காஷ்மீரில் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் முடக்கியுள்ளது மத்திய அரசு; கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்

0
272

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.  இணையதளத்தில் கருத்து தெரிவிப்பது ஒருவரின் அடிப்படை உரிமை, காஷ்மீரில்  தனிநபர் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளது. இணைய தள சேவையை சிறிது நாட்களுக்கு துண்டிக்கபடுவதற்கு அனுமதி இருக்கிறது . ஆனால் இத்தனை காலம் துண்டிக்கப்பட்டிருப்பது என்பது கருத்து சுதந்திரத்தை, மனித உரிமைகளையும் முடக்குவதாகும் . இணைய தள துண்டிப்பு பலமாதங்களாக அமலில் இருந்ததால்  இது குறித்து நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது .  

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் ஜம்மு, காஷ்மீர் நிர்வாகம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எவ்வித காலவரையறையும் இல்லாமல் இணையதள சேவைகளை முடக்குவது இந்தியாவின் தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது 

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்  சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த  370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும் பத்திரிகைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தற்போது சில இடங்களில் படிப்படியாக இணையதள சேவை வழங்கப்படும் வரும் நிலையில், இன்னும் பல இடங்களில் இணையதள சேவை வழங்கப்படாமல் உள்ளது. தேவையில்லாத வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையிலும், அமைதியை நிலைநாட்டும் வகையிலும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு கூறி உள்ளது.

ஆனால், இது தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி, 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள்மீது நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஏற்கனவே  விசாரணை நடத்தி முடிந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கி உள்ளது.

தீர்ப்பில், காஷ்மீர்  மாநிலத்தில்,  பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையுடன் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சமநிலைப்படுத்த எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், இணையம் என்பது கருத்துரிமையின் ஒரு பகுதி என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது  நீதிமன்றத்தின் கடமை, மற்றும் அரசின் கடமையும் கூட,

இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது அரசியல் சாசனம் 19ன் கீழ் வருகிறது. இது ஒருவரின் அடிப்படை உரிமை, சுதந்திரமான பேச்சின் ஒரு பகுதியாகும், என்று கூறிய நீதிபதிகள், இணையதளம் முடக்கத்தால் அங்குள்ள மக்கள்  பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், பிரிவு 144 சிஆர்பிசி உள்ளிட்ட அனைத்து தடை உத்தரவுகளையும் குறித்து  மக்களுக்கு அரசு அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும்   என்றும் அதிரடியாக கூறி உள்ளது.

மேலும்,  இணையதளம் தடை விதிப்பது குறித்து அரசு  மக்களுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், காஷ்மீர் மாநிலத்தில் , இணையதள தடையை நீக்குவது குறித்து 7 நாளில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here