சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
இன்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் ஜூலை 2-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் ஜூன் 1-ஆம் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து,காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு கடந்த ஜூன் 22-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டார்.

இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தங்கள் உறுப்பினர்களை நியமித்தன.ஆனால் கர்நாடகம் மட்டும் உறுப்பினர்களை நியமிக்காமல் தாமதப்படுத்தி வந்தது.

தங்கள் மாநில உறுப்பினர்களின் பெயர்களை கர்நாடக அரசு பரிந்துரைக்காததால், அவர்களின் பெயர்களை மத்திய அரசு அறிவிப்பில் குறிப்பிடாமல் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டது.

இந்த நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பின் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசின் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங்கையும், ஒழுங்காற்று குழுவுக்கு காவிரி நீர்ப்பாசன கழக நிர்வாக இயக்குனர் எச்.எல்.பிரசன்னாவையும் உறுப்பினர்களாக நியமிக்க மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்து உள்ளது.

இந்த ஆணையத்தின் முதலாவது கூட்டத்தில் மத்திய நீர் ஆணையம், தேசிய நீரியல் நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட மாற்றத்தின்படி காவிரியைச் சார்ந்துள்ள மாநிலங்களுக்கான நீர் பங்கீடு தொடர்பாக விரிவான விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here