கிருஷ்ணர் நடு இரவில் அவதரித்ததால், இவருக்கான பூஜையை நடு இரவில் செய்வது நல்லது. வீடு முழுக்க சுத்தம் செய்து விட்டு, வாசல் படியில் இருந்து பூஜையறை வரை கிருஷ்ணரின் பாதங்களை மாக்கோலத்தால் வரைய வேண்டும்.

அதாவது, கிருஷ்ணனே தன் பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம் இல்லத்து பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம். பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படம் ஏதேனும் ஒன்றை வைத்து பொட்டு இட்டு, மாலை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான மங்களப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ போன்றவற்றையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 

பூஜைப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு சொல்லப்பட்டிருக்கும் அஷ்டோத்திர (108) மந்திரங்களை உளமாரச் சொல்லுங்கள். ஒவ்வொரு மந்திரத்துக்கும் உதிரி பூக்களை ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் மேல் அர்ச்சிக்க வேண்டும். மந்திரம் சொல்ல நமக்குத் தெரியவில்லை என்றாலும் ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தைச் சொல்லி வழிபட்டாலும் சரிதான். பூஜை முடிந்த பின் தூபம், தீபம் காண்பிக்க வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணர் பலகாரப் பிரியர். எனவே பலகாரங்களை அவருக்கு வைத்துப் படைத்து விட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்,. அதன் பிறகே நாமும் பிரசாதம் உட்கொள்ள வேண்டும்.

வீடுகளில் பாகவதம், கீத கோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், க்ருஷ்ண கர்ணாம்ருதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை வாசிக்கலாம். பூஜை முடிந்த பின் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஸ்ரீகிருஷ்ணர் பாடல்களைப் பாடலாம்.

இரவில் கண் விழித்து கிருஷ்ணரின் கதைகளைக் கேட்கலாம். இயன்ற அளவில் அன்னதானம் செய்யலாம். கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், விவசாயம் போன்ற அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் இந்த தினத்தில் விரதம் இருப்பது உரிய பலனைத் தரும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்