(செப்டம்பர் 3, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

எனக்கும், வேதாளத்துக்கும் நடுவில் காரசார விவாதம் போய்க் கொண்டிருந்தது. இடம், பெசன்ட் நகர் கடற்கரை. வேதாளத்துக்கு தெரிந்த நபர்கள் அங்குண்டு. வேதாளத்துக்கு மட்டும் ரகசியமாக அங்கு சுண்டக்கஞ்சி கிடைக்கும். வேதாளம் தாகம் தீர்க்க போனபோது நானும் ஒட்டிக் கொண்டேன்.

காலை நேரம் என்பதால், கடற்கரையில் உள்ள கடைகள் அடைத்து கிடக்க, அதன் மறைவில் கடைக்கு ஒன்றும், இரண்டும் ஜோடியாக ஒதுங்கியிருந்தனர். அதைப் பார்த்ததும் பேச்சு, ஒருதலை காதல் கொலைகளின் பக்கம் தாவியது.

வேதாளம் இரைந்து, “இந்த கொலைக்கெல்லாம் தமிழ் சினிமாவும் பொறுப்பேற்கணும்” என்றது.

“ஏன்?” என்றேன் நான். முடிந்தவரை உசுப்பி, வேதாளத்திடமிருந்து அதன் கருத்தை உறிஞ்சுவதுதான் என்னுடைய நோக்கம். வழக்கமான நிருபர் புத்தி. வேதாளம் சொல்லத் தொடங்கியது.

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமால என்ன வருதோ, அதைத்தான் மக்களும் பிரதிபலிக்கிறாங்க. சமூகத்தைப் பார்த்துதான் சினிமா எடுக்கிறேnம்ங்கிறதை சில விஷயங்களில் ஒத்துக்க முடியாது. பெண்கள் மீதான வன்முறையும் அப்படித்தான்.”

“நான் கொஞ்சம் மரமண்டை… புரியுற மாதிரி சொல்றியா?”

“மொதல்ல சினிமா யதார்த்த்துக்கும் சமூக யதார்த்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை புரிஞ்சுக்கணும். எப்படின்னா… ஒரு பொறுக்கி… வேலை வெட்டிக்கு போகாம காலையில எழுந்ததும் தன்னைப் போலவே பொறுக்கிட்டு திரியிற பசங்களை கூட்டிட்டு பஸ் ஸ்டாப்ல பொண்ணுங்களை கிண்டல் பண்ண வந்திடறான். பிளஸ் டூ படிக்கிற பொண்ணுகிட்ட லவ் லட்டரை கொடுத்து, அவங்க டீச்சர்கிட்ட குடுக்க சொல்றான்… அவனை நீ என்ன பண்ணுவா? இந்த சமூகம் என்ன பண்ணும்?”

“செருப்பாலயே அடிக்கும்.”

“கரெக்ட். அதுதான் சமூக யதார்த்தம். ஆனா, சினிமால, இதே விஷயத்தை ஜனங்க சிரிச்சிகிட்டே ஏத்துப்பாங்க.”

“அப்படீங்கிற…?”

“நான் மேல சொன்ன, வேலைவெட்டிக்கு போகாம டீச்சருக்கு லவ் லட்டர் கொடுக்கிறது வேற யாருமில்லை, வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல வர்ற ஹீரோதான். சமூகத்துல குத்தமா பார்க்குற ஒரு விஷயத்தை ஹீரோ திரையில செய்யும் போது, அது காமெடியா, சாகசமா பார்க்கப்படும். காலங்காலமா சினிமா சில விஷயங்களை அழுத்தமா ஜனங்க மனசுல பதிய வச்சிருக்கு. முக்கியமா ஹீரோ எவ்வளவு பொறுக்கியா இருந்தாலும், ஹீரோயின் அவனைத்தான் காதலிச்சாகணும்… அதுதான் விதி. சொஸைட்டி மைண்ட் இதை ரொம்ப காலத்துக்கு முன்பே ஏத்துக்க ஆரம்பிச்சிடுச்சி. அதனால, ஹீரோ ஹீரோயினையோ வேற பொண்ணுங்களையோ என்னதான் கிண்டல் பண்ணுனாலும், தப்பா நடந்துகிட்டாலும் அதை ஆடியன்ஸ் சாதாரணமா எடுத்துப்பாங்க. அப்படி எடுத்துக்கிற மைண்டை இந்த சினிமா அவங்களுக்குள்ள ஏற்கனவே திணிச்சிடிச்சி.”

“நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கு. இதுக்கு என்னதான் மாற்றுவழி…?”

“சினிமால ஹீரோ செய்யிற விஷயங்களைப் பார்க்கிறப்போ, நிஜத்துல இதே மாதிரி ஒருத்தன் நம்மகிட்ட நடந்துகிட்டா என்ன பண்ணுவோம்னு யோசிக்கணும். நம்ம சகோதரிகிட்ட நடந்துகிட்டா என்ன பண்ணுவோம்னு யோசிக்கணும். அப்பதான் ஹீரோ திரையில பண்ணுறது எவ்வளவு பெரிய தப்புங்கிறது தெரியும். ஆனா, நாம அப்படி யோசிக்கிறதில்லை, ரசிக்கிறோம். எல்லோரும் ரசிக்கிற அந்த விஷயத்தை படம் பார்க்கிற வயசுப்பசங்க, தியேட்டருக்கு வெளியே வந்து அப்ளை பண்றான். ஹீரோ மாதிரியே பொண்ணுங்களை கிண்டல் பண்றான். தான் காதலிக்கிற பொண்ணு தன்னையும் காதலிக்கணும்னு எதிர்பார்க்கிறான். இல்லாமப் போனா கோபமாயிடறான்… அந்தப் பொண்ணு தன்னை காதலிக்கிறதுதான் அந்த பெண்ணோட கடமைங்கிற மாதிரி அவனுக்கு ஆவேசம் வருது… அப்படியும் கேட்காம போனா கொலை பண்ணிடறான்… இதையும் சினிமாதான் கத்துத் தருது.”

“எப்படி?”

“ஹீரோயினைப் பார்த்து, நான் உன்னை காதலிக்கிறேண்டி… அது ஏன் உனக்குப் புரியலைன்னு கத்தாத எந்த தமிழ் ஹீரோவாவது இருக்காரா? சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவெல்லாம் இதே மாதிரி ஏகப்பட்ட காட்சிகள்ல நடிச்சிருக்காங்க. திருமலையிலகூட இப்படியொரு காட்சி வரும். ஒருத்தன் ஒரு பெண்ணை காதலிச்சா அவளும் திரும்ப காதலிக்கணுமா என்ன? அவன் உண்மையிலேயே அவளை காதலிச்சாலும், எவ்வளவுதான் யோக்கியனா இருந்தாலும், அவனோட காதலை ஏத்துக்கலாமா வேண்டாமாங்கிறது அவளோட சாய்ஸ்…. அவளோட சுதந்திரம். ஒருவேளை அந்தப் பொண்ணு யோக்கியனை நிராகரிச்சிட்டு ஒரு அயோக்கியனை காதலிக்கலாம். எதுவா இருந்தாலும் அது அவளோட சாய்ஸ். அந்த சுதந்திரத்தில் தலையிட எவனுக்கும் அதிகாரமில்லை.”

“கரெக்ட்தான்…”

“ஆனா, சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோவை ஹீரோயின் காதலிச்சே ஆகணும். அதை ஒவ்வொரு பாயிண்டலயும் சினிமா வலியுறுத்திகிட்டே இருக்கும். அதை நிஜத்துல அப்ளை பண்ணும்போது சிக்கலாயிடுது.”

“சினிமா என்ன செய்யணும்னு சொல்ற…?”

“முதல்ல பொண்ணுங்களை மதிக்கக் கத்துக்கணும். அதாவது அவங்க சுதந்திரத்தை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிற படத்துல ஒரு பாட்டு வருது. சிம்புவே பாடியிருக்கார். நீ என்னை காதலிக்காம போனா கொன்னேபுடுவேன்னு… நமக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்தா பதிலுக்கு அவளுக்கும் நம்மை பிடிச்சாகணுங்கிற மைண்ட்ல வளர்ந்து வர்ற சிம்பு மாதிரி ஆள்கள் இந்த மாதிரிதான் பாட்டுப் பாடுவாங்க. இப்போ தெருபூரா சிம்புவா இருக்கானுங்க… பெண்களை நினைச்சா கவலையாயிருக்கு.”

இதையும் படியுங்கள் : கபாலி கொள்ளையும், கும்பகர்ண அரசும்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்