காஷ்மீரில் குவிக்கப்படும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர்; பதற்றப்படும் மக்கள்

0
325

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது, அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தைத் தூண்டியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், தனி அரசியலமைப்பு ஆகியன குறித்த எதிர்மறை விவாதங்கள் தீவிரமாகியுள்ள சூழலில் படைகள் குவிக்கப்படுவதே இந்தப் பதற்றத்துக்கான காரணம்.

ஆனால், இது வழக்கமான நடைமுறைதான் என்கின்றனர் காவல் அதிகாரிகள். அச்சமடையத் தேவையில்லை என்கிறது மத்தியில் ஆளும் பாஜக.

மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி – பாரதிய ஜனதா கூட்டணி அரசில் இருந்து 2018இல் பாஜக விலகியபின் அங்கு ஆளுநர் ஆட்சி அமலானது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் பிடி அங்கு அதிகமாக உள்ளது.

காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பப்படுவோர் யார்?

ஜூலை 26 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சக ஆணையின் நகல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், சட்டம் – ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் கூடுதலாக 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் காஷ்மீரில் இறக்கப்படுவர் என்று அந்த ஆணை கூறியது.

அவற்றுள் 50 கம்பெனி மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தலா 10 கம்பெனிகள் மற்றும் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் உடனான எல்லையைப் பாதுகாக்கும் சசசுத்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி) 35 கம்பெனி ஆகியன அடக்கம்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரண்டு நாட்கள் காஷ்மீரில் தங்கி அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீருக்கு அதிக அளவில் காவல் படைகளை அனுப்புவதை ஜம்மு – காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.

“10,000 கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளது மக்கள் மனதில் பதற்றம் மற்றும் பயத்தை உண்டாக்கியுள்ளது. காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும்; ராணுவ ரீதியாக அல்ல,” என மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

“ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்படும்; மாநில எல்லைகள் மறுவரையறை செய்யப்படும் என்பது போன்ற விவாதங்கள் சமீப காலங்களில் நடக்கும் சூழலில், மத்திய அரசு வழக்கத்துக்கு மாறாக எதையேனும் செய்யக்கூடும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது, ” என்று ஜம்மு – காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷா பைசல் பிபிசியிடம் கூறினார்.

“காஷ்மீருக்கு படைகள் அனுப்பப்படுவது புதிதல்ல; ஆனால், அவர்கள் வருவதற்கான நோக்கம் வருத்தம் தருவதாக உள்ளது; கைது செய்யப்பட்டு கொல்லப்படும் நிலையை நாம் இங்கு கண்டுள்ளோம். மக்கள் இறப்பதைக் கண்டுள்ளோம்; இறந்தவர்கள் திரளாகப் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுள்ளோம். சிறுபிள்ளைத் தனமான எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்கிறார் அவாமி இதிகாத் கட்சியின் தலைவர் இன்ஜினியர் ரஷீத்.

கூடுதல் படைகள் குவிக்கப்படுவது காஷ்மீரில் இருக்கும் சாமானிய மக்களை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.

“என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை; இரண்டு முன்னாள் முதல்வர்களுக்கும் தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்; அது அவர்களின் கடமை,” என்கிறார் காஷ்மீர்வாசியான அப்துல் அகாத்.

இவற்றையெல்லாம் முற்றிலும் மறுக்கிறது ஜம்மு – காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா கட்சி. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 35-ஏ தேர்தல் நோக்கத்துடன் நீக்கப்படும் என்பது தவறு என்கிறது அந்த மாநில பாஜக.

“மாநில சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது; அதற்காகவே கூடுதல் படைகள் வந்துள்ளன,” என்று கூறும் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதாகக் கூறுகிறார்.

இது ஏதும் தனி நடவடிக்கை அல்ல. படைகள் இறக்கப்படுவதும், ஏற்கனவே பணியில் இருக்கும் படையினர் திரும்ப அனுப்பப்படுவதும் வழக்கமான ஒன்றுதான் என ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி ரவிதீப் சாஹி தெரிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக பல பிரிவினைவாத தலைவர்களும் கடந்த இரு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாதம் பொறுத்துக்கொள்ளப்படாது என்று காஷ்மீருக்கு இரு முறை பயணம் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நன்றி : bbc


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here