கார்ப்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

0
545

உள்நாட்டு மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கோவாவில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”நிதி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் மேட் வரியை தற்போதைய 18.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 சதவீதமாக குறைத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ”புதிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரியை குறைப்பது என்ற முடிவை இன்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கார்ப்பரேட் வரி, 30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

”மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 2019-20 நிதி ஆண்டின் வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 1, 2019 அல்லது அதற்கு பிறகு பதிவாகும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு , 15 சதவீதத்தில் வருமான வரி செலுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

”2019 ஜூலை 5-ஆம் தேதிக்கு முன்பு, தாங்கள் வெளியிட்ட பங்குகளை, மீண்டும் தாங்களே வாங்கிக்கொள்ளும் பை-பேக் முறையில் பொது அறிவிப்பு வெளியிட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்கனவே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிறுவனங்களுக்கு எந்த வரியும் கிடையாது” என்று நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here