காஷ்மீர் விவகாரம்;டிரம்ப் கூறியதில் உண்மை இருந்தால் மோடி நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டார் – ராகுல் காந்தி

0
311

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியபடி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டிருந்தால்  அவர் இந்திய நலனுக்கு எதிராக துரோகம் செய்து விட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், ஜப்பானில் நடந்த ஜி-20 மாநாட்டின்போது, காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி என்னிடம் கோரிக்கை விடுத்தார் எனத் தெரிவித்தார்.

ஆனால், அதிபர் டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும்படி மோடிக் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால் இந்தியாவின் நலன் மற்றும் 1972-ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துள்ளார்.

அப்படி செய்யவில்லை என வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்கிறது. டிரம்பை சந்தித்த போது என்ன நடந்தது என்பதை பிரதமர் மோடி வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here