காவலர்களின் எஜமானர்கள் பொதுமக்கள்தான். நாம் அவர்களுக்கு பணி செய்வதற்காகத்தான் இருக்கிறோம் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக காவல்துறையினர் பொதுமக்கள் மிகவும் கொடூரமாக தாக்குவதுபோன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அடிக்கடி பகிரப்பட்டுவருகிறது. இதனால் மக்களுக்கு காவல்துறையினர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் ரவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “காவல்துறையினர் பொதுமக்களை தாக்குவது போன்ற வீடியோக்களை நிறைய பேர் எனக்கு அனுப்பி அதுகுறித்து கேட்கின்றனர். காவல்துறையினர் பொதுமக்களை அடிக்கக்கூடாது. நான் 7 ஆண்டுகளில் 4 மாவட்டங்களில் எஸ்.பியாக பணிபுரிந்துள்ளேன். அடிப்பதால் எந்தவிதமான பயனும் இல்லை. அடிப்பதனால் குற்றவாளியிடம் இருந்து உண்மையை வரவைக்க முடியாது. அடிப்பதனால் நிரபராதிதான் குற்றவாளி என்று கூறிவிடுவான். நாம் Scientific Investigation மூலமாக குற்றங்களை கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் ஊரடங்கை மீறினால் அவர்களிடம் அன்பாக பேசி திருத்தும் வகையில் அறிவுரை சொல்லவேண்டும். அதைவிட்டு ஆக்ரோஷமாக அவர்களிடம் பேசுவது, அடிப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. தற்காலத்தில் ஒருசில காவலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. எனவே , காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

காவலர்களின் எஜமானர்கள் பொதுமக்கள்தான்; நாம் அவர்களுக்கு பணி செய்வதற்காகத்தான் இருக்கிறோம். நான் காவலன் என்ற இருமாப்போடு இருப்பதற்கு இந்த சீருடை அல்ல. பொதுமக்கள் நம்மைத் திட்டனால் கூட நாம் பொறுமையாக இருக்கவேண்டும். பொதுமக்களுள் ஒருவரை அடிக்கும்போது ஓராயிரம் பேர் எதிரியாக உருவாகிவிடுவார்கள். காவல்துறையினர் அத்துமீறி நடந்தால் பொதுமக்கள் மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவேண்டும்.

சாத்தான்குளம் சம்பவம் குறித்து தற்போது பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீதி விசாரணை நடந்துகொண்டிருப்பதால் அதுகுறித்து நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை. காவல்துறையினர் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். காவலர்கள சீருடை அணிவது நம்மலை நாமே உயர்த்துவதற்காக அல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்பதை உணரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here