(November 29, 2015)

நவம்பர் 30-ஆம் தேதி பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு பாரிஸில் நடக்கவிருக்கிறது. ‘பருவநிலை மாற்றம்’ என்ற உடன் அது ‘அறிவாளிகள்’ பேச வேண்டியது, நமக்கு எதுக்குய்யா இதெல்லாம்? என ஒதுங்குவது தெரிகிறது. கொஞ்சம் இருங்கள். பருவநிலை மாற்றத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். முதலில் சென்னை நகரத்தில் இருப்பவர்கள் பருவநிலை மாற்றத்தை எப்படி புரிந்து கொள்வது? என்ன செய்தால் பருவநிலை மாற்றத்தை தடுக்கலாம். வெரி சிம்பிள். பொது போக்குவரத்தை முடிந்த அளவு உபயோகிப்பதை பழக்கப்படுத்திக்கணும். “பஸ் இல்லை, கூட்டமா இருக்கு, ரோட் சரியில்லை”, என அடுக்கடுக்கான குறைகள் தமிழக பொது போக்குவரத்தில் இருந்தாலும், அதை மக்களும் நிர்வாகமும் ஒன்றிணைந்து சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அரசு பேருந்துகளை பயன்படுத்துபவர்கள் 50,00,000 பேர். இவர்களுக்கு 3,500 பேருந்துகள் தான் உள்ளன என்பது நிர்வாகத்தின் பெரிய குறை. 30,00,000 பேர் ஆட்டோக்களை பயன்படுத்துகிறார்கள். மீதம் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை பயன்படுத்துகிறார்கள். இவர்களே 8,00,000 கார்களை பயன்படுத்துகிறார்கள். ஒரு ஆளுக்கு ஒரு கார் என்ற வீதத்தில் சென்னை மக்கள் கார்களை பயன்படுத்துகிறார்கள்.

ChartGo

வீட்டுக்கு ஒரு கார், ஒரு பைக் என்ற நிலைமை மாறி ஆளுக்கு ஒரு கார், ஒரு பைக் என்ற மனநிலைமை மேல்தட்டு மக்களுக்கு இருக்கிறது. இதுதான் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ‘வீட்டுக்கு ஒரு கார்’ என கொண்டுவந்தது போல், வெளிநாடுகளில் பீக் நேரத்தில் காரினை பயன்படுத்தினால் அபராதம் கொண்டுவந்தது போல் சென்னைக்கும் கொண்டு வந்தால் நல்லது. ஏலியட்ஸ் பீச்சில் ஞாயிற்றுக்கிழமை கார் பயன்படுத்த கூடாது என்பதெல்லாம் நல்ல முன்மாதிரி.

சென்னையில் உள்ள அடித்தட்டு மக்கள்தான் பொது போக்குவரத்தை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். மிகவும் அரிதாக, மாற்றத்தை விரும்பும் மேல்தட்டு மக்களும் பயன்படுத்துகிறார்கள். பொது போக்குவரத்தை மேம்படுத்த அரசாங்கம் யோசிக்க வேண்டும். அதுவும் சென்னை சாலைகள், பேருந்துகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் அரசாங்கம் தனி கவனத்தை செலுத்தியே ஆக வேண்டும். சென்னை மழையில் சாலைகளும், அரசு பேருந்துகளும் பல்லை காட்டி இளித்ததை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

மக்களும் ஆடம்பரத்தை விரும்பாமல் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலனுக்காக சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகள், தொழிலாளர்கள், காசு வந்தவுடன் கார் வாங்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளவர்கள் ஆகியோர் தாங்கள் வைத்துள்ள கார்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

தொடர்புடைய கட்டுரை: ஒரே காரில் கோர்ட்டுக்கு வரும் நான்கு நீதிபதிகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்