காஷ்மீரில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்படும் சிறுவர்கள்; எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் தவிக்கும் குடும்பங்கள்

0
362

3 சிறுவர்கள் பக்கத்தில் இருக்கும் தொழுகை பள்ளி வாசலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

ஃபர்கான் ஃபரூக் , மெலிந்த தேகம் கொண்ட  13 வயது சிறுவன் அவர்களில் ஒருவன். திடீரென்று அவர்கள் அருகில் வந்து நின்ற போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய ஆயுதங்களை ஏந்திய போலீசார் 3 சிறுவர்களையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டுச் சென்றனர். அப்போது ஃபர்கான் பரூக் அழ ஆரம்பித்திருக்கிறான் என்று சிறையில் இருந்து திரும்பி வந்த சிறுவர்களில் ஒருவர் நினைவு கூறுகிறான். 

ஃபர்கானை உள்ளூர் காவல்நிலையத்தில் வைத்திருந்தனர் என்று அவரின் பெற்றோர் தெரிவித்தனர். 

ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து 3000த்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை கூற அதிகாரமில்லாத மூத்த உள்ளூர் அரசாங்க அதிகாரி (பெயர் வெளியிட விரும்பவில்லை) கூறுகையில் கைது செய்யப்பட்டோரில் எத்தனை பேர் சிறுவர்கள் என்று தெரியவில்லை என்றார்.  ஆனால் 5 சிறுவர்களாவது கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்பதை வாஷ்ங்டன் போஸ்ட் உறுதி செய்தது . 

வீட்டில் இருக்கும் அனைவரும் ஒருவித பயத்துடனே வாழ்கிறார்கள் என்று ஃபர்கானின் அம்மா நசியா கூறுகிறார். என்னுடைய பையனை அவர்கள் என்ன காரணத்துக்காக கைது செய்தனர் என்று தெரியவில்லை ஆனால் சிறுவர்களையே அவர்கள் கைது செய்கிறார்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றார் அவர் . 

சிறுவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்தியாவின் உள்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பிய போது அவர்கள் பதிலளிக்கவில்லை . ஃபர்கானை காவலில் வைத்திருந்த உள்ளூர் காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி கைது  குறித்து வாஷிங்டன் போஸ்டிடம் பேச மறுத்துவிட்டார். மாவட்ட போலீஸ் அதிகாரி சிறுவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.   

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது முஸ்லிம்களுக்கு அதிகமாக வாழும் காஷ்மீர் மக்களுக்கான புதிய விடியல் என்று இந்திய பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் உண்மையில்  ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு காஷ்மீர் மக்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள் அதனால் பல போராட்டங்கள் நடந்து வருகிறது .  

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதை முன்னிட்டு பொது ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது இடங்களில் போராட்டம் நடத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் காரணங்கள் ஏதுமின்றி பல இளைஞர்களை கைது செய்துள்ளது காவல்துறை . 

பலத்த பாதுகாப்பு என்பது காஷ்மீரில் புதுசு இல்லை. இந்திய எதிர்ப்பு கிளர்ச்சி ஆரம்பித்த 1989 களிலிருந்து பலத்த பாதுகாப்பு இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த அளவுக்கு மோசமாக இருந்தது இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது இருக்கும் ஒடுக்குமுறையின் தீவிரம் இவ்வளவு நாட்களாக இருந்தது இல்லை.  

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பார்வையாளர்கள் காஷ்மீரின் நிலைமை குறித்த தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் நடப்பது கவலையளிப்பதாக இருக்கிறது என்று ஐநா அதிகாரி பெர்னார்ட் துகாய்மி கூறியுள்ளார். மக்கள் கைது செய்யப்படுவது முறையாக பதிவு செய்யப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை இந்தியா உறுதிபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கைதுகள் சட்டபூர்வமாக நடத்தப்பட்டதா என்பதை நீதித்துறை சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும், சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய உரையாடல்களை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்  இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார். 

காஷ்மீரில் நடக்கும் கைதுகள் குறித்தும்  கஷ்மீரில் வாழும் மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் அடிப்படை உரிமைகள் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யா பால் மாலிக் அரசின் முட்டுக்கட்டைகள் மக்களின் உயிரைக் காத்துள்ளது என்று கூறியுள்ளார். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில்  அமைதி நிலவுகிறது என்று  அரசு கூறிவருகிறது ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் வீடியோக்கள் நிலைமை அவ்வாறில்லை என்கிறது .  நேரில் பார்த்தவர்களும் அமைதி நிலவவில்லை என்கிறார்கள். 

அங்குள்ள மக்கள் கூறுகையில் 2016 இல் பல மாதங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல போராட்டங்கள் நடந்த போது பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துச் செய்யபடுவதற்கு முன்பு முன்னேற்பாடாக போராட்டங்கள் நிகழ்ந்துவிடாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது அதைத் தொடர்ந்து பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி கூறுகையில் பாதுகாப்பு படையினர் மீது கல் எறிவதை தடுக்கவே மக்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்தார். 

13 வயதான ஃபர்கான் மற்றும் அவரது 17 வயதான நண்பர் ஜூனையத் ஷாஃபி மிர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டு  வேறு 4 நபர்களுடன் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்று ஜூனையத் கூறுகிறார். கைது செய்யப்பட்ட 2 வது நாள் 3 வது சிறுவனைப் பற்றிய விவரங்களை கேட்டனர். அப்போது அவரைப் பற்றிய விவரங்கள் தெரியாது என்று கூறிய போது என்  கை மூட்டுகளில் அடித்தனர் என  நினைவு கூர்கிறார் ஜூனையத் . ஃபர்கானின் அம்மா நசியா அவர் சிறையில் இருந்த போது தினமும் சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் சில நாட்களே அவர் தனது மகனை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளார். நான் பார்க்கும் போதெல்லாம் என் மகன் என்னை அங்கிருந்து கூட்டி போயிடுங்கள்  என்று கேட்டான், என் மகனை அவ்வாறு பார்ப்பது மிகவும் வருத்தமான விசயமாக எனக்கு இருந்தது என்று ஃபர்கானின் அம்மா நசியா கூறுகிறார். 

வீடுகளில் ராணுவம் ரெய்டு நடத்துவதும் , மக்களை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு என் வீட்டிற்குள் ஏறி குதித்து வந்த போலீசார் என்னிடம் உங்களுக்கு எத்தனை மகன்கள் என்று கேட்டனர். என் மகன்களை வெளியே வரும்படி கூறினேன் . அப்போது என் இளைய  17 வயது மகன் டேனிஷை  கைது செய்து கூட்டி போனார்கள், 2 நாளாகியும் அவன் திரும்பவில்லை என்று வாஷிங்டன் போஸ்டிடம் கூறியுள்ளனர்   அவனது பெற்றோர் . 

மேலும் இரு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளதை வாஷிங்டன் போஸ்ட் உறுதி செய்துள்ளது. 

 காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில கைதுகள் நடந்துள்ளது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படும் போது எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்றாலும் 2 வருடங்கள் சிறையிலேயே வைக்கப்படுவார்கள்; நீதித்துறை மறு ஆய்வு செய்யமுடியாது ; தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கைது என்று மட்டும் கூறப்படும். காஷ்மீரில் பல அரசியல்வாதிகள் இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள். 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வழக்கறிஞர்கள் பலர்  கைது செய்யப்பட்டுள்ளார்கள். அப்துஸ் சலாம் ரதார் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான இவர் ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  தொலைத்தொடர்புகள் முடக்கப்பட்ட நிலையில் அவருடைய மகளால் தன்னுடைய அப்பா பற்றி 6 நாட்கள் வரைக்கும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.  

அவருடைய மகள், மற்றும் உறவினர்கள் ஶ்ரீநகர் சிறைக்கு வெளியே அவரை பார்க்கும் நம்பிக்கையில் காத்திருந்துள்ளனர். இது பற்றி அவரின் உறவினர் ஒருவர் கூறுகையில் காஷ்மீரில் வாழ்பவர்கள் அனைவரும் சிறையில் இருக்கிறோம். சிலர் உள்ளே இருக்கிறார்கள். நாங்கள் வெளியே சிறையில் இருக்கிறோம் என்றார். 

By Niha Masih and Joanna Slater

https://www.washingtonpost.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here