மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நேற்று (வெள்ளிக்கிழமை, ஜூன் 01) மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனக்
கூறி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தன. இந்த வழக்கை
விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் தெரிவித்தபடி வரைவு செயல் திட்டத்தை (ஸ்கீம்) மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மே 14-ஆம் தேதி 14 பக்க வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் யு.பி. சிங் தாக்கல் செய்தார். சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன . அதன்படி திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மே 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் யு.பி.சிங் தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்; இது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவதற்கு பதிலாக, மே 29-ஆம் தேதி முன்கூட்டியே தொடங்கியது. ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது . இதனால், விவசாயிகள் தரப்பில் மீண்டும் அதிருப்தி ஏற்பட்டு, அடுத்தகட்டப் போராட்டம் நடத்தும் சூழல் நிலவியது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பது தொடர்பான அரசிதழ் முறைப்படி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. அதில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட செயல் திட்ட வரைவு இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமலுக்கு வந்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் : முக்கிய அம்சங்கள் –

1.காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இனி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையே அணுக வேண்டும். உதவிக்கு மட்டும் மத்திய அரசை நாடலாம். இதில் முடிவு மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

2. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூருக்கு பதில் தில்லியில் செயல்படும்.

3. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும்.

4. காவிரி நீர்ப் பங்கீடு, நீர் திறப்பு, கண்காணிப்பு, மேற்பார்வை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்படுகிறது.

5. நீர்ப் பங்கீட்டில் உள்ள சிக்கல்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும்.

காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DenWoWRVQAE--co

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்