கிழக்கு லடாக் எல்லை பதற்றம்: “தவறுகளை திருத்திக் கொண்டு பின்வாங்குங்கள்” – இந்தியாவை மீண்டும் எச்சரிக்கும் சீனா

0
140

கிழக்கு லடாக் அசல் கட்டுப்பாட்டு கோடு அமைந்த எல்லை பகுதியில் செய்த தவறை உடனடியாக திருத்திக் கொண்டு களத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பின்வாங்குங்கள் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், இந்தியா மற்றும் சீன படையினர் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இந்தியா தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில் சீன தரப்பு சேதத்தை அந்நாடு வெளியிடவில்லை.

இந்த நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அதன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜூன் மாத தாக்குதல் சம்பவத்தில் சீன தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த எல்லை பதற்றம் தொடர்பாகவும் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

இதற்கு முன்பு பல சமயங்களில், கிழக்கு லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை விவரித்து கருத்து வெளியிட்டிருந்தாலும், இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் பதிவு செய்த கருத்துக்கு பிறகு மிகக் கடுமயைாகவே இந்த விவகாரத்தில் சீன அரசு, அதன் வெளியுறவுத்துறை மூலம் எதிர்வினையாற்றியிருக்கிறது.

இது தொடர்பாக அந்தத்துறையின் வாங் வென்பின் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, சீனா-இந்தியா இடையிலான எல்லை பதற்றம் தொடர்பாக மிக விரிவாக பேசினார்.

“சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சமீபத்திய எல்லை நிலைமைக்கு சீனா பொறுப்பல்ல. முதலில் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவது, ஆத்திரமூட்டலுக்காக சட்டவிரோதமாக அசல் எல்லை கோட்டைக் கடப்பது, எல்லைப் பகுதியை ஒருதலைபட்சமாக மாற்றுவது மற்றும் அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது என அனைத்தையும் செய்தது இந்தியா தான்” என்று சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் குற்றம்சாட்டினார்.

இரு நாடுகள் இடையே எட்டப்பட்ட உடன்பாடுகளையும் கருத்தொற்றுமையையும் மதிக்கும் அதேசமயம், எல்லையில் மோதலுக்கு வழிவகுக்காத வகையிலும் பதற்றம் தீவிரமாகும் நடவடிக்கைகளையும் இந்தியா தவிர்க்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

எல்லை பகுதியில் அமைதியை பராமரிக்கும் நோக்கில் ராஜீய மற்றும் ராணுவ ரீதியில் இந்தியாவுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள சீனா விரும்புகிறது என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here