காதல் திருமணம் புரிந்தோர்,  தங்களது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவதற்கான அறிவுரைகள் குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

 இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அண்மையில் வெளியிட்ட  உத்தரவு:
தமிழகம் முழுவதும், தற்போது ஆதார் அடிப்படையிலேயே மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காதல் திருமணம் புரிந்து கொண்டோர், புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு ஏதுவாக, அவர்களது பெயர்களை சம்பந்தபட்ட நபரின் பெற்றோர், தங்களது குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கக் கோரும் போது, சில பெற்றோர் நீக்க மறுப்பதாகவும், பெயரை நீக்கி சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் துறைக்கு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

திருமணத்தின் போது ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்து இருக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்வதற்கு பெற்றோரின் சம்மதம் தேவை என்ற நிபந்தனை இல்லை. எனவே, தம்பதியர் தங்களது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ தங்களது பெற்றோர்களது குடும்ப அட்டைகளில் இருந்து பெயரை நீக்கக் கொள்ள உரிமை பெற்றவர்கள்.

அதன், அடிப்படையில், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், அவரவர் பெற்றோரது குடும்ப அட்டையில் இருந்து, தங்களது பெயர்களை நீக்கிக் கொள்ள ரூ.100 மதிப்புடைய முத்திரைத்தாளில் தம்பதி இருவரும் , பதிவு பெற்ற முத்திரைத்தாள் பதிவாளர் முன்னிலையில், பெற்றோர்களது குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயர்களை நீக்கிக் கொள்ளலாம். 
மேலும், இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இருவரும் பொறுப்பு என கையெழுத்திட்ட உறுதிமொழி பத்திரத்தை, பெயர்களை நீக்கக் கோரும் மனுவுடன் இணைத்து, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.காதல் திருமணப் பதிவுச் சான்றிதழ் மட்டுமே தம்பதியினர் திருமணம் செய்து கொண்டதற்கான சட்டரீதியான ஆவணமாகும். 

எனவே, தம்பதியினர் அவரவர் பெற்றோர்களது குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசு விதித்துள்ள நிபந்தனைகளுடன் திருமணப் பதிவுச் சான்றிதழையும், 

புதிய மின்னணு குடும்ப அட்டைக்கான மனுவுடன் இணைத்து சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கும் அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என அதில்
குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here