ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றன போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், அரசியல் மற்றும் தேர்தலுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும் விவசாயிகளுக்காகவே  போராடுவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பதால் பிரதமர் மோடி தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். பிரதமரின் செயல்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்ற ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லை; புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதற்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ”இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்”. என தமிழிசை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here