தப்பித்தார்கள் மக்கள்: லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

0
431

சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும்போது ஆங்காங்கு சுங்கச்சாவடி என்ற பெயரில் நிறுத்தி காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஐந்து நாட்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நடந்த இந்த வேலைநிறுத்தத்தில் பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. என்றாலும் காய்கறி, பழங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்தால் வட மாநிலங்கள் பாதிக்கப்பட்ட அளவிற்கு தமிழ்நாடு பாதிக்கப்படவில்லை. என்றாலும் தொடர்ந்து வேலைநிறுத்தம் நடந்தால் பழங்களின் வரத்து குறைந்து விலை இரட்டிப்பாகும் என்கிறார் கோயம்பேடு மார்க்கெட் மேனேஜ்மெண்ட் கமிட்டி உறுப்பினர் பழக்கடை ஜெயராமன். அடுத்த வாரத்தில் ஆயுத பூஜை பண்டிகை வர உள்ளதால் பழங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய மொத்த வியாபார விற்பனை நிலவரப்படி பழங்கள் ஒரு கிலோவிற்கு 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை ஏறியுள்ளது.

இதுபோலவே காய்கறியின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. வேலைநிறுத்தத்தின் பாதிப்பு 20 சதவீதம் மட்டுமே உள்ளது என்கிறார் கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலாளர் காதர். ஆனால் வேலைநிறுத்தம் தொடரும்பட்சத்தில் காய்கறிகளின் விலை கண்டிப்பாக இரட்டிப்பாகும் என்றும் கூறினார்.

இந்தப் போராட்டத்தால் மத்திய அரசுக்கு 40 ஆயிரம் கோடி இழப்பு என்று சொல்கிறார்கள். லாரி உரிமையாளர்களுக்கு ஆறாயிரம் கோடி இழப்பு என்று சொல்கிறார்கள். மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்று யார் சொல்லுவது? பொருட்கள் கிடைக்காமல் அல்லல்படுவதைப் பற்றி யார் பேசுவது?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்