காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் நீக்கம் – மோடி

0
129
Modi

“”ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் அந்த மாநில வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்தால் அந்த மாநிலத்தில் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும்தான் அதிகரித்தன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பு எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த முடிவால் இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த பார்வை மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் பார்வையும் ஜம்மு-காஷ்மீர் மீது குவிந்துள்ளது. மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய அளவில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை.

புதிய சகாப்தம் தொடங்குகிறது: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் வியாழக்கிழமை இரவு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் புதிய சகாப்தம் தொடங்க இருக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவும், 35ஏ பிரிவும் அந்த மாநில மக்களுக்கு பலனளித்தன என்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சிறப்பு அந்தஸ்தால் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம், ஊழல், பயங்கரவாதம், குடும்ப ஆட்சி ஆகியவை மட்டுமே அதிகரித்து வந்தன. வேறு எந்த வகையிலும் மாநிலத்துக்குப் பலன் ஏற்படவில்லை. 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, மத்திய அரசு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். இதனால், அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்தார் வல்லபபாய் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் கனவு நனவாகியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவை ஒருசிலர் மட்டுமே எதிர்த்தனர்.

பிரிவினையின் பிடியில் இருந்து மீட்பு: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் கருவியாக, அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் அந்த மாநிலத்தில் 42,000 பேர் பயங்கரவாதச் சம்பவங்களால் உயிரிழந்துவிட்டனர்.

மத்திய அரசு இப்போது எடுத்துள்ள நடவடிக்கை மூலம் அந்த மாநிலத்தை பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்து வந்த பல முக்கிய சலுகைகள் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் 1.5 கோடி மக்களுக்கும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அந்தக் குறை நீக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் மாநில அந்தஸ்து: பிற யூனியன் பிரதேசங்களில் அரசுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகள் அனைத்தும் இனி ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கும் கிடைக்கும். அங்குள்ள அரசுப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

அங்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான வளர்ச்சியடையும். லடாக் பகுதி தொடர்ந்து யூனியன் பிரதேசமாக இருந்தாலும், ஜம்மு-காஷ்மீர் நீண்ட காலத்துக்கு யூனியன் பிரதேசமாக இருக்காது. இப்போதைய நிலைமை தற்காலிகமானதுதான். அங்கு நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.

தேச விரோத செயல்களுக்கு இடம் கிடையாது: காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதிகளையும், பாகிஸ்தானின் சதிகளையும் முறியடிப்பார்கள். மாற்றுக் கருத்துள்ளவர்களை மதிக்கிறோம். ஆனால், தேசவிரோத செயல்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். லடாக், காஷ்மீரை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. இனி அங்கு பயங்கரவாதம் தலைதூக்க முடியாது. ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் ஏற்படும் பிரச்னை நம்முடைய பிரச்னை. அவர்களுடன் அனைத்து தருணங்களிலும் நாம் உடனிருப்போம். 

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல்: ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை, வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.

இந்தியாவின் மகுடம்: காஷ்மீரில் விமான நிலையங்கள், தரமான சாலை வசதிகள் உருவாக்கப்படும். விளையாட்டு அரங்குகள் அமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்தப்படும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அளவில் நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

காஷ்மீரில் உள்ள மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம். காஷ்மீரில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு தடை நீக்கப்படும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்கள் தயாரிப்பவர்கள் இனி காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த முன்வர வேண்டும்.

இந்தியாவின் மகுடம் போன்ற ஜம்மு-காஷ்மீர், உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலா மையமாக உருவெடுக்கும் அளவுக்கு இயற்கை எழில் நிறைந்தது.  பக்ரீத் பண்டிகையை எவ்விதப் பிரச்னையுமின்றி ஜம்மு-காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியும் என்றார் மோடி.

முன்னதாக,  வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பிரதமர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேரம் மாற்றப்பட்டு இரவு 8 மணிக்கு அவர் உரையாற்றினார். சுமார் 40 நிமிடங்கள் அவர் உரை நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here