அமெரிக்காவுக்கு 2014இல் சென்றிருந்தபோது மணல் புயலால் அழிந்துபோன ஒரு பண்டைய நாகரிகத்தின் கதையைப் படித்தேன். ஒரு பத்திரிகையாளர் அதைத் தொகுத்து எழுதியிருந்தார். ஓர் அழகிய சமையல் தயாராகி விருந்துக்கு அவர்கள் அமர்ந்த வேளையில் மணல் புயல் அவர்களை நிலைகுலைய வைத்து சமாதியாக்கியிருக்கக்கூடும் என்று அவர் ஓரிடத்தில் சொல்லியிருப்பார். அவரே நேரில் கண்ட புதையுண்ட சமையல் கலன்களை வைத்து அப்படி அவர் சொல்லிச் செல்கிறார். மணலுக்குள் புதைந்திருந்த அழகிய மட்கலன்களை தானே மீட்டெடுத்த தருணத்தை விவரிக்கும்போது அவர் இப்படி எழுதியிருந்தார்.  

தமிழ்நாட்டில் இப்போது திருமணங்களில் பரிசளிக்கும் எவர்சில்வர் பாத்திரங்களில் பெயர்களைப் பொறிக்கிறோம். கீழடியில் மண் பானைகளில், குடுவைகளில் பெயர்களைப் பொறித்திருக்கிறார்கள். 2600 ஆண்டுகளுக்கு முன்பே சதுரங்கம் ஆடும் தாயக் கட்டைகளைப் பார்க்கிறோம். தங்கக் கட்டிகளில் பொறிக்கப்பட்டகோதையின் பெயரைக் காண்கிறோம். உறை கிணறுகளைக் காண்கிறோம். சீரான கழிவுநீர் வடிகால்களைப் பார்க்கிறோம். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த வைகைக் கரை நாகரிகம் பெருநகர நாகரிகம் என்று பெருமைப்படுகிறோம். 
இந்த உயர்ந்த நாகரிகம் எப்படி அழிந்தது என்பதைப் பற்றி இனிமேல்தான் ஆய்வுகள் செய்யப்படும்.

சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகம் 200 ஆண்டு கால வறட்சியால் மழையில்லாமல் அழிந்து போயிருக்கலாம் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பண்டைக்கால காலநிலை ஆய்வாளர் யாமா தீட்சித் சொல்கிறார். பெருநகரங்களின் பேரழிவுகள் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்பட்டன என்கிறது வாஷிங்டனில் அமைந்துள்ள ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம். காலப்போக்கில் ஏற்பட்ட நதிகளின் அழிவாலும் நதிகளின் திசை மாற்றத்தாலும் செம்மாந்திருந்த உயரிய மனித நாகரிகங்களின் தொட்டில்கள் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருக்கின்றன.

அநியாயம், அக்கிரமம் நிறைந்த கொடுங்கோலாட்சிகள் நடந்தபோது நன்மைகளை நிலைநாட்ட நல்லவர்கள் போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று அழகிய நகரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக வேதங்கள் சொல்லுகின்றன. பேரழிவுகளுக்கான எச்சரிக்கைகள் கிடைத்த பின்னரும் அலட்சியமாக நாகரிகங்கள் செயல்பட்டபோது அழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. பெருநகரங்கள் எழுந்தபோது நீர்நிலைகள் அழிக்கப்பட்டதால் மழையின்றி வறட்சி சூழ்ந்திருக்கலாம். சிந்து சமவெளி நாகரிகத்தின் கடைசி காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை விட்டு வெளியேற காரணம் தண்ணீர் இல்லை என்பதாக இருக்கலாம் என்பதுதான் இதுவரை வந்த ஆய்வுகளின் முடிவுகள் சொல்லும் தகவல்.

கீழடி எப்படி அழிந்திருக்கலாம் என்பதைப் பற்றிய ஆய்வு முடிவுகள் வர இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் தேவைப்படலாம். கீழடியில் பெருநகர நாகரிகம் தழைத்தோங்கியது என்கிற தகவலே வெளிவரக்கூடாது என்று நினைக்கிற டெல்லிஆட்சியாளர்கள் மத்தியில் இந்தத் தகவலை அறிவியல்பூர்வமாக உறுதி செய்ததே பெரும் சாதனை. அதே வேளையில் சமகால தமிழ்ச் சமூகம் நீர்ப் பற்றாக்குறையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தினமும் தமிழ்நாட்டுக்கு 25,000 லாரி லோடு மணல் தேவையென்றால் 90,000 லாரி லோடு மணல்அள்ளப்பட்டு வருகிறது. ஆற்றுப்படுகைகள் சூறையாடப்படுவதால் நதிகளின் திசைவழிகள் திரிந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. 2004 சுனாமியாக, 2015 சென்னைப் பெருவெள்ளமாக, 2017 ஒக்கி புயல் பேரிழப்பாக, 2018 கஜா புயல் பேரிழப்பாக, 2019 அவலாஞ்சி பெருமழையாக இயற்கையின் எச்சரிக்கை அறிகுறிகள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை பேசும் பேருண்மைகளுக்குச் செவிமடுப்போம். ஒரு பெரும் நாகரிகத்தின் சிதைவைத் தவிர்ப்போம்.

The Raya Sarkar Interview

பஸ் கதைகள்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here