குஜராத் கலவரத்தின்போது முதல்வர் மோடியை பதவியிலிருந்து நீக்க விரும்பினார் வாஜ்பாய்; அத்வானி எதிர்த்தார் – யஷ்வந்த் சின்ஹா

0
444


கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார் என்று பாஜக முன்னாள் முக்கியத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்


மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது – குஜராத்தில் 2002-இல் மதக் கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல்வராகப் பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை ராஜினாமாசெய்ய அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.


2002இல் கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, மோடி ராஜினாமா செய்ய ஒருவேளை மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார். கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை  கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.


அத்துடன், மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் வாஜ்பாயிடம் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்தி வைத்தார் என்றார் யஷ்வந்த் சின்ஹா.


பின்னர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பலை, தனி பயன்பாட்டுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.


அதற்கு, இதெல்லாம் பிரச்னை கிடையாது. முன்னாள் கடற்படை அதிகாரிகளே இதற்கு விளக்கம் அளித்துவிட்டார்கள். இதுபோன்ற பொய்களை பிரதமர் மோடி தெரிவிக்கக் கூடாது. மோடி அரசின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மக்களவைத் தேர்தலை அணுக வேண்டும். நாட்டின் வரலாற்றைக் கொண்டு அல்ல என்றார் யஷ்வந்த் சின்ஹா.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here