கிறிஸ்தவ அமைப்புகளைக் கண்காணிக்க தனி வாரியம் அமைக்க கோரி மனு

0
143

இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம் போல, கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :

இந்தியாவில் இந்துக்கள் அதிகளவில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். குறிப்பாக அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு அதிக எண்ணிக்கையில் மதம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒருசில தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், ஜாதிய அமைப்புகள் பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ அமைப்புகள் இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரானப் போராட்டத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகளும் ஏற்பட்டன. இதற்கு கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளே காரணம். மேலும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்டப் போராட்டங்களில் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளும் பங்கேற்றுப் போராட்டம் நடத்துவதற்கான உதவிகளைச் செய்தன.

ஆனால், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வழங்கப்படும் நிதி உதவிகள் குறித்து கண்காணிக்க எவ்வித அமைப்பும் இல்லை.

எனவே கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தனி வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் .

இந்த மனு நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here