குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கொன்றில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரை விடுவித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம், நரோதா பாட்டியாவில், விஷ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங்கள் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய கலவரத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 97 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 800க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்கள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 32 பேருக்கு சிறப்பு விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதில் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஏழு பேருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மீதமுள்ள குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர்நீதிமன்றம், மாயா கோட்னானி உட்பட 17 பேரை விடுவித்தது. மேலும், பஜ்ரங்கள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு வழங்கப்பட்ட ஆயுள்தன்ண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையும் படியுங்கள்: திருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்?