கிராமப் பொருளாதாரத்தின் மீது மோடியின் துல்லியத் தாக்குதல்

0
522

(நவம்பர் 19, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

500, 1000 ரூபாய் மீதான தடை கிராமப்புற மக்களைப் பாதித்த அளவு மிக அதிகம். நகரத்தில் தெருவுக்குத்தெரு வங்கிகள் இருந்தும் பணம் இல்லை என்கின்றனர். ஆனால் கிராமங்களில் இருப்பது ஓரிரு வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும்தான். இதில் கூட்டுறவு வங்கிகளில் ரூபாய் மாற்றங்களே இல்லை; ஆங்காங்கே இருக்கும் வங்கிகளில் அலைமோதிச் செல்லும் மக்கள் மோடியின் திட்டம் தந்த பாதிப்புகளைப் பகிர்கின்றனர்.
ramalakshmi
ராமலெட்சுமி:
500, 1000 ரூபாய் மீதான தடை பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இருப்பிலிருந்த 100 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செலவாகிவிட்டது. 1000 ரூபாய் நோட்டை மாற்ற ஒரு நாள் வங்கிக்குச் சென்று வேலைக்குச் செல்ல முடியாமல் போனது; அடுத்து வங்கிக்குப் போகவில்லை. ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டால் மறுநாள் செலவிற்கு என்ன செய்வது?
palaniammal
பழனியம்மாள்:
500, 1000 ரூபாய் தடையை அறிந்தவுடன் கையிலிருந்த 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியிலுள்ள நகைக்கு கடன்கணக்கில் கட்டிவிட்டேன். கறுப்புப் பணம் ஒழிந்ததோ, இல்லையோ வீட்டில் சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்புப் பணம் எல்லாம் கரைந்துவிட்டது. தற்போதைய நிலையில் சில்லறை இல்லாமல் கஷ்டம் உண்டாகியுள்ளது.
dhanam
தனம்:
நகரங்களில் தெருவிற்கு ஒரு வங்கி இருக்கும். அங்கேயே கூட்டம் அலைமோதுகிறது. கிராமப்புறங்களிலுள்ள வங்கிகளின் எண்ணிக்கை மிக சொற்பம். அதிலும் இங்குள்ளவர்களில் மிக சிலருக்குத்தான் வங்கிக்கணக்குகள் உள்ளன. எனவே பணத்தை மாற்ற, எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது. வங்கிகளில் யாரையாவது அணுகித்தான் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டியுள்ளது. சிலர் செய்வர். சிலர் சிறிதும் பொருட்படுத்தாமல் போய்விடுவர். முன்புபோல இப்போது விவசாய வேலைகளும் கிடையாது. கிடைக்கும் வேலைக்குச் சென்றால்தான் அன்றைய நாள் உணவிற்கும், செலவிற்கும் ஆகும்.
panju
பஞ்சு:
மிகப்பெரிய பாரமாக உள்ளது. சில்லறை இல்லாததால் யாரும் கடைக்கு வருவதில்லை. சிறிய அளவிலான உணவகங்களில் எப்படி 500, 1000 ரூபாய்களுக்கு சில்லறை கிடைக்கும்? சில்லறை தராததால் மக்கள் கடைக்கு வருவதே இல்லை. இதனால் அன்றாடச் செலவிற்கே திண்டாட்டமாக உள்ளது. உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு செய்முறை செய்யக்கூட 500, 1000 ரூபாய் நோட்டுகள் பயன்படாமல் போய்விட்டது.
periyasamy
பெரியசாமி:
வயதானவர்களுக்கு என இங்குள்ள வங்கிகளில் எந்த ஒரு தனி வசதியும் செய்யப்படவில்லை. என்னிடம் வங்கிக் கணக்கு இருந்தும் எந்தப் பயனும் இல்லை. அங்கு சென்று நாள் முழுக்க காத்துக் கிடக்க முடியவில்லை. பிள்ளைகள் ஏடிஎம் கார்டு இல்லாமல் வங்கிகளில் காத்துக்கிடந்து பணம் பெறமுடியாது எனக்கூறி செலவிற்குப் பணம் தந்ததால் சிரமம் இல்லை. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு சாத்தியமில்லை. அவர்களுக்கென குடும்பம் வந்தபின் நாம் அவர்களுக்குச் சுமை தராமல் இருப்பதுதான் உறவுகளுக்கு நல்லது.
ponnalagu
பொன்னழகு:
இதனால் பாமர மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவர். இங்குள்ள பலருக்கு விண்ணப்பப்படிவத்தைக் கூட நிரப்பத் தெரியாது. அவர்களுக்கு வங்கிகளில் நாளுக்கு ஒன்றாக மாற்றப்படும் விதிகளைச் சொன்னாலே குழப்பத்தில் திரும்ப எவரும் வரமாட்டார்கள். இது அவர்களின் சேமிக்கும் பழக்கத்தைக் குறைத்துவிடும். பல பேர் என்ன இது இலவசத்திற்கு நிற்பதுபோல் நம் பணத்தை வாங்க நாம் ஏன் காத்துக் கிடக்க வேண்டும் என எண்ணி வங்கி பக்கமே செல்லமாட்டார்கள். யாரும் கணக்கு இல்லாதவர்களுக்குப் பணத்தை மாற்றித்தர முன்வருவதில்லை. எப்படி வருவர்? அவர்களது ஒரு நாள் பணி கெடும் அல்லவா?
naveen
நவீன்:
இந்தத் திட்டம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டாலும், சாதாரண மக்களைப் பாதிக்காத வண்ணம் அமைந்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. நகர்ப்புறங்களில் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் அதிகம். அவர்கள் விரைவாகப் பணம் பெறலாம். ஆனால் கிராமப்புறங்களைப் பொறுத்தவரை வங்கிகள் என்பது பல கிராமங்களுக்கு ஒன்றாகவே உள்ளன. இங்கு மக்கள் தினச்சம்பளத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் சம்பளமாக வழங்கினால் மறுநாள் அவர்கள் எப்படி தினசரி உணவுப் பொருட்கள் வாங்க பயன்படுத்த முடியும்?

ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை, பற்றாக்குறை என கூறுகின்றோம். இங்கு வங்கிகளே இல்லை அப்புறம் எப்படி ஏடிஎம் மையங்கள். அப்படி இருந்தாலும் அது சிலருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடும். வங்கிக் கணக்கே இல்லாதவர்களிடம் எப்படி ஏடிஎம் கார்டுகள் இருக்கும். கிராமங்களும் இந்தியாவில்தான் உள்ளன; அங்கு வசிப்பவர்களும் இந்தியர்களே; அடுத்த முறை திட்டங்கள் தீட்டும்போது அவர்களையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவேண்டும்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்