காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்று இந்திய ஊடகங்களுக்கு கூற மத்திய அரசு ஹெலிகாப்டரில் பத்திரிகையாளர்களை ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஶ்ரீநகர் முழுக்க சுற்றிக் காட்டியது. இயல்பு நிலையில் இருந்தால் பக்ரித் நாளில் ஶ்ரீநகர் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்; ஆனால் நேற்று திங்கள்கிழமை பக்ரித் நாளில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிய சாலைகளோடு, கடைகள் மூடப்பட்டு இருந்தது . இந்த நிலையைத்தான் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்று மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இயல்பு நிலை திரும்பி விட்டது என்று பல ஊடகங்களும் கூறிகொண்டிருக்கின்றன.
எது இயல்பு இல்லை என்பதை நாம் இங்கே பார்ப்போம்; இண்டெர்நெட் , தொலைத் தொடர்பு வசதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது . குழுக்களாக மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 144 தடையின் போது செயல்படுத்தப்படும் பெரும்பாலான தகவல் ஆதாரங்களை தடை செய்துள்ளது அரசு . அங்கு வாழும் மக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துமனைகள், ஏர்போர்ட்டுக்குச் செல்ல அங்குள்ள மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்ட போது நகரம் அமைதியாக இருந்தது. மக்களின் அடிப்படை தேவைகள் பறிக்கப்பட்டதால் வந்தது அந்த அமைதி . இந்த அமைதி இயல்பு நிலை இல்லை.
பக்ரித் திருநாளில் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்ல முடியவில்லை. பிரிந்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசமுடியவில்லை. வீட்டைவிட்டு வெளியே போக முடியவில்லை. அடிப்படை தேவையான மருந்துகள் வாங்குவதற்கு டெல்லி அல்லது பக்கத்தில் இருக்கும் வேறு இடத்துக்குச் செல்ல முடியவில்லை.
மக்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களால் செய்ய முடியாத போது இயல்பு நிலையில் இருக்கிறது என்று கூறுவது பொய்யாகவே இருக்கிறது .
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு , 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கபட்டதால் மக்கள் சந்தோசமாக இல்லை என்பதை அரசு ஏற்க மறுக்கிறது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் பேரணிகள் , போராட்டங்கள் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன . அம்மாதிரியான போராட்டங்கள் நடக்கவில்லை என்று காஷ்மீர் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பு தலைவர் அஜித் தோவல் காஷ்மீர் வீதிகளில் உலா வருவதும், மக்கள் சிலரிடம் பேசுவதுமான வீடியோ காஷ்மீர் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற பிரச்சாரத்துக்காக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது .
காஷ்மீரில் இயல்பு நிலை இருக்கிறது என்றால் ஏன் காஷ்மீர் மக்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை அரசு தடை செய்திருக்கிறது. ஏன் மக்கள் மருத்துவமனைகளுக்கு, பள்ளிக்கூடங்களுக்கு, தங்கள் வேலைகளுக்குச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. ஏன் இண்டெர்நெட் தடை செய்யப்பட்டிருக்கிறது?
காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை இருந்திருந்தால் தொலைத் தொடர்புகளுக்கு தடை விதித்திருந்தால் அதுசரியே. தரைவழி தொலைத் தொடர்புகளை துண்டிப்பது என்பது பெரும்பாலான நாடுகளில் நடக்காது. ஒரு சில நாடுகளே தடை விதித்துள்ளது. சீனா, மியான்மர், சிரியா , இஸ்ரேல் நாடுகள் மட்டுமே தரைவழி தொலைத் தொடர்புகளுக்கு தடை விதித்த நாடுகள் ஆகும். வேறு நாடுகளில் போர் நடக்கும்போது கூட தரை வழி தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதில்லை ,ஏனென்றால் அவை மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது .
காஷ்மீரில் இண்டெர்நெட்டை முடக்கியது மனித உரிமையை பறிப்பது ஆகும். எல்லா தகவல் தொடர்புகளையும் துண்டிப்பது என்பது புதுவகையான அடக்குமுறையைக் குறிக்கிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது அங்குள்ள மக்களுக்கு உடன்பாடில்லை என்பதால் சிக்கல் வரும் என்று அரசு அஞ்சுகிறது அதனால்தான் இத்தனை தடைகளை அரசு விதித்திருக்கிறது.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு என்பது பிரச்சனையாகும். ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகள் மீது தடை விதிக்கும் போது சட்டத்துக்குட்பட்டு, நீதிமன்ற மேற்பார்வையுடன் திட்டமிட்டு செயல்பட்டிருக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் மீது வித்திக்கப்பட்டிருக்கும் தடைகள் அவர்களை கற்காலத்துக்கெ கொண்டு சென்றிருப்பது குறித்து ஒரு சககுடிமகனாக யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறு காஷ்மீர் மக்களுக்கு அரசு செய்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோமேயானால் எதிர்காலத்தில் எந்தவொரு ஜனநாயக உந்துதலையும் அடக்குவதற்கு நாமே அனுமதி கொடுத்தது போலாகிவிடும் .
எதிர்க்கட்சிகளும், சிவில் சமூகமும் காஷ்மீர் பிரச்சனையில் சிக்கல்களை உருவாக்கியிருக்கும் மத்திய அரசுக்கு துணை நிற்கிறது. அரசிடம் கடினமான கேள்விகளை கேட்பது என்பது முக்கியமானது – உண்மையிலேயே கேள்வி கேட்பதுதான் தேசபக்தி – தரைவழி தொலைத் தொடர்புகளை தடை செய்தது எதனால்? இதனால் மனிதர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்று அரசு தனது அடக்குமுறை பற்றி யோசித்ததா? அவற்றை தணிக்க அரசு ஏதாவது செய்ததா? அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை மேற்பார்வையிட சட்டரீதியான, நாடாளுமன்ற அமைப்புகள் கேட்குமா? எவ்வளவு நாட்கள் காஷ்மீர் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் , உலகத்திலிருந்தும் தொடர்பில்லாமல் வைத்திருக்கப்படும்?