இந்த தலைப்பின் பொருள் விளங்க பல விஷயங்களை அறிந்திருப்பது அவசியம்.

1. தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வார்த்த சங்கம், தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) என பல சங்கங்களில் தயாரிப்பாளர்கள் தாங்கள் விரும்பிய சங்கத்தில் தங்கள் படத்தின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இப்படி மூன்று இடங்களில் பெயர் பதிவு நடப்பதால் படங்களின் பெயர் விஷயத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதனை பயன்படுத்தி, இந்த பெயர் வேணும்னா இவ்வளவு துட்டு வெட்டணும் என்று கட்டப்பஞ்சாயத்தும் அரங்கேறுகிறது.

2. இதில் கில்டு சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம். பல வருடங்களாக சங்கத்தின் கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்கவில்லை. அதனால், சங்கத்தின் பதிவு நீக்கப்படுவதாக சங்க பதிவாளர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

3. சங்கத்தின் பதிவு நீக்கப்பட்டதால், அதில் தங்கள் படங்களின் பெயர்களை பதிவு செய்தவர்கள் இனி என்னாகும்? நமது படப்பெயரை மற்றவர்கள் எடுத்துக் கொள்வார்களா? அப்படி எடுத்துக் கொண்டால் பதிவுநீக்கப்பட்ட சங்கத்தினால் என்ன செய்ய முடியும் என சந்தேகமும் கவலையும் அடைந்துள்ளனர்.

4. இந்த குழப்பத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம் இரு விளக்கங்கள் அளித்துள்ளார்.

விளக்கம் ஒன்று – பதிவு நீக்கப்பட்டதால் யாரும் பயப்பட வேண்டும். ஒன்றும் ஆகாது. தேவையில்லாமல் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால், இந்த விளனக்கத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை. தனது விளக்கத்தை உறுதி செய்யும் எந்த நடவடிக்கையும் ஜாக்குவார் தங்கத்திடம் இல்லை.

விளக்கம் இரண்டு – பல வருடங்களாக ஏன் கணக்கு தாக்கல் செய்யவில்லை? ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் பல கோடி கையாடல் செய்திருந்தனர். அவர்கள் மீது நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் இருக்கையில் எப்படி பொதுக்குழு கூட்டி கணக்கை சமர்ப்பிக்க முடியும்? பொதுக்குழுவில் கணக்கை சமர்ப்பிக்காமல் எப்படி சங்க பதிவாளர் அலுவலகத்தில் கணக்கை ஒப்படைக்க முடியும்? – இது ஜாக்குவாரின் விளக்கமாக அமைந்த கேள்வி.

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதற்கு என்பது போல இந்த கில்டு என்ற தாடியையும் தமிழ் சினிமா வழித்தெறிந்தால் பொலிவுகூடும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here