காஷ்மீரில் மீண்டும் மனித கேடயம் பயன்படுத்திய அரசு கல்லெறிபவர்களை விரட்ட பாதுகாப்பு படையினர் ஐந்து பேரை கேடயமாக பயன்படுத்தியதாக சம்பூரா கிராமத்தினர் தெரிவித்தனர். இதனை காவல்துறை மறுத்துள்ளது.

பாதுகாப்பு படை வாகனங்கள் முன் நான்கு பேர் அமர்ந்திருக்கும் இரண்டு நிமிட காணொளி ஜூன் 18ஆம் தேதி காஷ்மீரில் வைரலாக பரவியது. ’ஜம்மு காஷ்மீர் காவல்துறை’ என்ற எழுத்துகள் அந்த வாகனங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் சாதாரண உடையில் ஆயுதம் ஏந்திய பாதுகாவர்கள் சூழ கல்லெறிபவர்களோடு
வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கல்லெறிபவர்களுள் ஒருவர் வீடியோ எடுத்திருக்கலாம் என தெரிகிறது. “கோழை நாடான இந்தியாவைப் பாருங்கள்,” என்று ஒருவர் அந்த காணொளியில் பேசுகிறார். “நம்மவர்களை முன் வைத்தால் நாம் கல் எறியமாட்டோம் என நினைக்கிறார்கள்.”
காணொளி முடியும் போது நான்கு பேரும் சாலையின் ஓரத்திற்கு செல்கின்றனர். கற்களை தடுக்க கிரிக்கெட் மட்டையை ஏந்திக்கொண்டு பாதுகாவலர் ஒருவர் கூட்டத்தை பார்த்தவாறு நிற்கிறார். பாதுகாவலரை வெறுப்பேற்றுகின்றனர் கல்லெறிபவர்கள்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அவந்திபோரா காவல் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் சம்பூரா கிராமம் இருக்கிறது. சென்ற வாரம் அது போன்ற எந்த ஒரு சம்வமும் நடைபெறவில்லை என அப்பகுதியிச் உள்ள காவல்துறை அதிகாரிகள் மறுத்தனர். அந்த காணொளியின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முடியவில்லை என கூறிய காவல்துறை கண்காணிப்பாளர் சாஹித் மாலிக்
“அது ஒரு பொய்,” என்றார். ஆனால் அது மீண்டும் பகிரப்பட்ட ஒரு பழைய காணொளியாக இருக்கலாம் எனக் கூறினார். தங்களது படையினர் யாரும் அந்த காணொளியில் இல்லை என்றார் மத்திய காவல் படைத் தலைவர் சஞ்சய் ஷர்மா.

இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.ஆனால், அந்த காணொளியில் இருப்பதாக சொல்பவர்களும் சம்பூரா வாசிகளும் சூனிமால் மொஹல்லா பகுதியில் ஜூன் 18ஆம் தேதி மாலையில் இந்த சம்வம் நடந்ததாக சொல்கின்றனர். பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபடும் போது எதிர்ப்புகளை சந்தித்ததாகவும், அப்போது நான்கு வயது வந்த ஆண்கள் மற்றும் ஒரு சிறுவனை மனித கேடயமாக
பயன்படுத்தியதாகவும் கூறினர். ஆனால் அதில் ஒருவர் காணொளியில் காணப்படவில்லை.

இதே போன்ற ஒரு காணொளி சென்ற ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலின் போது பரவி கடுமையான எதிர்ப்புகளை கிளப்பியது. ’மனித கேடயம்’ என அழைக்கப்பட்ட அந்த காணொளியில் ராணுவ வாகனத்தின் முன்புறம் ஒருவர் கட்டப்பட்டு, ”கல்லெறிபவர்களுக்கு இதே நிலை ஏற்படும்” என்று எழுதப்பட்ட பதாகை அவரது மார்பில் பொருத்தப்பட்டிருந்தது.

தேடுதல் பணி

ஜூன் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு சூனிமால் மொஹல்லா பகுதி பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக சம்பூரா வாசிகள் கூறுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரமலான் மாத சண்டைநிறுத்தம் தொடராது என அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் அது. பாதுகாப்பு வளையத்தின் வெளிவட்டத்திற்கு சிறிது தூரம் உள்ளே இருக்கும் மெக்கானிக் ஒருவரின்
வீட்டிற்கு அருகில் அந்த காணொளியில் காணப்படும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக சொல்கின்றனர். அந்த மெக்கானிக்கின் வீட்டிற்குள் ராணுவத்தினர் நுழைந்து மெக்கானிக்கின் சிறு வயது மகன், இரண்டு உறவினர்கள் மற்றும் இரண்டு வாடிக்கையாளர்களை வெளியே நிற்குமாறு உத்தரவிட்டு பிறகு வாகனங்களுக்கு முன் வலுக்கட்டாயமாக
அமர்த்தப்பட்டதாக சொல்கின்றனர். சுற்றிவளைக்கப்பட்ட ஐந்து பேரில் அந்த மெக்கானிக்கின் மகனான 11வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் மட்டுமே சூனிமால் மொஹல்லாவில் வாழ்பவர்.

ராணுவத்தினர் அக்கிராமத்தை சுற்றிவளைத்து வீடு வீடாக சென்று தேடத் துவங்கியவுடன் கல்லெறிதல் துவங்கியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். “வீடுகளில் சோதனை நடத்தும் போது சீப்பாய்கள் யாரும் எங்களை துன்புறுத்தவில்லை. ஆனால் இந்த இளைஞர்களிடம் அத்துமீறி நடந்துகொண்டனர்,” என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறினார். படைவீரர்கள் வெளியேறும் வரை கல்லெறிதல் தொடர்ந்தது. “காவல்துறையினரும் இருந்தனர்” என்கிறார் மற்றொருவர். “கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்படுகின்றன.”

’எங்களை கேடயங்களாக பயன்படுத்தினர்’

அதிகாரி ஒருவர் தலைமையில் வந்த படைவீரர்கள், மெக்கானிக் ஷெட்டாக பயன்படுத்தப்படும் வீட்டின் முற்றத்தில் முதலில் தங்களை வரச்சொன்னதாக அந்த நான்கு வயது வந்த ஆண்களுள் ஒருவர் சொன்னார். “கல்லெறிதலை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அவர்கள் கலந்தாலோசித்தனர். பிறகு, கல்லெறிபவர்கள் முன் நாங்கள் நின்றால் படைவீரர்கள் மீது
கல்லெறியப்படமாட்டாது என்றனர். என்களை கேடயங்களாக பயன்படுத்தினர்” என்றார். இருப்பினும் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியப்பட்டன, வார்த்தைகளால் தாக்கப்பட்டனர்.

“தங்களை தூண்டும் விதத்தில் கல்லெறிபவர்கள் ஏதாவது செய்யும்போதெல்லாம் சீப்பாய்கள் எங்களை அடித்தனர்,” என்றான்
பாதிக்கப்பட்ட சிறுவன். பிறகு, சிறப்பு நடவடிக்கை குழு, மாநில காவல்துறையின் கிளர்ச்சி தடுப்பு பிரிவு மற்றும் மத்திய காவல் படையை சேர்ந்தவர்களும் ராணுவத்தினருடன் இணைந்ததாக கூறினான்.
தங்களை கல்லெறிபவர்களாக ராணுவத்தினர் குற்றம்சாட்டியதாக அந்த வயது வந்தவர் கூறினார். “நாங்கள் கல்லெறிபவர்கள் என குற்றம்சாட்டினர். ‘பாகிஸ்தான் முர்தாபாத்’ என கத்த சொன்னார்கள். நான் தவறுதலாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என சொல்லிவிட்டேன். மட்டையால் ஒருவர் என் தலையில் அடித்தார். அதன் பிறகு சிறிது நேரம் என்ன நடந்தது என்று
எனக்கு தெரியவில்லை,” என்றார் அவர்.

இரவு 9 மணி வரை பாதுகாப்பு வளையம் நீடித்ததாகவும், கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி ராணுவத்தினர் சுட்டதாகவும் அந்த வயது வந்தவர் மற்றும் அச்சிறுவன் கூறினர். ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாமிற்கு ஐந்து பேரும் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது அடையாளங்கள் பதிவு செய்து புகைப்படங்கள் எடுத்து பின்
விடுவிக்கப்பட்டனர்.

’கல்லெறிபவர்கள் அல்ல’

ஸ்ரீநகரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சம்பூரா கிராமம் புல்வானா நகரின் அருகே உள்ளது. இச்சம்பவம் அக்கிராமத்தை சேர்ந்த சிலரை அச்சுறுத்தி இருந்தாலும் பலரை தொடர்ந்து கல்லெறிய தூண்டியுள்ளது. ஜூன் 18ஆம் தேதி பலத்த கல்லெறிதலை தொடர்ந்து ராணுவத்தினர் பின்வாங்கியதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். “எந்த
அளவுக்கு இவர்கள் துன்புறுத்துகிறார்களோ அந்த அளவுக்கு கல்லெறிதல் மற்றும் பயங்கரவாதம் நோக்கி இளைஞர்கள் தள்ளப்படுவர்,” என்றார் அக்கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர்.

இச்சம்பவம் நடந்து ஆறு நாட்கள் கழித்து சம்பூரா கிராமத்தின் அருகே உள்ள மற்றொரு கிராமத்தில் தனது உறவினருடன் அச்சிறுவன் வசித்து வருகிறான். தனது தாய் மற்றும் உறவினர்கள் சூழ அமர்ந்துள்ள அச்சிறுவன் ஒரு
காணொளியை காட்டினான். அது சென்ற ஆண்டின் “மனித கேடயம்” காணொளி. அதன் அருகே பாதிக்கப்பட்டவரான ஃபரூக்தர் உடைய புகைப்படங்கள் இருந்தது.

பெரும்பாலான செய்தி அறிக்கைகளில் தானும் மற்ற நான்கு பாதிக்கப்பட்டவர்களும் கல்லெறிபவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக
அச்சிறுவன் குற்றம்சாட்டினான். “அது உண்மையல்ல. நாங்கள் எங்கள் வீட்டில் தான் இருந்தோம்,” என்றார். இச்சம்பவத்திற்கு பிறகு பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறான். “என் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்று எனக்கு நடந்திருக்கிறது. நாளை வேறொருவருக்கு நடக்கும்,” என்றான்.

கைகளால் தன் தலையை மூடிக்கொண்டு அமைதியடைந்தான். பிறகு அவனது தாயும் உறவினர்களும் பேசினர். “அவர்களை எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் கல்லெறிதல், கண்ணீர் புகைக்குண்டு வீசுதலுக்கு மத்தியில் என் மகனை அங்கு அழைத்து சென்றார்கள். நான் என் தலையில் அடித்துக்கொண்டு அவர்களை சபித்தேன்.”

அவனது உறவினர்களும் பாதுகாப்பு படையினர் மீது கோபத்தில் இருந்தனர். “கல்லெறிபவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படுவதில்லை. அப்பாவிகள் தான் இரையாகின்றனர். ஆண்கள் எல்லோரும் ஆயுதம் தூக்கிய பிறகு பெண்கள் மட்டும் தான் மிச்சம் இருப்போம். பெண்களுக்கிடையே யாரால் ஆயுதம் தூக்க முடியுமோ அவர்களும் தூக்கவேண்டும். பிறகு கவலையே இருக்காது,” என்றார் ஒருவர்.

Courtesy : Scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here