காதலால் கசிந்துருகிய இந்திய அரசியல்வாதிகள்

0
1117

திருமதி மவுண்ட்பேட்டனுடன் ஜவஹர்லால் நேரு
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை அந்தரங்கமானது என்றாலும், சாதாரண மனிதர்களின் காதல்களே சமூகத்தில் விவாதிக்கப்படும்போது, அரசியல்வாதிகளின் காதல்கள் பேசுபொருளாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன.
அரசியல்வாதிகளின் கட்சிகள் வேறாக இருக்கலாம், கொள்கைகளும், கருத்துக்களும், கோணங்களும் மாறுபடலாம், பரஸ்பரம் ஒருவரையொருவர் வார்த்தைகளால் சாடிக்கொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உள்ளது.
அதனால்தான் அரசியல்வாதிகள், தங்கள் எதிரிகளை தாக்குவதற்கு ‘காதல் விவகாரங்களை’ பகிரங்கபடுத்துவதில்லை. காரணம் அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது அவர்களின் ரகசியத்தை பகடி செய்தால் அதன் விளைவு தன்னுடைய அந்தரங்கம் அம்பலமாகலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இருக்கலாம்.
ஒருசில விதிவிலக்குகள் தவிர, இந்திய அரசியல்வாதிகள் இந்த எழுதப்படாத ஒப்பந்தங்களை மீறுவதில்லை. கண்ணாடி வீட்டின்மீது கல்லெறிந்தால் அது உடைந்து கீழே நிற்பவரின் தலையையும் பதம் பார்க்கலாம் என்பதாகவோ, இல்லை தாங்கள் நின்று கொண்டிருப்பதும் ஒரு கண்ணாடி வீடுதான் என்ற காரணமாகவோ இருக்கலாம்.

news 4.001

காதல் என்பதே கண்ணாடி வீடுதானே என்று சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் அஜய் சிங். “வெளிநாடுகளிலும் கண்ணாடி வீடுகள் இருக்கின்றன. சட்டென்று நினைவு வருவது கிளிண்டனாக இருக்கலாம். அங்கு கல்லெறிவதற்கு யாரும் தயங்குவதில்லை. ஆனால் இந்தியாவில் அரசர்களுக்கு அதாவது தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் இருப்பதாக ஒருவிதமான நம்பிக்கை இருக்கிறது.”
“குற்றவாளிகளுக்கு இடையேயான ரகசிய ஒப்பந்தத்திற்கு இத்தாலியில் ‘ஓமார்டா’ என்று சொல்வார்கள். அதாவது, நான் உன்னைப் பற்றி பேசமாட்டேன், நீ என்னைப் பற்றி பேசாதே என்ற ‘ஜெண்டில்மேன்’ அக்ரிமெண்ட் அது! தங்களது அரசியல் எதிர்களை கண்மூடித்தனமாக தாக்கிப் பேசினாலும், இந்த ஒப்பந்தத்தை மட்டும் ஒருபோதும் மீறமாட்டோம்,
அதில் மட்டும் மெளனம் காப்போம் என்று இந்திய அரசியல்வாதிகள் ‘காதல் ரகசிய காப்பு பிரமாணம்’ மேற்கொண்டிருப்பார்கள் போலும்…”

news 4.002

அன்பு செய்ய அச்சம் என்ன?
காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனை
அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவதில்லை என அவர்களுடன் ஊடகங்கள் ஒரு வகையான சமூக உடன்பாடு வைத்துள்ளார்களோ என்றும் தோன்றுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல், காதல் விவகாரங்களைப் பற்றிய பொது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஊடகங்கள் தவிர்த்துவிடுகின்றன.
அரசியல்வாதிகளின் ஊழல், ஏமாற்று, மோசடி போன்ற விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்கள் கடுமையானதாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரங்களை மட்டும் பட்டும்படாமல் பேசிவிட்டு நகர்ந்து போகும் மனப்பான்மையே காணப்படுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் ஆசிரியர் இந்தர் மல்ஹோத்ரா பிபிசியிடம் பேசுகையில், “உலகில் செய்தித்தாள்களும், ஊடகங்களும் எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக புட்டுப்புட்டு வைத்தாலும், தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சற்றே தள்ளி வைத்துவிடுகிறார்கள்” என்று கூறினார்.

“நேரு மாமா என்று அனைவருடனும் அன்புடன் அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேருவை எடுத்துக் கொள்ளுங்கள், மவுண்ட்பேட்டனின் மனைவியுடன் அவருக்கு இருந்த உறவு பகிரங்கமாக அனைவராலும் பேசப்பட்டது. பின்னர், நேரு வாழ்ந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும்கூட சாரதா மாதா என்ற பெண் சந்நியாசியுடன் நேருவின் பெயர் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. நேருவின் மரணத்திற்குப் பிறகு, வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திலும், இது பற்றி எழுதப்பட்டிருந்தது” என்று கூறுகிறார் இந்தர் மல்ஹோத்ரா.
“நேருவுக்கு முன்னரே, காந்தியைப் பற்றிய தகவல்களும் வெளிப்படையாகவே பேசப்பட்டது. பிரம்மச்சரிய சோதனையை மேற்கொள்வதற்காக, இரு இளம்பெண்களுக்கு நடுவில் காந்தி படுத்து உறங்குவார் என்று காந்தியைப் பற்றி அவருக்கு நெருங்கிய ஒருவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.”
“60களில் காந்தியின் பாலியல் இச்சை மற்றும் பிரம்மச்சரியம் பற்றி நிர்மல் குமார் போஸ் எழுதிய புத்தகம் வெளிவருவதற்கு முன்னர் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்காது என்றே கருதலாம். அதற்கு முன்னர் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி யாரும் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்ததில்லை” என்கிறார் இந்தர் மல்ஹோத்ரா.
news 4.003

பேத்திகள் மனு (இடது) மற்றும் அபா (வலது) ஆகியோருடன் காந்தி
அண்மையில் காலமான குல்தீப் நய்யர், நேரு-எட்வினா மவுண்ட்பேட்டன் பற்றிய ஒரு சுவையான சம்பவத்தை பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அவர் பிரிட்டனில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியபோது, ஏர் இந்தியா விமானத்தின் விமானி மூலம் நேரு, எட்வினாவுக்கு தினசரி கடிதம் அனுப்பிவந்ததாக கூறியிருந்தார். அதற்கு பதில் கடிதங்களும் இந்தியாவுக்கு பறக்கும்.
எட்வினாவின் பேத்தி ரைம்சே-இடம் குல்தீப் நய்யர் பேசிக் கொண்டிருந்தபோது, உங்கள் பாட்டிக்கும், நேருவுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்ற தர்மசங்கடமான கேள்வியை அவர் கேட்டாராம். அதற்கு, “இருவருக்கும் இடையே அபரிதமான காதல் இருந்தது” என்று ரைம்சே பதிலளித்திருக்கிறார்.
நேரு எட்வினாவுக்கு எழுதிய கடிதங்களில் சில வெளியாகின. ஆனால் எட்வினா, நேருவுக்கு எழுதிய கடிதங்கள் என்னவானது என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
நேருவின் மகள் இந்திரா காந்தியிடம் எட்வினாவின் கடிதங்களை தான் பார்வையிட விரும்புவதாக குல்தீப் நய்யர் கேட்டதற்கு, அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

‘நேரு-பத்மஜா நாயுடுவின் காதல்’
எட்வினாவுக்கு மட்டுமல்ல, சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு மீதும் நேருவின் மனதில் காதல் பொங்கி வழிந்தது. இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கேத்தரின் ஃபைங்க் இதைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பத்மஜாவுக்கும், நேருவுக்கும் இடையிலான காதல் பல ஆண்டுகள் நீடித்ததாக, இந்திராவிடம் விஜயலட்சுமி பண்டிட் கூறியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்மஜாவை நேரு திருமணம் செய்துக் கொள்ளாததற்கு ஒரே காரணம், தனது மகள் இந்திராவின் மனம் வருத்தப்படக்கூடாது என்பது மட்டுமே. நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் வெளியிட்ட நேருவின் ‘தேர்ந்தெடுத்த படைப்புகள்’ என்ற புத்தகத்தில், நேருவுக்கு பத்மஜா எழுதிய அவரது காதல் கடிதங்களையும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கோபால் மீது இந்திராவுக்கு சீற்றமும் ஏற்பட்டிருக்கிறது.
1937இல் காதலால் கசிந்துருகி நேரு பத்மஜாவுக்கு எழுதிய கடிதத்தில், “உனக்கு 19 வயது (அப்போது உண்மையில் பத்மஜாவின் வயது 37)… எனக்கோ 100 அல்லது அதைவிட அதிக வயது என்று வைத்துக் கொள். நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்று என்னால் தெரிந்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டிருந்தார்.

news 4.004ஒருமுறை மலாயாவில் இருந்து பத்மாஜாவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “உன்னை புரிந்து கொள்வதற்காக நான் இறக்கப் போகிறேன், உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கவும், உன்னை என் கையில் எடுத்துக்கொள்ளவும், உன் கண்களைப் பார்க்கவும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்” (சர்வபள்ளி கோபால் எழுதிய Selected Works of Nehru என்ற புத்தகத்தின் பக்க எண் 694இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது).
இந்திரா-பெரோஸ் திருமண சச்சரவு
“பெரோஸ் காந்தி என்னுடைய நெருங்கிய நண்பர். அவரை பார்ப்பதற்காக வரும் சிநேகிதிகளைப் பற்றி சொல்வார், அதில் எனக்கு தெரிந்த பெண்களும் இருந்தார்கள். அதில் ஒருவர்தான் இம்மி என்ற மிக அழகான பெண். அவருடைய தந்தை உத்தரப்பிரதேச மாநில அமைச்சராகவும் பதவி வகித்தவர்” என்கிறார் இந்தர் மல்ஹோத்ரா.
“தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக, தனது குழந்தைகளுடன் இந்திரா, டெல்லியில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு வந்துவிட்டார். அந்தப்புறமோ, பெரோஸின் அந்தரங்கமான அந்தப்புரமாகிவிட்டது. அவரது உறவுகளும், காதல் தொடர்புகளும் விரிவடைந்து, வலுவடைந்தன. இந்திரா, தன்னை விட்டு விலகிச் சென்ற சந்தர்பத்தை, பெரோஸ் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார்.”

news 4.005

இம்மி என்ற பெண், இந்திராவின் வாழ்க்கையில் ஒரு உறுத்தலாகவே இருந்தார்.
பெரோஸ் காந்தியின் மறைவுக்கு பிறகு நடந்த ஒரு சம்பவத்தை இந்தர் மல்ஹோத்ரா நினைவுகூர்கிறார். “இந்திரா காந்தி பிரமதராக பதவி வகித்த சமயம் அது. எமர்ஜென்சி அமலில் இருந்த அந்த சமயத்தில், மனு ஒன்றை கொடுப்பதற்காக, பெரோஸின் காதலி எம்மி, பிரதமர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் தலைவர் தேவ்காந்த் பரூவாவிடம், ‘இதோ போகிறாளே இந்தப் பெண் தான், என் வாழ்க்கையை நாசம் செய்தவள்’ என்று இந்திரா கூறினார்.”
தன் குடும்பத்து ஆண்களில், தந்தை நேரு, கணவர் பெரோஸ், மகன் சஞ்சய் என மூன்று தலைமுறையினரின் காதல் கதைகளை அறிந்த இரும்பு பெண்மணி இந்திராவின் மனமும் இரும்பாகியிருக்கும் என்றே தோன்றுகிறது.

news 4.006

ராஜீவ்-சோனியா அந்நிய மண்ணில் பூர்த்த அபூர்வ காதல்
ராஜீவ் காந்தி-சோனியா காந்தியின் காதல் பற்றியும் ஊடகங்களில் பெரிய அளவு பேசப்படவில்லை. ரஷித் கித்வாயி எழுதிய சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் அவர்களின் காதல் கதையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
பிபிசியிடம் பேசிய கித்வாயி, “ராஜீவ் காந்தி, ஜவஹர்லால் நேருவின் பேரன் என்று ஆரம்பத்தில் சோனியாவுக்கு தெரியாது. கேம்பிரிட்ஜில் உணவகம் ஒன்றில் சோனியா தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். அங்குதான் ராஜீவை முதன்முதலாக சந்தித்தார்.”
சோனியா காந்தியின் வார்த்தைகளிலேயே ராஜீவைப் பற்றி சொல்கிறார் கித்வாயி. “முதல் பார்வையிலேயே ராஜீவ் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. ராஜீவ் காந்தி ஒரு கவிதை எழுதி அனுப்பினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறகு என்ன? இருவரும் அடிக்கடி சந்தித்தோம். அப்போதுகூட அவர் நேருவின் பேரன் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒருமுறை இந்திரா காந்தி பிரிட்டன் வந்திருந்தபோது, பத்திரிகைகளில் அவரது புகைப்படம் வெளியானபோதுதான் ராஜீவின் குடும்ப பின்னணி தெரிந்தது, எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது.”
“ஒரு முறை இந்திராவை சந்திக்க கிளம்பிச் சென்றுவிட்ட போதிலும், பயத்தால் பாதி வழியிலேயே வீட்டிற்கு திரும்பிவிட்டார் சோனியா. பிறகு ராஜீவின் வற்புறுத்தலால் இந்திராவை சந்தித்தபோது, அவருடன் பிரெஞ்சு மொழியிலேயே பேசினார். இந்திராவுக்கு பிரெஞ்சு மொழி நன்றாகவே தெரியும். ஆனால், சோனியாவுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது. சோனியா, தனது காதலைப் பற்றி தந்தையிடம் சொன்னதும், அதற்கு அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார், ராஜீவை திருமணம் செய்துக்கொள்ள அவர் சம்மதிக்கவில்லை” என்று கித்வாயி கூறுகிறார்,
“சோனியாவை பெண்கேட்டு ராஜீவ், சோனியாவின் வீட்டுக்கு சென்றபோது முதலில் மறுத்த தந்தை, பிறகு உங்கள் இருவருக்கும் இடையில் எந்த அளவு காதல் இருக்கிறது என்று பார்க்க விரும்புகிறேன், எனவே இருவரும் ஒரு வருடத்திற்கு பார்த்துக் கொள்ளக்கூடாது என்று உத்தரவு போட்டார். ஆனால் ஓராண்டுக்கு பிறகு சோனியா, தந்தையிடம் திருமணம் பற்றி பேசியபோதும், அவர் திருமணத்தை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. எனவே மகளின் திருமணத்திலேயே அவர் கலந்துக் கொள்ளவில்லை” என்கிறார் கித்வாய்.
news 4.007

குல்தீப் நய்யருடன் ரெஹான் ஃபஜல்
சஞ்சய் காந்தி-ருக்சானா சுல்தானா
நேருவின் பேரனும், பெரோஸின் இரண்டாவது மகனுமான சஞ்சய் காந்தியின் காதல் அனுபவங்களும் பிரபலமானவை. சஞ்சயுடன் பல பெண்களை தொடர்புபடுத்தி பேசப்பட்டாலும், ருக்சானா சுல்தான் என்ற பெயர் அடிக்கடி அடிபட்டது.
“ருக்சானா சுல்தான் மிகவும் பிரபலமானவர் இல்லையென்றாலும், சஞ்சய் காந்தி அவரை முன்னிலைப்படுத்தி, பிரபலமாவராக மாற்றினார். ருக்சானாவின் அலங்காரமும், ஆடை உடுத்தும் பாணியும், உயர்ந்த குதிகால் கொண்ட காலணிகளும் அந்த காலத்தில் அதிகம் அறிமுகமாகாதவை என்பதால் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். மற்றவர்களை அதிகாரம் செய்யும் குணம் கொண்டவர் ருக்சானா” என்கிறார் ரஷித் கித்வாயி.
“சஞ்சய் மீது ருக்சானாவின் உரிமையை காங்கிரஸை சேர்ந்த பலரும் நேரிடையாக பார்த்திருக்கிறார்கள். சஞ்சய்-ருக்சானா இடையிலான உறவுக்கு ஒரு பெயர் கொடுப்பது கடினமானது. ஏனெனில் சஞ்சய்க்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. ஆனால், மேனகாவுடன் திருமணமான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல பெண்களின் மனம் சுக்குநூறாக உடைந்து போனது” என்கிறார் கித்வாயி.
news 4.008
மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி
அடல் பிஹாரி வாஜ்பேயி-ராஜ்குமாரி கெளல்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் ‘குடும்பம்’ பற்றி பிரபலமாக பேசப்பட்டாலும், அது அவருடைய பிரபலத்தையும், செல்வாக்கையும் பாதிக்கவில்லை என்றே சொல்லலாம். ”நான் திருமணமாகாதவன், பிரம்மச்சாரி அல்ல; எனக்கு சிறந்த மனைவியின் தேடல் இருந்தது போல திருமதி.கெளலுக்கும் சிறந்த கணவனுக்கான தேடல் இருந்தது” போன்ற வாய்பேயின் வார்த்தைகள் பிரபலமானவை.
வாஜ்பேயி கல்லூரியில் படிக்கும்போது ராஜ்குமாரி கெளல், அவரது நெருங்கிய சிநேகிதியாக இருந்தபோதிலும், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியாது. ராஜ்குமாரி வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், ராஜ்குமாரியின் திருமணத்திற்கு பிறகு, அவருடைய கணவரின் வீட்டிலேயே வாஜ்பேயி வசித்தார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ராஜ்குமாரி இவ்வாறு கூறியிருக்கிறார், “எங்கள் இருவருக்குமான உறவு பற்றி பிறருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நானும் வாஜ்பேயும் ஒருபோதும் கருதியதேயில்லை.”

news 4.009
ராஜ்குமாரி கெளல் இறந்தபோது அதைப்பற்றி ஊடகங்களில் பெரியளவில் பேசப்படவில்லை. ஏனெனில் அவர் பொதுவெளியில் அறிமுகமாகாதவர், அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் யாருக்கும் தெரியாது. ராஜ்குமாரி கெளலின் சிநேகிதி தலத் ஜமீர் என்பவருடன் பிபிசி பேசியது.
“ராஜ்குமாரி மிகவும் அழகான காஷ்மீரி பெண். பெயருக்கு ஏற்றாற்போல் ராஜகுமாரி போலவே இருப்பார். பருமனானவர். மிகவும் நன்றாக பேசுவார். இனிமையான குரல் வளம் கொண்டவர். வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அங்கு வசித்தவந்த ராஜ்குமாரியை சந்திக்க நான் செல்லும்போது அங்கிருக்கும் அனைவரும் அவரை மாதாஜி என்று அழைப்பதை பார்த்திருக்கிறேன். அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று அவர் அக்கறையாக பார்த்துக் கொள்வார். என்ன சமைக்கவேண்டும் என்று சமையல்காரர், ராஜ்குமாரியிடம் வந்து கேட்பதை பார்த்திருக்கிறேன்” என்கிறார் தலத்.
“தொலைகாட்சி பார்ப்பதில் மிகவும் விருப்பமுடையவர் ராஜ்குமாரி. எல்லா தொலைகாட்சித் தொடரையும் விடாமல் பார்ப்பதோடு, அதைப்பற்றி விவாதிப்பார். பிரபல பாடகர் ஜாவேத் அக்தர் பிறந்தபோதே அவரை மருத்துவமனையில் சென்று பார்த்ததாக ராஜ்குமாரி சொல்வார். குவாலியரில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜாவேத் அக்தரின் தந்தை, ஜானிசார் அக்தர் அவருக்கு ஆசிரியர். பாடல்களில் நாட்டம் கொண்ட ராஜ்குமாரிக்கு ஜாவேத் அக்தர் மி்கவும் பிடித்ததானவர்.”

news 4.010

ஜார்ஜ் பெர்னான்டஸ் – ஜெயா ஜெட்லி
முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லியின் தொடர்பு அரசியல் வட்டாரங்களில் வெளிப்படையாகவே பேசப்பட்டது. மனைவி லைலா கபீருடனான முரண்பாடுகள் முற்றியபோது, ஜெயா உடனான பெர்னாண்டஸின் உறவுகள் பற்றிய கேள்விகள் எழுந்தன.
பெர்னான்டசுடனான உறவு எப்படிப்பட்டது என்ற கேள்விக்கு ஜெயா ஜெட்லியின் பதில் இது, “1979இல் ஜனதா அரசு கவிழ்ந்தபோது, ஜார்ஜ் தனித்து விடப்பட்டார். மொரார்ஜிக்கு ஆதரவு கொடுத்த ஜார்ஜ், அதே நாளன்று, அரசுக்கு எதிராக வாக்களித்ததாக அவரது சமாஜ்வாதி கட்சி நண்பர்கள் கருதினார்கள்.”
“ஜார்ஜின் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தார். வெளிநாட்டில் நீண்ட காலம் வசித்தார். என் கணவருடன் ஜார்ஜ் வேலை பார்த்ததால், நாங்கள் இருவரும் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன” என்று சொல்கிறார் ஜெயா.
“பணி நிமித்தமாக ஜார்ஜ் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். அப்போது தன் மகனை எங்கள் வீட்டில் விட்டுச் செல்வார். இதுபோன்ற பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள அவரது குடும்பத்தில் வேறு யாரும் முன்வரவில்லை. இப்படித்தான் எங்கள் குடும்பங்களுக்கு இடையில் தொடர்பு ஏற்பட்டது.”

news 4.011
முலாயமின் இரண்டாவது திருமணம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் செய்யும் வரையில், முலாயம் சிங் யாதவுக்கு இரண்டாவது மனைவி இருப்பது யாருக்குமே தெரியாது.
அஜய் சிங் இவ்வாறு கூறுகிறார், “லக்னெளவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் எங்களுக்கு விஷயம் தெரிந்தது. அந்த பெண் அவரது மனைவி இல்லை, ஆனால் மனைவியைப் போன்றவர். அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். ஆனால் இதைப்பற்றி எழுதவோ, பேசும் வாய்ப்போ ஏற்பட்டதில்லை.”
“ஆனால் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தபோது, அவர் முதல் மனைவி இல்லை என்றும், அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் என்பதும் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்டது” என்கிறார் அஜய் சிங்.
news 4.012
ரஷீத் கித்வயுடன் ரெஹான் ஃபஜல்
முதிர் பருவத்தில் முளைத்த காதல்
ரஷீத் கித்வாயி இவ்வாறு கூறுகிறார், “காதல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழும் டஜன்கணக்கான பிரபலங்களின் பெயரை பட்டியலிட முடியும். வித்யாசரண் சுக்லா, சந்திரசேகர் அவர்களும் இந்த விவகாரத்தில் பிரபலமானவர்களே. ஆளுநராக பதவி வகித்த நாராயணதத் திவாரி ஆளுநர் மாளிகையில் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டது பகிரங்கமான விவகாரம். லோஹியாவின் காதல் வாழ்க்கை பற்றியும் பொதுவெளியில் பேசப்பட்டது.”
இவர்களைத் தவிர வேறு சில தலைவர்களின் பெயரையும் கித்வாயி சுட்டிக்காட்டுகிறார் “காதலித்தவரை திருமணம் செய்வதற்காக காத்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த்ரஜித் குப்தா 62 வயதில்தான் திருமணம் செய்துகொண்டார் (காதலி சட்டப்பூர்வமான விவகாரத்து பெறும் வரையில்). ஆர்.கே. தவான், 74 வயதில் தனது திருமணத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார். தென்னிந்தியத் தலைவர்களும் காதல் விஷயத்தில் சோடை போனவர்கள் அல்ல.”
“திருமணம், காதல், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு போன்றவை நமது சமூகத்தில் காலம் காலமாக தொடர்வதுதான். அரசியல்வாதிகளும், அரசர்களும், தலைவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும், உணர்ச்சிகளும் உண்டு. ரோமியோ-ஜீலியட், அம்பிகாபதி-அமராவதி, தேவதாஸ்-பார்வதி என சோகக் காதல்களும் சரித்திரத்தின் காதல் ஏடுகளில் பிரபலமானவை. சில காதல்கள் ‘பகிரங்க காதலாக’ பேசப்பட்டால், சிலரது காதல்கள் ‘மெளனக் காதல்களாகவே’ தொடர்கிறது…”

COURTESY:bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here