2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருந்த வகையில், 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குற்றவாளிகளுடன் இணைந்து போலீசார் வழக்குகளை முடித்து வைத்துள்ளதாக சந்தேகம் எழுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர்-களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவர அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, அனைத்து குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதிகப்பட்சமாக காஞ்சிபுரத்தில் மட்டும் 28 ஆயிரத்து 573 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி முரளிதரன், காவல்துறையும், குற்றவாளிகளும் கூட்டு சேர்ந்து இவ்வளவு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக சந்தேகம் எழுப்பினார். மேலும், இந்த வழக்குகளை விசாரித்த மாஜிஸ்ட்ரேட்டுகளும் இயந்திரத்தனமாக செயல்பட்டு வழக்குகளை முடித்து வைத்துள்ளதாக நீதிபதி முரளிதரன், அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், இதுபோன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைத்தது குறித்து ஜனவரி 25 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி.க்கு நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here