காலை 7 மணியிலிருந்து இரவு 7 வரை ஓட்டு போடலாம்

0
305

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் மிக முக்கியமான நாள் இது. அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை கணித்து ஒரு விரல் புரட்சி செய்யும் நாள். எனவே, எந்த வேலை இருந்தாலும் மறக்காமல் வாக்குச்சாவடிக்கு போய் வாக்களிக்க தவறாதீர்கள். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அடங்குவர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக சூறாவளி பிரசாரம் செய்தனர். பிரசாரம் நேற்று முன்தினம் (4ம் தேதி) இரவு 7 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிளவுஸ், பிபிஇ உடை, சானிடைசர் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து வாக்களிக்க சவுக்கு கட்டைகள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1.58 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் நேற்று மதியம் முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வாக்கு எந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக இன்று காலை 5.30 மணிக்கு அரசியல் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்.

அதன்படி, ஒவ்வொரு மின்னணு இயந்திரத்திலும் தலா 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்படும். பின்னர் பதிவான வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மீண்டும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் வாக்களிக்க 7 மணிக்கு தயார் நிலையில் வைக்கப்படும். மாதிரி வாக்குப்பதிவின்போது சரியாக வேலை செய்யாத மின்னணு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு புதிய இயந்திரம் பயன்படுத்த பெல் என்ஜினீயர்கள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தயார் நிலையில் இருப்பார்கள்.

முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று பிற்பகல் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் இன்று (6ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இன்று, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவேளை இல்லாமல் வாக்குப்பதிவு நடக்கும். இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்கப்படும்.

அதன்படி வாக்காளர்கள் மாஸ்க் அணிந்துதான் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டு போட வர வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு வெப்பநிலை சோதனை, சானிடைசர் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மையத்தில் ஒரு கையுறை வழங்கப்படும். கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம். அவர்கள் பிபிஇ கிட் உடை அணிந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,28,69,955 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் 3,09,23,651 ஆண்களும், 3,19,39,112 பெண்களும், 7,192 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் வாக்களிக்க எல்லாம் ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும். அதன்படி 1,29,165 மின்னணு இயந்திரம், 91,180 கட்டுப்பாட்டு இயந்திரம், 91,180 விவிபேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம்) பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 4,17,521 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 1,58,233 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 23,200 துணை ராணுவ படை வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

மொத்தமுள்ள 88,936 வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதம் அதாவது 46,203 மையங்களில் சிசிடிவி வெப்கேமரா பயன்படுத்தபடும். 8,014 மைக்ரோ அப்சர்வர்கள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் 10,813, மிகவும் பதட்டமானவை 537 என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கூடுதல் பாதுகாப்பு இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தேர்தல் இணையதளத்தில் தனியாக அப் உள்ளது. அதன்மூலம், வாகன வசதிகளை (உபர் கால்டாக்சி) இலவசமாக பெறலாம். இந்த வசதி சென்னை, கோவை, திருச்சியில் மாவட்டத்தில் மட்டும் உள்ளது.

80 வயதை கடந்தவர்களும் இந்த வசதியை பெற்று வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்களிக்கலாம். அதேபோன்று, பொதுமக்கள் வாக்களிக்கும் மையங்களில் தற்போது கூட்டம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் தேர்தல் இணையதளம் மூலம் தெரிந்து, அதற்கு ஏற்றபடி வாக்களிக்க வரலாம். எவ்வளவு ஓட்டுப்பதிவாகி உள்ளது என்பதையும் இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். 80 வயதுக்கு மேல் உள்ள 1,04,282 பேர் தபால் வாக்கு போட விண்ணப்பம் அளித்தனர். இதில் 1,03,203 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர். அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் 28,531 விண்ணப்பித்ததில் 28,159 பேரும், கொரோனா நோயாளிகள் 28 பேரும் தபால் வாக்கு அளித்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் 4,91,027 பேர் தபால் வாக்குக்கான விண்ணப்பம் வாங்கியுள்ளனர். இதில் 2,00,592 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர். இவர்கள் மே மாதம் 2ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்கு அளிக்கலாம். தமிழகத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் பெண்கள் மட்டுமே வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு தொகுதியில் 4 மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று பதிவாகும் வாக்கு விவரம் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவானது என்று தெரிவிக்கப்படும் என்று கூறினார். தமிழகத்தில் வாக்களிக்க தகுதி உள்ள அனைவரும் மறக்காமல் இன்று கட்டாயம் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். உங்கள் வாக்குரிமையை ஒரு விரல் புரட்சி மூலம் ஏற்படுத்துங்கள்.

* வாக்காளர் அட்டை இல்லையா?
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, பாஸ்போர்ட், வங்கி அல்லது தபால் புத்தகம், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, ஊரக வேலைவாய்ப்பு அட்டை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு அட்டை, ஓய்வூதிய அட்டை, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் அட்டை, எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு வழங்கப்படும் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.

* நீங்கள் எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும்?
புதிதாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்த 1,39,395 பேருக்கும் விரைவு தபால் மூலம் வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற 3,538 பேருக்கு தனியாக அவர்கள் பயன்படுத்தும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பலருக்கு இன்னும் பூத் சிலிப் வரவில்லை என்ற புகார் வந்துள்ளது. அது சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1950 என்ற எண்ணில் வாக்காளர்கள் தாங்கள் எந்த பூத்துக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டால் விவரம் தெரிவிக்கப்படும். 1950 என்ற எண்ணுக்கு முன்னால் அந்தந்த மாவட்டத்தின் எஸ்டிடி கோட் நம்பர் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

* இன்று இரவு பறக்கும் படை வாபஸ்
தேர்தல் நடைபெறுவதால் இன்று அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த தொகுதியிலும் இதுவரை தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. அதிக பணம் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட அனைத்து தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேர்தல் ரத்து குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். இன்று இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு சோதனை வாபஸ் பெறப்பட்டு விடும். அதேநேரம் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 2ம் தேதி வரை நீடிக்கும்.

* கள்ள ஓட்டு போட்டால்..?
ஒருவரின் வாக்கை மற்றவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டதாக புகார் எழுந்தால், அந்த நபருக்கு டெண்டர் ஓட்டு போட அனுமதிக்கப்படும். அதாவது, வாக்குச்சீட்டில் அவர் ஓட்டு போட வேண்டும். அது சீல் வைக்கப்பட்டு, வாக்கு  எண்ணிக்கையின்போது சமபலத்துடன் வேட்பாளர்கள் இருந்தால் அந்த ஓட்டு சீட்டு எண்ணிக்கையில் சேர்த்து, வெற்றி வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்கப்படும்.  அதேபோன்று, நான் ஒரு சின்னத்துக்கு வாக்களித்தேன், ஆனால் ஓட்டு  இயந்திரத்தில் வேறு சின்னத்துக்கு பதிவாகியுள்ளது என்று யாராவது புகார் அளித்தால், அவரிடம் எழுதி (அபிடவிட்) வாங்கப்படும். பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள ஏஜென்டுகள் மூலம் மின்னணு இயந்திரம் சோதனை செய்யப்படும்.  அவர் தவறான புகார் அளித்திருந்தால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும். அவர் அளித்த புகார் சரியாக இருந்தால், இதுபற்றி உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு  நிறுத்தப்பட்டு, வேறு மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here