காடுவெட்டி குரு: மகன், மருமகனுக்கு வெட்டு – நடந்தது என்ன?

0
1031

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் மற்றும் எதிர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் காடுவெட்டி கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை சேர்த்த மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவிற்கு கடந்த திங்கள்கிழமை அன்று இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு காடுவெட்டி குருவின் மகன் தரப்பினருக்கும், மற்றொரு எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் காடுவெட்டி குருவின் மகன் தரப்பில் மூவருக்கும், எதிர் தரப்பினர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கு அறிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்த சம்பவம் குறித்து அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, “காடுவெட்டி குருவின் மகனுக்கும் அதே பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்த்த வேறொரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலங்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனிடையே, காடுவெட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி அருகே காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இரு சக்கர வாகனத்தை சத்தமாக இயக்கியதாக கூறி எதிர் தரப்பினர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினரிடையியே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியுள்ளது.

பிறகு, காடுவெட்டி குருவின் மருமகனுக்கு ஆதரவாக, அவரது தரப்பில் இருந்து அண்ணன் மதன் மற்றும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களில், குருவின் மருமகன் மனோஜ் மற்றும் அவரது அண்ணன் மதன் இருவருக்கும் கத்தி வெட்டு ஏற்பட்டுள்ளது. குருவின் மகன் கனலரசனை உருட்டு கட்டையால் தாக்கியதில் கையில் அடிபட்டுள்ளது. மேலும், எதிர் தரப்பில் இருவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” எனக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ் உட்பட மூன்று நபர்கள் தற்போது தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எதிர் தரப்பினர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு தரப்பினரும் தனித்தனியே மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காடுவெட்டி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த காடுவெட்டி குரு?

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த ஜெ.குரு தனது அரசியல் பாதையில் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார்.

பின்னர் அவர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கத்தில் இணைந்தார். அதன்பின்னர் பாமகவில் செயற்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை அவர் வகித்துள்ளார்.

2001 மற்றும் 2011 ஆகிய இருமுறை அவர் முறையே ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் வெற்றிபெற்று இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற அணித் தலைவராக இவர் இருந்துள்ளார்.

பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும், 2003ஆம் ஆண்டு முதல் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் காடுவெட்டி குரு இருந்தார்.

அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரராகவும், பாமகவின் தீவிரமான செயல்வீரராகவும், அதேசமயம் சர்ச்சைக்குரிய அரசியல் பாதையில் பயணித்தவராகவும் குரு அறியப்பட்டார். மேலும் பாமகவின் நிறுவன தலைவரான ராமதாசுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இவர் பார்க்கப்பட்டார்.

அவதூறாக பேசினார், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இவரின் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பல வழக்குகள் பதியப்பட்டன.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி நடந்த பல போராட்டங்களில் பங்கேற்ற இவர், உடல்நலக்குறைவு காரணமாக 2018-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here