”விஷ்ணுப்பிரியா கைதிகளின் முன்னிலையில் காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டார்.”, என்று யுவராஜ் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோவில் கூறியிருக்கிறார். காவல்துறையில் சரிபாதி அளவு ஆண்களுக்கு இணையாக பெண்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் இப்படியான ஆணாதிக்க, சாதிய மனநிலையில்தான் காவல்துறை இருக்கிறது. காவல் துறையில் பெண் காவல் அதிகாரிகளுக்கு எதிரான இந்தப்போக்கு தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் திலகவதியும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியான திலகவதி தற்போது சாதிய பிரச்சனைகளுக்கு எதிராகவும், மாற்று சினிமாவை முன்னெடுப்பதிலும், எழுத்தாளராகவும் களப்பணியாற்றி வருகிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…

”நான் காவல்துறையில் பணியாற்றும்போதும் இந்த மாதிரியான சாதிய ஆணவம் இருந்திருக்கு. ஒரு மாவட்டத்துல இருவேறு சாதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டால் அந்த இரு சாதியினரை தவிர்த்து நடுநிலையான ஒருவரைத்தான் அந்த இடத்திற்கு அனுப்ப வேண்டும். அப்பத்தான் அந்த மோதலின் தீவிரம் குறையும். ஆனால், பெரும்பாலும் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் எதுவாக இருந்தாலும் எந்தச் சாதியினருக்குள் பிரச்சனையோ அதில் ஒரு சாதியினரைத்தான் அனுப்புகிறார்கள். இது அந்தப் பிரச்சனையை இன்னும் அதிகமாக்குகிறது.”, என்று காவல் துறையில் சாதியின் ஆதிக்கத்தை போட்டு உடைக்கிறார். காவல்துறையில் சாதி என்பது ஆழப்பதிந்திருக்கிறது என்கிறார் இவர்.

சாதியைப் பார்த்தே காவல்துறையினருக்குப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. மேலும் மேலதிகாரி சொல்லிவிட்டால் அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இந்த மனநிலைமை காவல்துறையில் மேலோங்கி இருக்கிறது. செங்கல்பட்டில் திலகவதி டிஐஜியாக இருந்தபோது, ஒரு காவல்நிலையத்தில் அங்கு பணிபுரியும் காவலர்களின் விவரங்களில் சாதியின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. “ஏன் சாதியின் பெயரை எழுதியுள்ளீர்கள்?” என்று திலகவதி கேட்டும் மேலதிகாரிகள் அதை ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டனர். இப்படி எழுதப்பட்டதற்கு காரணமே சாதிப் பிரச்சனைகள் எழும்போது மோதல் நடக்கும் சாதியைச் சேர்ந்த காவலரைச் சம்பவ இடத்திற்கு அனுப்புவதற்கே. ஆனால் அதற்கு பின்பு சாதியின் பெயரை எழுதக்கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டது.

சாதியம் மட்டுமல்லாமல் ஆணவமும், ஆணியப்போக்கும் பரவிக்கிடக்கிறது காவல் துறையில். விஷ்ணுப்பிரியா கோகுல்ராஜின் வழக்கை விசாரித்ததுகூட வெறும் கண்துடைப்புத்தான். அவரை வெறும் ‘கையெழுத்து’ போட மட்டும் உபயோகித்திருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது. போலியானவர்களைக் கைதுசெய்ய விஷ்ணுப்பிரியா தூண்டப்பட்டிருக்கிறார். இது ‘பெண்தானே’ என்ற மனப்போக்கு இருந்ததாலே இது நிகழ்ந்துள்ளது. சில இடங்களில், “இவள் என்ன செஞ்சிடப் போறா?” என்ற எண்ணமும் இருக்கிறது.

காவல்துறையில் பெண்களை மட்டப்படுத்த இரண்டு முறைகளைக் கையாளுவதாக திலகவதி கூறுகிறார். “ஒன்று, நம்மள அவங்க வீட்டுப் பொண்ணுங்க மாதிரி பாத்துப்பாங்க. பெரிய அளவிலான பிரச்சனைகளை பெண்களிடம் ‘பாதுகாப்பு’ கருதி ஒப்படைக்க மாட்டார்கள். இதுவே ஒரு ஊக்கமின்மைதான். இன்னொன்று, “இவ என்ன செய்துடுவா?” என்று சில வழக்குகளைக் கையாள தர மாட்டார்கள்” என்று காவல் துறையின் ஆணாதிக்கத்தைத் தெளிவாகக் கூறுகிறார்.

விஷ்ணுப்பிரியாவிடம் கோகுல்ராஜின் வழக்கை ஒப்படைத்ததே தவறு என்றும் கூறுகிறார். ”யுவராஜின் ஆடியோவிலிருந்து ஒன்று தெளிவாகிறது. விஷ்ணுப்பிரியாவை மேலதிகாரிகள் ஆட்டிப்படைத்திருக்கிறார்கள். டி.எஸ்.பியாக அவர் பதவியேற்றே சில மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இப்படியான வழக்கைக் கொடுத்தது தவறு. எல்லோருக்கும் நல்லவராகவும், மென்மையாகவும் நடந்திருக்கிறார் விஷ்ணுப்பிரியா” என்று திலகவதி கூறுகிறார். ஆம், யுவராஜ், “இந்த வழக்கை முழுமையாக நீங்களே கையாண்டால் நான் சரண்டர் ஆகிறேன்” என்று ஆடியோவில் கூறியிருக்கிறார். “நான்தான் கையாளுகிறேன். எனக்குப் பின்னால் யாரும் இல்லை” என்று விஷ்ணுப்பிரியா தடாலடியாக சொல்லாதது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

”நான் காவல்துறையில் இருந்தபோது பல இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு அப்படியே நடக்கும் பெண்களுக்குத்தான் வாய்ப்புகள் தரப்படுகின்றன. நேர்மையாக, சுயமாக செயல்படும் பெண்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை. என்னைவிட தகுதி குறைவானவர்களைப் பல மாநாடுகளுக்கு அனுப்புவது, உயர் பதவிகள் வழங்குவதை நான் நேரே பார்த்திருக்கிறேன். அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன். சுதந்திரமாக செயல்பட்டால், “இந்த வேலைய மட்டும் பாரு” என்று நேராக சொல்லிவிடுவார்கள்.” என்று தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரி தனக்கு நேர்ந்த அவலங்களையும் கூறுகிறார்.

காவல் துறையில் பெண்களுக்கு போதிய அளவு உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், மனவலிமைக்கு அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் இல்லை. “விஷ்ணுப்பிரியா நேர்மையான திறமையான அதிகாரி என்பதில் மாற்றம் இல்லை. அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. வீடுகளிலும் பெண்களுக்குப் பிரச்சனை. காவல்துறையில் வரும் பெண்களுக்கு மனவலிமை முக்கியம்.” என்று கூறும் திலகவதி, வீட்டில் பெண் காவலர்களுக்கு ஒத்துழைப்பு இல்லை என்றும் சொல்கிறார்.

ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் காவல்துறையில் இருந்தாலும் குடும்பப் பொறுப்பை மனைவிதான் பார்க்க வேண்டும். இதிலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும். “இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒன்றில் தெளிவு வேண்டும். பெண்கள் பெண்மை, மென்மை இரண்டிலிருந்தும் வெளியே வரவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இடம் இருக்காது” என்று திலகவதி காவல் துறையில் பெண்கள் மிளிர வழி சொல்கிறார்.
தொடர்புடைய கட்டுரை:
மனச்சோர்வு உண்டாவது எதனால்? மனம் திறக்கும் பெண் போலீசார்