காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளை முறையாக விசாரிக்காததாலேயே இம்மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில் மரணமடைந்தவர், காஞ்சிபுரம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்பவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள கண்ணாடி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். ரோஜாவும் அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரும் காதலித்து வந்ததாகவும் நவம்பர் 22ஆம் தேதி காலையில் வேலைக்குச் செல்வதாகச் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையென்றும் ரோஜாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் ரோஜாவின் சடலம் அழுகிய நிலையில் தனியார் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ரோஜாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவரது பெற்றோர் ராஜேஷிடம் சென்று கேட்டபோது, “உன் பொண்ணு கொழுப்பெடுத்து செத்தா என்ன வந்து ஏன் கேட்குறீங்க” என்றும் “ஆமான்டா, உன் பொண்ணு என்னாலதான் செத்தா. உங்களால முடிஞ்சத பார்த்துக்கோ” பதிலளித்ததாக காவல்துறையிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா காணாமல் போன பிறகு, அவருடைய சகோதரர் ராஜேஷிற்கு போன் செய்து கேட்டபோது, ரோஜா தன்னுடன்தான் இருப்பதாகக் கூறியதாகவும் காவல்துறையிடம் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ரோஜாவின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, இறுதிச் சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. ஆதிக்க ஜாதி வகுப்பைச் சேர்ந்த ராஜேஷ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வழக்கு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரியிடம் கேட்டபோது, “இந்த வழக்கில் ஒருவர் வன்கொடுமை வழக்கின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றுமட்டும் தெரிவித்தார்.

“எங்களுடைய விசாரணையில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக செயல்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் இப்படிக் கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன” என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த, விழுப்புரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான து. ரவிக்குமார்.

D.RAVIKUMAR
து. ரவிக்குமார்

ரோஜா கடத்தப்பட்டு,பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அது குறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்களின்படி, தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் 646 கிராமங்களில் ஜாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் பொதுப் பாதைகளில் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பள்ளிக்கூடங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ரவிக்குமார் குற்றம்சாட்டுகிறார்.

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆராய 6 மாதங்களுக்கு ஒரு முறை முதல்வர் தலைமையில் மாநில அளவில் நடத்தப்பட வேண்டிய கூட்டமும் மாவட்ட அளவிலான கூட்டமும் நடத்தப்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறார் ரவிக்குமார்.

ஹைதராபாதில் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here