காஷ்மீர் மத்தியஸ்தம் விவகாரம்; மோடி ‘meditate’ என்று கூறியிருப்பார், டிரம்ப் ‘Mediate’ என்று கருதியிருப்பார்: கிண்டலடித்த காங்கிரஸ் தலைவர்

0
213

காஷ்மீர் விவகாரத்தில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக டிரம்ப் கூறியதை அடுத்து  எழுந்த சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித்  கிண்டலுடன் பதிலளித்துள்ளார்.

 சல்மான் குர்ஷித் மும்பையில் தன்னுடைய, Visible Muslim, Invisible Citizen: Understanding Islam in Indian Democracy  என்ற புத்தக அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது காஷ்மீர் மத்தியஸ்தம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது 

 பிரதமர் மோடி டிரம்பை ‘ஏன் நீங்கள் தியானம் ( meditate) செய்யக்கூடாது.. என்றிருக்கலாம் டிரம்ப் அதனை தலையீடு ( mediate) கோருவதாக காதில் வாங்கியிருக்கலாம் என்று கிண்டலுடன் குறிப்பிட்டார். 

“நீங்கள் ஏன் ‘மெடிடேட்’ செய்யக்கூடாது என்று நம் பிரதமர் கேட்க விரும்பியிருக்கலாம், டிரம்ப் ஒருவேளை ‘மீடியேட்’ என்று காதில் வாங்கியிருக்கலாம். இது தொடர்புபடுத்ததில் உள்ள சிக்கலாகும், ஆனால் ராஜிய உறவுகளில் தொடர்புபடுத்தல் மிக முக்கியமானது. உங்களால் நீங்கள் நினைத்ததை சரியாக தொடர்புபடுத்த முடியவில்லை எனில் உங்களிடம் என்னமாதிரியான ராஜதந்திரம் உள்ளது.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு  செயலராக பிரமாதமான பின்னணி கொண்டவர் அவருக்காக வருத்தப்படவே முடியும் என்றார் சல்மான் குர்ஷித்.

தன் இந்த புதிய புத்தகம் பற்றி கூறிய போது, “பொதுச்சொல்லாடல் களத்திலிருந்து முஸ்லிம்கள் மெல்ல மறைந்து வருகின்றனர், இது பற்றி ஏன் இப்படி ஆனது என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. 

ஆனால் இதற்காக முஸ்லிம்களுக்கான கட்சி இந்த தேவையை நிறைவேற்றாது. சுதந்திரவாத கட்சிகளில் அவர்கள் புகலிடம் தேடலாம், ஆனால் சுதந்திரவாத கட்சிகள் முதலில் தாங்கள் சுதந்திரவாதிகள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். 

இஸ்லாம் மதம் நெகிழ்வுத்தன்மை கொண்டது. அதனைப் பின்பற்றுபவர்கள் மனம் தூய்மையாக இருந்தால் நோக்கங்கள் தூய்மையாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவு பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு உள்ளது. பெரும்பான்மையான இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது” என்றார் சல்மான் குர்ஷித்.