கிருஷ்ணகானம் எப்படியிருக்கு?

டி.எம்.கிருஷ்ணாவின் “புறம்போக்கு”ம் குருசரணின் “கன்னக்குழியும்”

0
561
”புறம்போக்கு” பாடல் காட்சி ஒன்றில் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

சமீப காலத்தில் இரண்டு பாடகர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். ஒருவர் புரட்சிப்பாடகர் டி.எம். கிருஷ்ணா. மற்றொருவர் சிக்கில் குருசரண். முதலில் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஒலிக்கும் கிருஷ்ணாவின் புறம்போக்கு பாடலைப் பற்றி சற்று நேரம் பேசலாம். எண்ணூர் முகத்துவாரத்தை நாம் காப்பாற்ற தவறியதை முக்கியமாக எடுத்துக் கொண்டுள்ளார் இப்பாட்டில். மனிதன் தன் சுயநலத்திற்காக நீர் நிலைகளை எப்படி பாழ்படுத்துகிறான் என்பதை உருக்கமாக பாடுகிறார். பாட்டின் வரிகளே பல விஷயங்களை தெளிவாகச் சொல்லி விடுவதால், இதற்கு மேல் விளக்காமல், அதன் இசைக்கு வரலாம்.

வழக்கமாக கானா பாலா, கோவன் போன்றவர்கள் சமூக அவலங்களை நாட்டுப்புற ஸ்டைலில் அவ்வப்போது பாடியுள்ளனர். பெரும்பாலும் அவை காவடி சிந்து, கிளிக்கட்டு போன்ற இசை வடிவங்களில் இருக்கும். முழுக்க முழுக்க கர்நாடக சங்கீத ராகங்களில் அமைந்த, சென்னைத் தமிழில் உள்ள, சமூக அக்கறைப் பாடல் இதுவாகத்தான் இருக்க முடியும். அதைப் பாடியதும் ஒரு கர்நாடக சங்கீதக் கலைஞர். சட்டென்று முதன்முறையாக கேட்கிறபோது, சாஸ்த்ரிய சங்கீதத்தில் பக்திப் பாடல்களையே கேட்டு கேட்டு பழகிவிட்ட காதுகளுக்கு ‘புறம்போக்கு’ பாடல் சற்று வித்தியாசமான அனுபவத்தைத் தருவதில் வியப்பில்லை.

இதையும் படியுங்கள்: மெஹபூப்களின் நாகஸ்வரம்

பாட்டிற்கு இசையமைத்தவர் வயலினிஸ்ட் ஸ்ரீராம்குமார் என்றால் அதை மிக அழகாக உள்வாங்கிக்கொண்டு பாடிய கிருஷ்ணாவுக்கு பெரிய ‘பலே’ போடலாம். ‘புறம்போக்கு உனக்கு இல்லை’ என்று ஆனந்த பைரவியில் ஆரம்பித்து மெதுவாக பேஹடா, அமீர் கல்யாணி, தேவகாந்தாரி, சாளக பைரவி, சிந்து பைரவி என்று ஆறு ராகங்களில் ஆறாக ஓடுகிறது இந்த கிருஷ்ணகானம். பாட்டின் வரிகளுக்கு ஏற்ப பொருத்தமான ராகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது விசேஷமானது. ஒவ்வொரு ராகமும் முடிந்து அடுத்த ராகத்திற்கு வருவதற்கு முன்பு சிட்டாஸ்வரங்களை வைத்துள்ளது அழகான கற்பனை. ஒவ்வொரு முறையும் ஸ்வரங்களைப் பாடும்போதே இலகுவாக அடுத்த ராகத்திற்கு கிருஷ்ணா தாவிச்செல்வது தேர்ந்த ஒரு பாடகனால் மட்டுமே சாத்தியம். அத்தனை ராகங்களையும் நம் மனதைத் தொடும்படி பாடியுள்ளார் என்றாலும் என்னை பெரிதும் உலுக்கியது ஆனந்த பைரவியும், அமீர் கல்யாணியும்.

‘ஆசை’ படத்தில் தேவா ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ என்று ஆனந்த பைரவியில் அருமையாக ஒரு பாடலைத் தந்திருப்பார். ஏன்.. ரஹ்மானின் ‘மெட்டுப்போடு’ என்ற ‘டூயட்’ பாடலும் அதே ராகம். ‘கர்ணன்’ படத்தில் வரும் ‘என்னுயிர் தோழி, கேளொரு சேதி’ என்று சுசிலா பாடும் ‘கர்ணன்’ பாடல்தான் அமீர்கல்யாணி என்றாலே எனக்கு நினைவுக்கு வருகிறது. முகத்துவாரத்தின் பாறைகளில் அமர்ந்து ஏகாந்தமாகப் பாடும் கிருஷ்ணாவின் முயற்சி வரவேற்கத்தக்கது. இயற்கையன்னை
வாரியணைப்பாள்!

இதையும் படியுங்கள்: சஞ்சயின் பணப்பாட்டு கேட்டீங்களா?

சுற்றிலும் பல கல்யாணிகள்

மார்கழி சீசன் முடிந்த கையோடு தவில் ஜாம்பவான் ஹரித்வாரமங்களம் ‘ஏ.கே.பழனிவேல், ‘ஏ.கே.பி.. ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்று நாள் இசைவிழாவை சென்னை வாணிமஹாலில் நடத்தி வருகிறார். விருதுகளும் அளிக்கிறார். இந்த வருடம் ‘கலா சிகரம்’ விருதை வித்வான் பி.எஸ். நாராயணசுவாமியும், சித்ரவீணை நரசிம்மனும் பெற்றார்கள். மெரினாவில் கூட்டம் அலைமோதியது என்றால் இங்கே காலி நாற்காலிகள் ஆட்களுக்காக காத்திருந்தன. பேச்சு கச்சேரி முடிந்த கையோடு சிக்கில் குருசரணின் கச்சேரி. அண்மைகாலமாக யோகாவில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் அவர். மெலிந்து காணப்பட்டார். ஆனால் அவரது சங்கீதம் மெலியவில்லை. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதைத்தொடும் கல்யாணியை கேட்க முடிந்தது. அவர் கல்யாணியில் சங்கதிகளை ஒன்றன்பின் ஒன்றாக அள்ளிவிட்டபோது தியாகராஜரின் ‘ஏதா உணரா’, ‘நித்திசால சுகமா’, இளையராஜாவின் ‘ஜனனி ஜனனி’.. ‘அம்மா என்றைழைக்காத’, கே.வி.மகாதேவனின் ‘மன்னவன் வந்தானடி’, என்று அத்தனை அழகு கல்யாணிகளும் என்னைச் சுற்றி சுற்றி வட்டமடித்தனர். குருசரண் சியாமா சாஸ்த்ரியின் ‘தள்ளி நின்னு’வை அனுபவித்துப் பாடினார்.

இதையும் படியுங்கள்: ”அருணா சாய்ராம் காட்டில் மழை”

அன்று இரவு அவர் பாடிய சுருட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஆந்திராகாரர்கள் கச்சேரியின் இறுதியில் அதிகம் பாடும் ராகம் இது. பாலமுரளி கிருஷ்ணா பல கச்சேரிகளை சுருட்டியோடு முடித்திருக்கிறார். அவர்கள் சம்பிரதாயம் அப்படி. ஏனோ தமிழ் சினிமாவில் இந்த ராகத்தை அதிகம் கையாளவில்லை. சிக்கிலார் சுருட்டியில், ‘கனகசபை திருநடனம்’ என்ற கோபாலகிருஷ்ணபாரதியின் அழகான பாடலை எடுத்துக்கொண்டார். அவரது வெல்வெட் குரலில் இப்பாடல் இன்னும் அற்புதமாக கேட்டது. சிதம்பரத்து ஆடலரசர் மீது கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய ஒவ்வொரு பாடலுமே கற்கண்டானவை. தனி ஆவர்த்தனத்திற்கு பின் இறுதியில் ராகமாலிகையாக வந்தது மகாகவி பாரதியின் ‘தேடி உன்னைச் சரணடைந்தேன்’. பாரதியின் இசைப்படுத்தப்படாத பாடல்கள் இன்றும் பல உள்ளன. அவையாவும் இசைபடுத்தப்படவேண்டும். அப்போதுதான் புதிய பாடல்கள் பல புழக்கத்திற்கு வரும்.

வயலின் எம்.ஆர்.கோபிநாத்தும், மிருதங்கம் ஸ்கந்த சுப்ரமணியனும் பாட்டைக் கெடுக்காமல் அனுசரணையாக வாசித்தனர்.

‘ஏய் அழகா குழிவிழறதுடி’ என்ற டயலாக் கேட்டு திரும்பினேன்.
இரண்டு டீன் ஏஜ் யுவதிகள், குருசரண் கன்னத்தில் விழும் குழியைப்பற்றி சொன்னது புரிந்தது. ரசிகர்கள் பலவிதம்!.

இதையும் படியுங்கள்: மனதை மயக்கிய மாண்டலின்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்