ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏறக்குறைய மோதுகின்ற அளவுக்கு நெருங்கி வந்தன.

இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றையொன்று மாறிமாறி குற்றஞ்சாட்டியுள்ளன.

மாஸ்கோ நேரப்படி காலை 6.35 மணிக்கு, யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பல், அட்மிரல் வினோகிராதோஃப் போர்க்கப்பலுக்கு முன்னால் 50 மீட்டர் இடைவெளியில் கடந்து சென்றது என்று ரஷ்ய பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்க போர்க்கப்பலுடன் மோதாமல் இருக்க “அவசர நடவடிக்கை” எடுக்க வேண்டிய கட்டாயம் ரஷ்ய போர்க்கப்பலுக்கு ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவின் போர்க்கப்பலே காரணம் என்று அமெரிக்க படைப்பிரிவுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ரஷ்யாவின் போர்க்கப்பல் யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பலுக்கு எதிராக பாதுகாப்பற்ற நடவடிக்கை எடுத்ததாக கூறி, “ரஷ்யர்களின் செயல்பாடு பாதுகாப்பற்றதாகவும், தொழில்முறையற்றதாகவும்” இருந்ததாக அமெரிக்காவின் ஏழாவது கடற்படை தளபதி கிளேட்டன் தாஸ் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் குற்றச்சாட்டு வெறும் “பரப்புரை” என்று கூறி அவர் நிராகரித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் கடலில் யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பலை, ரஷ்யாவின் அட்மிரல் வினோகிராதோஃப் 50 முதல் 100 அடி வரை நெருங்கி வந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஆனால், இந்த சம்பவம் கிழக்கு சீனக் கடலில் தென்கிழக்கில் நிகழ்ந்தது என்று தெரிவித்துள்ள ரஷ்ய பசிபிக் கடற்படை, அமெரிக்க போர்க்கப்பலின் தளபதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தி அனுப்பியதாகவும் கூறியுள்ளது.

கடலிலும், வான்வழியிலும் நடத்துகின்ற ஆபத்தான ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த இரு நாடுகளும் மாறி மாறி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் கருங்கடலிலுக்கு மேலே ரஷ்ய போர் விமானம் தங்கள் விமானங்களை இடைமறித்தது “பொறுப்பற்ற நடவடிக்கை” என தெரிவித்து அமெரிக்கா காணொளிகளை பதிவிட்டது.

ஆனால், “ரஷ்ய வான்பரப்பு மீறலை” தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அதுவென ரஷ்யா கூறிவிட்டது.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here