குஜராத் கலவரத்தில் வன்கொடுமைக்குள்ளான பெண்; அரசு வேலை, ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0
238

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடந்தக்  கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை குஜராத் அரசு  வழங்க உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2002 குஜராத் கலவரத்தின்போது தாஹோத் மாவட்டம், ராதிக்பூர் கிராமத்தில் வசித்த 60 முஸ்லிம் குடும்பங்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ (19) குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் ஒரு வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர்.

அவர்களை வழிமறித்த கும்பல் 14 பேரை கொலை செய்தது. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை 12 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.

அச்சுறுத்தல்கள் காரணமாக 25 முறை வீட்டை மாற்றியுள்ளோம். குஜராத் கலவரத்தில் எனது 3 வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரையும் இழந்துவிட்டேன். எனது மூத்த மகள் வழக்கறிஞராக விரும்புகிறாள். அவளை வழக்கறிஞராக்கி நீதிக்காக வாதிட செய்வேன் என்று முன்னர்  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தர குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதோடு இருப்பிட வசதியுடன் கூடிய அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டது.