரின் இணைச்செயலாளர்) ஸ்ரீகுமாரிடம் புகழ் பெற்றநடிகர் நசிருதீன் ஷா என்பவரின் ஒன்று விட்ட சகோதரர் மேஜர் ஜெனரல் ஜகிருதீன் ஷா இவர் கலவரத்தையொட்டி காவல்துறைக்கு உதவ வருகிறார்.. அவர் ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கிறார். அதனைக் கண்காணித்து தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே மறுத்த ஸ்ரீகுமார் ‘ராணுவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கையை உளவு பார்க்க முடியாது. அதுவும் எழுத்துபூர்வமான உத்தரவு இல்லாமல், உளவு பார்க்க முடியாது. அது நமது வேலையில்லை என நிராகரித்திருக்கிறார்.
உளவு பார்க்கச் சொன்னதன் காரணம் பின்னர்தான் ஸ்ரீகுமாருக்குத் தெரிய வந்திருக்கிறது. மேஜர் ஷா அகமதாபாத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு ராணுவத்தினரைக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்கியதோடு, சங்பரிவார் கும்பலின் கொலை, கொள்ளை நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தடுத்தும் நிறுத்தியிருக்கிறார். அதனால்தான் மேஜர் ஷாவை மோடி குறிவைத்திருக்கிறார். மேலும் குஜராத்தின் கள நிலவரம் குறித்து ராணுவத் தலைமையகத்திற்கு ரகசிய அறிக்கையையும் ஷா அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆவணப்படுத்துதல்

பெரும்பாலும் கலவரத்தை ஊக்குவிக்கவும், சங்பரிவார் கொலைக் கும்பலைக் காப்பாற்றவும் மோடி ஆணைக்கிணங்க உயர் அதிகாரிகள், கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவையே பிறப்பித்திருக்கின்றனர். இதனை ஸ்ரீகுமார் முழுமையாகச் சேகரித்து, அதன் படி நீதிக்குப் புறம்பாக செயல்பட்டவர்களின் செயல்பாடுகளையும் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார். அதுவும் வாய்மொழித் தகவல்களைச் சேகரித்து, அதனை ஆவணமாக்கி அதில் காவல்துறை ஐஜிபி நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஓ.பி.மாத்தூரிடம் அதற்குச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அதில் ஏப்ரல் 16 முதல் செப்டம்பர் 19 வரையான தகவல்கள் இருந்திருக்கின்றன.

மோடியுடன் நேரடி மோதல்

2002 மே 7 அன்று மோடி ஸ்ரீகுமாரை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது ஏற்கனவே உளவுப்பிரிவில் இருந்து அரசிற்கு அனுப்பியிருந்த அறிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், ‘அறிக்கைகள் எல்லாம் எங்கள் சங்பரிவார் அமைப்புகள் கலவரம் செய்வதாக இருக்கிறது. அது தவறு, கோத்ரா சம்பவத்திற்குப் பின்” இதுபோன்ற சம்பவங்கள் இயற்கையானதுவை கட்டுப்படுத்த முடியாத எதிர்வினை, எந்த போலீசும் சங்பரிவாரைக் கட்டுப்படுத்த முடியாது. இனி சங்பரிவார் குறித்து துப்பறிய ஆர்வம் காட்ட வேண்டாம். சங்பரிவார் செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆளாக நீங்கள் இருக்க வேண்டும்” என சிரித்துக் கொண்டே மோடி கூறியிருக்கிறார்.

அதன்பின்னர் 2002 ஜூன் 7 அன்று மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, ஸ்ரீகுமாரிடம் அமைச்சர் ஹரேன் பாண்ட்யாவின் நடவடிக்கையைக் கண்காணித்து அறிக்கை அளிக்கக் கோரியிருக்கிறார். அதன்படி ஹரேன் பாண்ட்யா, டீஸ்டா செடால்வத்தின் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் ஸ்தாபனத்தால் அமைக்கப்பட்ட குடிமக்கள் தீர்ப்பாயத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரிடம் வாக்குமூலம் அளித்த ரகசியத்தை மோடிக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பின்னர் ஹரேன் பாண்ட்யா மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது தனிக்கதை.
அதன் பின்னர் மோடி ஜூன் 25 அன்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் ” ஜெஎன்யு ( ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) போன்று மதச்சார்பின்மை பேசக்கூடாது என அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார். சங்பரிவார் கொள்கைகளையே அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்பதைச் சுட்டியிருக்கிறார். இதையும் அப்படியே ஸ்ரீகுமார் பதிவு செய்திருக்கிறார். அதன் பின்னர் சங்பரிவார் திட்டமிட்டிருக்கும் அகமதாபாத் யாத்திரையைத் தடுத்து நிறுத்திட முயன்றால், அவர்களை என்கவுண்டரில் கொன்றுவிடுங்கள் என பரிந்துரைக்கிறார். இதை ஸ்ரீகுமார் மறுக்கவும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நான் உண்மையான அறிக்கையைத்தான் அனுப்புவேன் என ஸ்ரீகுமார் வாதிட்டிருக்கிறார். இதே போலி என்கவுண்டர் முறையை கையில் எடுக்க காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மோடி வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.

நானாவதி கமிஷன்

2002 மார்ச் மாதம் கலவரம்குறித்து விசாரிக்க நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. 2002 மே மாதம் இந்தக் கமிஷன் இரண்டு நீதிபதிகள் கொண்ட கமிஷனாக விரிவுபடுத்தப்பட்டு அதன் தலைவராக நீதிபதி நானாவதி நியமிக்கப்பட்டார். கோத்ரா சம்பவத்துடன், குஜராத் மதக் கலவரத்தையும் சேர்த்து விசாரிக்கும் பொறுப்பு இந்த நானாவதி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு நீதிபதி ஷா உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த இடத்துக்கு நீதிபதி அக்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் இறுதி அறிக்கை தயார் செய்யப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 20 வது முறையாக இந்தக் கமிஷனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

முதலில் நம்பிக்கை அளித்த கமிஷனின் நடவடிக்கை பின்னர் அவநம்பிக்கையாக மாறியது. காரணம், அரசு இயந்திரம் எப்படியெல்லாம் மதவெறியின் கோரப்பசிக்கு எச்சில் வடியும் நாக்குகளாக இருந்தது என்பதை மறுக்கமுடியாத பல்வேறு ஆதாரங்கள் கமிஷனின்முன் வைக்கப்பட்டது. குறிப்பாக ஸ்ரீகுமார் பல்வேறு மிரட்டல்களையும் மீறி பதவியில் இருக்கும்போது 4 பிரமாண வாக்குமூலங்களையும், உளவுத்துறை பதவி பறிக்கப்பட்ட பின்னர் 5 பிரமாண வாக்குமூலங்களையும் தகுந்த, மறுக்க முடியாத ஆதாரத்துடன் சமர்ப்பித்திருந்தார். குறிப்பாக மோடிக்கு நெருக்கமான தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் உள்ளிட்டவர்களின் கடும் மிரட்டலையும் மீறி பிரமாண வாக்குமூலங்களை அளித்திருக்கிறார். மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரங்களையும் இணைத்தே கொடுத்திருக்கிறார். ஆனால் கமிஷன் மேலும் மேலும் அதன் ஆயுளை ”கமிஷனுக்காக ” 12 ஆண்டுகள் நீட்டித்துக் கொண்டே சென்றதே தவிர எந்த உருப்படியான முடிவுக்கும் வரவில்லை.

தேர்தல் ஆணையம்

இதற்கிடையே 2003 மார்ச் முடிய மோடியின் ஆட்சிக் காலம் இருந்தது, ஆனால் மோடியோ இந்த பதட்டமான சூழலைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்தான் எளிதாக வெற்றிபெற முடியும் எனக் கணக்கிட்டு, 2002 ஜூலையில் சட்டமன்றத்தை கலைத்தனர். விரைவில் தேர்தல்நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டனர். ஜேஎம் லிண்டோ தலைமையிலான தேர்தல்ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து ஆய்வில் இருக்கிறது. இதற்கிடையே எல்லாம் சரியாக இருக்கிறது. அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தேர்தலை நடத்தலாம் என அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என மோடி தரப்பில் வழிகாட்டப்படுகிறது. ஆனால் இதனை ஸ்ரீகுமார் மறுக்கிறார். ‘உண்மையான அறிக்கையையே தரமுடியும். தவறு செய்தால் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி வரும்’ என வாதாடுகிறார். இறுதியில் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் ‘இன்னும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து மீண்டும் சொந்த இடத்திற்குத் திரும்ப முடியாமல், சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கின்றனர். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 152 தொகுதிகள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள். அங்கு இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை’ என அறிக்கை தாக்கல் செய்கிறார். அப்போது உடனிருந்த தலைமைச் செயலாளர் சுப்பாராவ், அங்கேயே ‘இதற்கெல்லாம் என்ன ஆதாரம்’ என குறுக்கிடுகிறார். அதனை தேர்தல் ஆணையம் அனுமதிக்காமல் அவர் உளவுத் துறை அதிகாரி “அவருக்கு நீங்கள் என்ன மொழியாக்கம் செய்யும் வல்லுனராக” என கேள்வி எழுப்பி தலையீட்டை நிறுத்துகின்றனர். விரிவான ஆய்விற்குப் பின்னர் மற்ற மாநில அதிகாரிகள் அளித்த விபரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. உண்மை உடைபட்டு நிற்கிறது. பொதுமக்கள், தேர்தல் ஆணையம், சிவில் நிர்வாகம் மற்றும் ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றனர். தற்போது தேர்தல் நடத்த இயலாது என கூறி விட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் சென்றும் மோடியின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் ஸ்ரீகுமார் மீது மோடி அரசின் கோபம் முழுமையாகத் திரும்புகிறது.

மிரட்டல் – பழிவாங்கல்

இந்நிலையிலும், ஸ்ரீகுமார் தனது நேர்மையான பணியை ஒருபோதும் கைவிடவில்லை. மோடிக்கு செல்லப்பிள்ளையாகப் பார்க்கப்பட்ட குற்றப்பிரிவு டிஐஜி வன்சரா எப்படியெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், பஜ்ரங்தள் அமைப்பிற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். வெடிகுண்டுகளை பஜ்ரங்தள் அமைப்பிடம் இருந்து வாங்கி அதனை இஸ்லாமியர் குடியிருப்பில் வைத்து எடுத்து குறிப்பிட்ட நபர்களை நரவேட்டையாடுகிறார் என்பது குறித்த விரிவான உளவு அறிக்கையை மேல்அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் ஸ்ரீகுமார் அனுப்பி வைக்கிறார். இதில் கடும் ஆத்திரமடையும் மோடி தலைமைப் ஸ்ரீகுமாரை பழிவாங்க எல்லா முயற்சியிலும் ஈடுபடுகிறது. ஆனால் ஸ்ரீகுமார் தனது உளவு ஆதாரங்களை ஆடியோ, வீடியோ உள்ளிட்டவற்றை மாநில அரசிற்கு மட்டுமல்ல; அப்போது கலவரம்குறித்து விசாரித்து வந்த, தேசிய மனித உரிமை ஆணையம், சிறுபான்மை நல ஆணையம் அனைத்திற்கும் அனுப்பி வைத்திருந்தார். இதனால் அவ்வளவு எளிதாக ஸ்ரீகுமாரை நெருங்க முடியவில்லை.

2002 செப்டம்பர் மாதம் கௌரவ யாத்திரை என்ற பெயரில் மோடி பிரச்சாரத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகவும் வெளிப்படையாக சிறுபான்மையினக்கு எதிராக விஷத்தைக் கக்கியிருக்கிறார். இதனை முழுமையாக குறிப்பெடுத்தும், பதிவு செய்தும் ஆதாரத்துடன் செப்டம்பர் 16 வரை மேலிடங்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இதில் கடும் கோபமடைந்த மோடி, செப்டம்பர் 17ம் தேதி ஸ்ரீகுமாரை உளவு துறையில் இருந்து போலீஸ் சீர்திருத்தப் பிரிவிற்கு இடமாற்றம் செய்து காத்திருப்புப் பட்டியலில் வைக்கிறார். அன்றிலிருந்து 2007 பிப்ரவரியில் ஸ்ரீகுமார் ஓய்வு பெறும் வரையில் பணியின்றிக் காத்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தை ஸ்ரீகுமார் லாவகமாக காந்தியம் மற்றும் கிரிமினாலஜி துறையில் முதுகலைப் பாடம் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்.

சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி)

திஸ்டா செல்வாத் முறையீட்டில் உச்சநீதிமன்றம் தலையீட்டின் படி குஜராத் காவல்துறை கலவரத்தின் உண்மைத் தன்மையைக் கொண்டு வர முடியாது, என்ற அடிப்படையில் 2008 ல் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்படுகிறது. ஆனால் அதன் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநராக இருந்து தற்போது, டாடா குழுமத்தில் வேலை பார்த்து சம்பளம் பெற்று வரும் டாக்டர் ஆர்.கே.ராகவன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் ஸ்ரீகுமார் பணியிலிருந்தபோது நானாவதி கமிஷனில் சமர்ப்பித்த 4 பிரமாண வாக்குமூலம் உள்ளிட்ட 9 வாக்குமூலங்களையும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறார். மேலும் பல்வேறு ஆதாரங்களுடன் 60 முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கிறார். ஆனால் சிறப்பு விசாரணைக் குழு எந்த மீள் விசாரணையிலும் ஆர்வம் கட்டவில்லை. வழக்கை முடிப்பதிலேயே குறியாக இருந்தது ஸ்ரீகுமாருக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இருந்த போதிலும் தொடர்ந்து சதித்திட்டத்திற்கான ஆவணங்களை அளித்து வருகிறார். ஆனால் 2005ல் மே மாதத்தில் இதே ஸ்ரீகுமார் நானாவதி கமிஷனில் அளித்த பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில் டாக்டர் ஆர்.கே.ராகவன் ‘பிரண்ட்லைன்’ ஆங்கில இதழில் ஸ்ரீகுமாரை வானளாவ புகழ்ந்து எழுதியிருந்தார். ஆனால் விசாரணை அதிகாரியாக வந்த பின்னர் ஸ்ரீகுமார் அளிக்கும் ஆவணங்களை ஊத்தி மூடுவதில் குறியாக இருந்ததாக ஸ்ரீகுமார் குறிப்பிடுகிறார். குறிப்பாக காங்கிரஸ் எம்பி கொலை குறித்த ஜகியா ஜாஃப்ரின் முறையீட்டை சரிபார்க்கக் கூட தயாராக இல்லாத நிலை இருந்திருக்கிறது. இதன் பின்னணியில் மோடி அரசு ராகவனின் தனிப்பட்ட கிரேட் பிரிட்டன் பயணம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை ஏற்றுக்கொண்டிருந்தது தெரிய வந்தது. முன்னதாக இஸ்லாமியர்களைக் கொன்ற குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் முழுமுயற்சியாக எஸ்ஐடியின் வேலையாக இருந்தது அவரின் நடவடிக்கைகள் உறுதிபடுத்தியதாக ஸ்ரீகுமார் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீகுமார் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக மோடி விருப்பத்தின் படி பஜ்ரங்தள் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்க துணை செய்த அதிகாரிகளுக்கு எப்படியெல்லாம் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் எஸ்ஐடியில் ஒப்படைத்திருக்கிறார். ஆனாலும் பலன் இல்லை. எஸ்ஐடியின் தலைவராக இருந்து டாக்டர் ஆர்.கே.ராகவன் இன்று பனாரஜ் நாட்டின் இந்தியத் தூதராக பதவியில் கோலோச்சுகிறார். இப்போது புரிகிறதா எஸ்ஐடி பணிக்கான வெகுமதி என்னவென்று…

ஸ்ரீகுமாருக்கு கடும் நெருக்கடி

இந்நிலையில் மோடி அரசு, ஸ்ரீகுமாருக்கு தொடர்ந்து மனரீதியான துன்புறுத்தல்கள் தொடர்கிறது. அவர் குடியிருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் இருக்கும் சண்டே கிளப்பில் பங்கேற்க ஸ்ரீகுமார் குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகளாக ராகுல்சர்மா, சஞ்சீவ்பட், ராஜ்நீஷ் ராய், சதிஷ்வர்மா போன்றோர்மட்டுமே இவர் குடும்பத்தினருடன் இயல்பாக பேசுகின்றனர். அப்படி ஒரு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருந்த போதிலும் தொடர்ந்து நீதியை நிலைநாட்ட தனக்கு எதிராகப் புனையப்பட்ட அவதூறு வழக்குகள், நிர்வாகத் தீர்ப்பாயம் உள்ளிட்டவற்றில் சட்டப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.

அதன்விளைவு; பணிமூப்பின் அடிப்படையில் ஸ்ரீகுமார் ஓய்வுபெறும் நாளான 2017 பிப்ரவரி 28 அன்று சிலமணி நேரத்திற்குமுன்பு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஸ்ரீகுமாரை காவல்துறைத் தலைவராக முன் தேதியிட்டு பதிவு உயர்வு செய்து தீர்ப்பளித்திருக்கிறது. இதனை எதிர்த்து மோடி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தற்போதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இருந்த போதிலும் பணி ஓய்வு பெற்ற 18மாதங்கள் கழித்தே ஓய்வூதியம் உள்ளிட்ட பல பலன்களை மோடி அரசு அளிக்கத் துவங்கியிருக்கிறது.
இதையெல்லாம் படிக்கும் போது அமித்ஷாவிற்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம் எந்தவிதத்திலும் இயற்கையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை நிலை நிறுத்துகிறது. அதுவும் வேலை செய்யாத இசிஜியில் இருந்து எடுத்த ரிப்போர்ட்டின் படி அவர் உடம்பு சரியில்லை என சொல்லியிருப்பதை பார்க்கையில் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.

கருப்பு ஆடுகள்

அரசின் உயர்பதவியில் இருந்துகொண்டு மோடியின் மதவெறிக்குத் துணை நின்ற அதிகாரிகளின் அப்பட்டமான அத்துமீறல்களைப் பட்டியலிட்டுள்ள ஸ்ரீகுமார், அவர்களுக்கு மோடி அரசு தற்போது வரை அளித்து வரும் சிறப்புப் பதவிகளைப் பட்டியலிடுகிறார். தற்போதும் பிரதமரின் கூடுதல் செயலாளர், விஜிலென்ஸ் கமிஷன் தலைவர், துணைவேந்தர் என பணம் கொழிக்கும் பதவிகளில் இருந்து வருகின்றனர். இதில் இஸ்லாமிய அதிகாரிகள் பலரும் இருக்கின்றனர். சிலர் பாஜகவிலும் சேர்ந்திருக்கின்றனர் என்ற விபரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த 21 பேர் இடம் பிடித்திருக்கின்றனர். ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனிக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்.

நேர்மைக்காக துன்புறும் அதிகாரிகள்

அந்தப் பட்டியில் மோடி அரசின் மோசடித் தனத்தை அம்பலப்படுத்தி, நடவடிக்கை எடுத்ததற்காக ஐபிஎஸ் அதிகாரிகள் ராகுல் சர்மா, சஞ்சீவிபட், ரஜ்னீஷ்ராய்,விவே ஸ்ரீவஸ்தவா, ஹிமாச்சு பட், எம்.டி.ஆண்டனி, சதிஷ்சந்திர வர்மா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஜஸ்வீந்தர் ரானா, ஸ்ரீகுமர் என இந்த பட்டியலில் 8 பேர் இடம் பிடித்திருக்கின்றனர்.

காங்கிரசின் துரோகம்

குஜராத் கலவரத்தின்போது காங்கிரஸ் கட்சி பாஜகவின் இரண்டாவது அணியாக செயல்பட்டது என மனம் வெம்புகிறார் ஸ்ரீகுமார். காரணம் காங்கிரஸ் எம்பி எர்ஷான் ஜாஃபர் பஜ்ரங்தள் கும்பலால் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் சொல்லொணாத் துயரில் இருக்கும் அவரது மனைவி ஜகியா ஜாஃப்ரியை சோனியா சந்தித்து ஆறுதல் கூற வந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் தடுத்திருக்கின்றனர். அப்படிச் சந்தித்தால் நம்மை இந்து விரோதி போல் பார்ப்பார்கள் என கூறியிருக்கின்றனர். ஜனதாக் கட்சி ஆட்சியின்போது பீகாரில் சாதி ஆதிக்க வெறியர்களால் பல தலித்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அப்போது இந்திரா காந்தி அவர்களின் குடும்பத்தை சந்திக்கச் சென்றார். அப்போது அங்கிருக்கும் காங்கிரஸ்காரர்கள் ‘வேண்டாம்’ என தடுத்தனர். அதையும் மீறி உயிரைத் துச்சமென மதித்து பெருக்கெடுத்து ஓடிய கங்கையை யானை மீது ஏறிக் கடந்த இந்திரா காந்தியின் துணிச்சலுக்கு நேர் மாறானது ஆகும் என ஸ்ரீகுமார் குறிப்பிடுகிறார்.
குஜராத் கலவரத்திற்குப் பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், குஜராத் கலவர குற்றவாளிகளைத் தண்டிக்கத் துளியளவும் முன் கை எடுக்கவில்லை. பல ஆவணங்களைக் கேட்டும் கூட தர மறுத்து விட்டது. காரணம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான காங்கிரசின் கலவரத்தைத் தோண்ட ஆரம்பித்தால் என்ன செய்வது என ஒதுங்கியே இருந்தது. அதை விடக் கொடுமை மோடிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த அனில்மும் குஜராத் பெரும் முதலாளியின் சிபாரிசின் பேரில் மத்திய வணிகத்துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். குஜராத் கலவரத்தில் காவிக் கும்பலுக்கு காவடி தூக்கிய அதிகாரிகளுக்கு மத்திய காங்கிரஸ் ஆட்சியிலும் உயர்பதவிகள் வழங்கப்பட்டவை தற்செயலானது அல்ல.. என்கிறார் ஸ்ரீகுமார்.

ஓயாத போராட்டம்

இன்றும் குஜராத் நீதிக்காக போராடி வருகிறார். அதன் காரணமாகவே தற்போது வரை காவல்துறை தலைவராக இருந்த ஒருவருக்கு மாநிலத்தில் உள்ள ஒரு சாதாரண விருந்தினர் மாளிகையில்கூட தங்க அனுமதிக்காமல் அதிகாரத் திமிர் விரட்டியடித்து வருகிறது. ஆனாலும் அவர் தேங்கிடாமல் நீதிக்கான பயணத்தைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்.
கிடுக்கிப்பிடி போடும் கடிதங்கள்…

இது மட்டுமல்ல, இவர் தற்போது வரை பிரதமர் மோடி துவங்கி, தற்போதைய குஜராத் முதல்வர் அனைவருக்கும் அவர்களின் சட்டவிரோதச் செயல்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிக் கண்டித்து கடிதம் எழுதி வருகிறார். அந்தக் கடித வரிசையில் 2015 ஜனவரியில் மத்திய மனித வளத்துறை அமைச்சருக்கு செவ்வியல் நூலான திருக்குறளை மத்திய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும், அதற்கான தரவுகளையும் முன்வைத்து எழுதியிருக்கிறார்.

2014 டிசம்பரில் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பகவத்கீதையை தேசிய நூலாக்கினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும். அதே போல் எப்படி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிராக இருக்கும் என்பதையும் மிக நுட்பமாகச் சட்ட சரத்துக்களுடன், பகவத்கீதையின் கருத்துகளை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். அதில் பகவத் கீதையின் தீண்டாமை துவங்கி, பெண்ணடிமைத்தனம்வரை பிரிந்து மேய்ந்திருக்கிறார்.

இந்தியாவின் இறையாண்மையைக் காக்க நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது இந்நூல் ஆகும். குறிப்பாக ஆர்எஸ்எஸ் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும், மோடியின் முகமூடிக்குப் பின்னர் இருக்கும் கொடூர முகத்தை கண்ணாடி போல் இந்நூல் படம் பிடித்துக் காண்பிப்பதாக இருக்கிறது.

நூல் முழுவதும் இந்து என்று எதையோ வைத்து சங்பரிவார் அமைப்புகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. ஆனால் உண்மையில் உபநிடதங்கள், புராணங்கள் என்ன கூறுகின்றன, அதற்கு எதிராக இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் விளக்குகிறார். குறிப்பாக ரிக், யஜூர், அதர்வண வேதங்களில் இருந்தும், மகாபாரதம், பகவத் கீதைகளில் இருந்து மேற்கொள் காட்டுகிறார். அதோடு இல்லாமல் திருக்குறளையும் மேற்கோள் கட்டுகிறார்.

இவ்வளவு கடினமான சொற்றொடர்களையும் மிகவும் நுட்பமாக, எளிமையாக புரியுமாறு தீக்கதிர் தில்லி செய்தியாளர் ச.வீரமணி, தஞ்சை பத்திரிகையாளர் ரமேஷ் ஆகியோர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றனர்.

நன்றி: புதிய புத்தகம் பேசுது (பாரதி புத்தகாலயம்)

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்; உங்கள் ஆதரவை வழங்குங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here